‘பிரின்ஸ்’ விமர்சனம்

தன் படங்களில் வணிக வெற்றிகளைத் தொடர்ந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படம் எப்படி? இதில் அதைத் தக்கவைப்பாரா ?

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ள படமிது.

தன் வாரிசுகள் காதல் திருமணம்தான் செய்துகொள்ள வேண்டும் என்று சத்யராஜ் எண்ணுகிறார். ஆனால் தன் வாரிசுகளின் காதலை எதிர்க்கிறார். அது எதனால் என்பதை நகைச்சுவைப் பின்னணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அனுதீப்.

அட கதை என்ன?

பாண்டிச்சேரி அருகில் இருக்கும் பிரிட்டிஷ் கிராமத்தில் வசிக்கிறார் நாயகி. அவருக்கும் தேவனக்கோட்டையைச் சேர்ந்த இளைஞனுக்கும் இடையே காதல் . இந்தக் காதலில் வெற்றி அடைந்தார்களா என்பதே பிரின்ஸ்.

இந்திய இளைஞன், பிரிட்டிஷ் பெண் இடையே நடக்கும் காதல் பற்றி ஏற்கெனவே சில படங்கள் வெளியாகி உள்ளன. அந்த படங்களில் இருந்து இந்தப் படத்தை வேறுபடுத்த இயக்குநர் அனுதீப் தன்னுடைய பாணியில் வித்தியாசமான நகைச்சுவைக் காட்சிகளைக் கையாள நினைத்திருக்கிறார்.

இந்த பிரின்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நகைச்சுவை காட்சிகள் அனைவரையும் சென்றடையுமா?இயக்குநர் அனுதீபின் நகைச்சுவை சிந்தனையும், சிவகார்த்திகேயனின் வணிக சிந்தனையும் பிரின்ஸ் திரைப்படத்தில் கலந்திருக்கிறது.

சில காட்சிகள் அருமையாக இருக்கின்றன. ஆனால் சில காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை. காமெடி செய்தே பெரிய ஸ்டாராக ஆன சிவகார்த்திகேயன் தான் படத்தின் பக்க பலமே.

நகைச்சுவை, காதல், ரொமான்ஸ், டைமிங் காமெடி என சிவகார்த்திகேயன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம்போல நடனத்திலும் அவர் கவர்ந்துள்ளார். உக்ரைன் நடிகை மரியாவும் தனது முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சத்யராஜ் பிரேம்ஜி என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களில் சரியாக நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் நண்பர்களாக வந்த சதீஷ், ப்ராங்க்ஸ்டர் ராகுல், பாரத் என மூவரும் சேர்ந்து செய்யும் கூத்துகள் சிரிப்பை வரவழைக்கின்றன. மேலும் நடிகர் சூரியும் ஆனந்தராஜும் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் பார்ப்பவர்களை சிரிக்க வைத்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு, பாடல் இசை நன்றாகவே அமைந்துள்ளன.

படம் சுவாரஸ்யமாக இருந்திருந்தால் அவை இன்னும் கவனிக்கப்பட்டிருக்கும்.
இயக்குநர் ஏதோ ஒரு இடத்தில் தடம்மாறியுள்ளார். ஏதோ ஒரு போதாமை உணர்வு. ஆனால் லாஜிக் பார்க்காமல் ரசிப்பவர்களுக்கு ஜாலி படம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் ,டான் படங்கள் வெற்றி வரிசையில் பிரின்ஸ் படம் அமையுமா? ஹாட்ரிக் அடிக்க முடியுமா? முடிவு ரசிகர்கள் கையில்!