முழுப்படமும் ஓடும் ரயிலில் எடுக்கப்பட்ட ‘ சிக்கிக்கு சிக்கிக்கிச்சு ‘

sikkikichu11என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ்  என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சென்னையில் ஒரு நாள், சுற்றுலா போன்ற படங்களில் நடித்தவர்.  இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடிக்கிறார்.

மிருதுளா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடிக்கிறார்.   மற்றும் அஞ்சலிதேவி, ரோமியோபால், அருண், டெலிபோன்.வி.கருணாநிதி, அஸ்வின், குரு, அப்சல் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  என்.ராஜேஷ்குமார்

தயாரிப்பு  –   கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார்.

படம் பற்றி இயக்குநர் என்.ராஜேஷ்குமார் கூறும் போது,”  இது ஒரு ரொமான்டிக் பயணக் கதை! முழுக்க முழுக்க காதல்தான் மையக் கரு.. இதுவரை நிறைய படங்களில் ரயிலில் சில காட்சிகள் எடுத்திருப்பார்கள். ஆக்ஷன் அல்லது பாடல் காட்சிகள் எடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு முழுப் படத்தையும் ஓடும் ரயிலிலேயே படமாக்கியது இதுவே முதன் முறை !

சென்னை முதல் நாகர்கோவில் வரை செல்லும் ரயிலில் நடக்கும் சுவையான சம்பவங்களின் தொகுப்புத் தான் “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” சிதம்பர கிருஷ்ணன் என்ற கதாநாயகனின் பெயரை நண்பர்கள் செல்லமாக சிக்கி என்று அழைப்பதையே தலைப்பாக்கி  இருக்கிறோம். சென்னையிலிருந்து மாலையில் கிளம்பும் ரயில் நாகர்கோவில் போய் சேர ஆகும் இடைவெளியான ஒரு இரவில் நடக்கும் ரொமான்டிக் கதை தான் இது.

ஓடும் ரயிலில் படமாக்குவது என்பது எளிதான காரியமில்லை. ரயில் ஓடும்போது ஏற்படும் அதிர்வு படப்பிடிப்பிற்கு மிகப்பெரிய இடைஞ்சல் அதையும் மீறி ஒளிப்பதிவாளர் ரொம்பவும் சிரமப்பட்டு படமாக்கினார். படம் பார்க்கிற ரசிகனுக்கு புது மாதிரியான உணர்வை இந்தப்படம் ஏற்படுத்தும்.

நல்ல கதைக் கருவுடன் கமர்ஷியல் கலந்து திரைக்கதையாக்கி இருக்கிறேன். படத்தை பார்த்த ஸ்டுடியோ 9 சுரேஷ் அவர்கள் உடனே ஒகே சொல்லி உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

அதுவே எங்களது படக்குழுவுக்கு கிடைத்த வெற்றி ”என்கிறார் இயக்குநர்.