‘மாமனிதன்’விமர்சனம்

எல்லா மனிதர்களும் மாமனிதர்கள் ஆவதில்லை.
ஒரு மனிதன் எப்போது, எப்படி மாமனிதன் ஆகிறான் என்பதை இயல்போடு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.

பண்ணைப்புரம் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் விஜய் சேதுபதி, மனைவி காயத்ரி மற்றும் மகன், மகளோடு வாழ்ந்து வருகிறார். தன்னை போல் இல்லாமல் தன் பிள்ளைகளாவது நன்றாகப் படிக்க வேண்டும் என்று எண்ணிய விஜய் சேதுபதி, தனது பிள்ளைகளை உயர்ரகப் பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடிவெடுக்கிறார். இதற்காக ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகிறார்.

ஆனால், அதுவே அவருக்கு மிகப்பெரிய பிரச்சினையில் கொண்டு போய் விடுகிறது. அதனால் ஊரை விட்டு ஓடுகிறார். அதனால் அவரது குடும்பம் பெரும் துயரத்துக்கு ஆளாக, ஊரை விட்டு ஓடிய விஜய் சேதுபதி திரும்ப வந்தாரா? அவரது பிள்ளைகளின் வாழ்க்கை என்ன ஆனது? என்பது தான் மீதிக்கதை.

அன்பு,பாசம், ஒழுக்கம் மிக்க குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நன்றாக நடித்திருக்கிறார். தனது பிள்ளைகளுடன் அன்புகாட்டுவது,நண்பர்களுடன் இயல்பாகப் பழகுவது, தன்னை தற்குறி என்றவரிடம், தான் ஒரு காமராஜர் போல, என்று வசனம் பேசுவது என அனைத்து இடங்களிலும் விஜய் சேதுபதியின் நடிப்பு சபாஷ் பெறும்படி இருக்கிறது.

காயத்ரி, இந்த படத்தில் வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் வருகிறார். சோகமோ சுகமோ இரண்டையும் ஒரே மாதிரி அளவுகோலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் நண்பராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் தனது பாத்திரத்தின் மூலம் பதிகிறார். ரியல் எஸ்டேட் அதிபராக நடித்திருக்கும் ஷாஜி, குழந்தை நட்சத்திரங்கள் என மற்ற பாத்திரங்களும் கொடுத்த வேலையைக் குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.

இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். ஆனால், பாடல்களும் பின்னணி இசையும் கேட்டால் இதை நம்பமுடியவில்லை.

எம்.சுகுமார் குறையின்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பிரச்சினை வரும் போது நாயகன் அதைச் சமாளித்து தனது குடும்பத்தைக் காப்பாற்றாமல், ஊரை விட்டு ஓடுவது போல் காட்டியிருப்பது கதையின் பலவீனம்..

தனக்குத் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து வருவதால் விஜய்சேதுபதியை இயக்குநர் மாமனிதன் என்கிறார் போலும்.மொத்தத்தில், இந்த ‘மாமனிதன், மனிதன்.