‘மாயோன்’ விமர்சனம்

வழக்கமான சினிமா பார்முலா கதைகளில் இருந்து மாறி உருவாகியிருக்கும் கதை இது. தொன்ம வாசனை அமானுஷ்ய சூழல் பாரம்பரிய பெருமை நவீன அலட்சியம் அனைத்தையும் கடந்து உருவாகி இருக்கின்றது மாயோன் படம்.

சரி மாயோன் கதை தான் என்ன?பழங்காலத்து கோவில் ஒன்றில் இருக்கும் புதையலைக் கொள்ளையடிக்க சமூக விரோத கும்பல் ஒன்று திட்டமிடுகிறது. அதற்காக அரசுத் தொல்லியல் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அவர்களுடைய திட்டம் பலித்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் நாயகன் சிபிராஜ், நாயகி தன்யா ரவிச்சந்திரன், முக்கியமான பாத்திரங்களில் நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ஹரிஷ் பெராடியா, பகவதி பெருமாள் என அனைவரும் தொல்பொருள் துறையில் பணியாற்றுபவர்களாக நடித்திருப்பதால் முழுப் படமும் அத்துறை பற்றி நேர்த்தியாக விவரம் கூறுகிறது. நமது பழங்கால கோவில்களின் பெருமைகளையும் விரிவாகச் சொல்கிறது.

தொல்லியல்துறையில் பணியாற்றும் இளைஞராக நடித்திருக்கும் சிபி ராஜ், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகள், வில்லத்தனம் மற்றும் எதிர்பாராத திருப்புமுனை சம்பவங்கள் என அனைத்திலும் திறமை வெளிப்பட நடித்திருக்கிறார்.

நாயகி தன்யா ரவிச்சந்திரன்,வழக்கம் போல மரத்தைச் சுற்றும் கதாநாயகியாக வந்து போகாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு பாத்திரமாக வருகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார், ஹரிஷ் பெராடியா ஆகியோர் அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். பகவதி பெருமாள் குணச்சித்திர வேடமேற்றுப் பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்.

ராம் பிரசாத்தின் ஒளிப்பதிவில் பழங்காலத்து கோவில்களும், கோவில் சார்ந்த இடங்களும் பிரம்மாண்டமாகவும் கம்பீரமாகவும் கண்முன் தெரிகின்றன.
கோவில் மற்றும் அதைச் சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்கள் மிரட்டுகின்றன.

இளையராஜாவின் இசையில் ”மாயோனே…” பாடல் மயங்க வைக்கிறது. பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பையும் கூட்டுகிறது.

படம் நம் பழம் பெருமை மற்றும் அதில் இருக்கும் பொக்கிஷங்கள் குறித்து விரிவாக பேசுவதோடு, நேர்த்தியான காட்சிகள் மூலம் படத்தைச் சுவையாகவும் நகர்த்திச் செல்கிறது திரைக்கதை.

அருண்மொழி மாணிக்கத்தின் திரைக்கதைக்கு பரபரப்பான காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருக்கும் என்.கிஷோர், தொல்லியல் துறை பற்றியும் அதன் பணிகள் பற்றியும் மிக நேர்த்தியாகவும் விரிவாகவும் சொல்லியிருக்கிறார்.

பழங்கால கோவில்களில் இருக்கும் பெருமைகள் மற்றும் அதை பாதுகாக்கும் வழிகளை வியக்கும் வகையில் சொல்லியிருக்கும் இயக்குநர், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் முழு படத்தையும் சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்கிறார்.

மொத்தத்தில் ‘மாயோன்’மயக்குவான்.