‘ராங்கி’ விமர்சனம்

அண்மையில் ‘பொன்னின் செல்வன்’ படத்தில் குந்தவையாக வந்து அனைவரின் மனதிலும் ராஜசிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் த்ரிஷா, முழு நீளக் கதை நாயகியாக நடித்துள்ள படம் தான் ‘ராங்கி’.
வீம்புக்காரி, வம்புக்காரி, சண்டைக்காரி, திமிர் பிடித்தவள் என்று பல பொருள்களில் மக்களிடம் ராங்கி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் படத்தில் த்ரிஷா ஏட்டிருக்கும் பாத்திரத்தின் பெயர் தையல்நாயகி என்றாலும் ராங்கி என்பது அவரைத்தான் குறிக்கிறது தன்னம்பிக்கை நிறைந்த யாருக்கும் அஞ்சாத ஒரு பாத்திரம்.

இப்படத்தின் கதையை முருகதாஸ் எழுதியுள்ளார் அதற்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் எம். சரவணன்.இப்படத்தை சர்வதேச அளவில் புகழ்பெற்ற லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பேஸ்புக்கில் இருந்து டெரரிஸ்ட் வரை சமூக ஊடகங்கள் தொடர்பு அதன் விளைவுகளைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.

இந்தப் படத்தில் த்ரிஷா ஒரு ரிப்போர்ட்டராக நடித்துள்ளார்.தனி ஒரு நபராக தனக்கென ஒரு இணையதளம் அமைத்துக் கொண்டு பல்வேறு சமூக விஷயங்களைப் பகிர்ந்து பரபரப்பை ஊட்டுவது அவரது வழக்கம்.

தனது அண்ணன் மகளுக்கு ஒருபோலி முகநூல் கணக்கால் பிரச்சினை வருகிறது.
அதைத் தீர்க்க களத்தில் இறங்கும் த்ரிஷா, சமூக ஊடகம் வழியாக விபரீத பயணம் மேற்கொள்கிறார். முகநூல் நண்பராக வந்து சேரும் தீவிரவாதி வரை தொடர்பு ஏற்படுகிறது. அதன் விளைவுகளால் வெளிநாட்டிற்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகிற த்ரிஷா சந்திக்கும் பிரச்சினைகள் முடிவுகள் பற்றித் தான் இந்தப் படம் பேசுகிறது.

எப்போதும் பாரதி கண்ட புதுமைப்பெண் போல நேர் கொண்ட பார்வை யாருக்கும் அஞ்சாத துணிவு என்று போய்க்கொண்டிருப்பவர் த்ரிஷா. எப்போதும் கனவு தேவதையாக வரும் அவர், இதில் விரைப்பும் மிடுக்கும் துடுக்கும் கண்களில் திமிரும் என, புதிய முகம் காட்டியிருக்கிறார் .படம் முழுக்க திரையில் ஆக்கிரமித்து ரசிகர்களைக் குஷிப் படுத்துகிறார்.இரண்டாவது பாதியில் கதை வெளிநாட்டுக்கு நகர்கிறது. பெயர் குறிப்பிடப்படாத அந்த நாடாக உஸ்பெகிஸ்தான் காட்டப்படுகிறது. அது கண்களுக்கு பிரமாண்ட விருந்தளிக்கின்றது. அங்கே தீவிரவாதிகளுக்கு இடையிலான சண்டைகளும் மோதல்களும் பரபரப்பு ஊட்டுகின்றன.

முதல் பாதி கலகலப்பு விறுவிறுப்பு என்று சென்றால் மறுபாதியில் திகில் சேர்ந்து கொண்டு பிரம்மாண்டமும் மிரட்டுகிறது.

படத்தில் த்ரிஷா தவிர பல முகங்கள் பிரபலமாகாதவர்கள்.வேறு யாருமே தெரிந்தவர்கள் இல்லையா என்று கேட்காத அளவிற்கு அனைத்தையும் ஈடு செய்கிற த்ரிஷா தன் தோற்றம் மூலம் அந்த இடத்தை நிரப்பிக் கொள்கிறார் .படத்தின் முதல் பாதி த்ரிஷா தரிசனம் என்றால் இரண்டாவது பாதி வெளிநாடு தரிசனம் என்று வணிக சினிமா ரசிகர்களுக்கும் இந்தப் படம் கொண்டாட்டமாகத் திருப்தி அளிக்கும்.

ஒளிப்பதிவாளர் சக்திவேலும் இசை அமைப்பாளர் சத்யாவும் இணைந்து பயணம் செய்து படத்திற்குப் பலம் சேர்த்துள்ளார்கள். ஆங்காங்கே தெறிக்கும் வசனங்களும் படத்திற்கு உரம் சேர்க்கின்றன.

உஸ்பெகிஸ்தானில் இடம்பெறும் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் திரையரங்கு அனுபவத்தை பரவசமாக அனுபவமாக மாற்றுகின்றன.

லைக்கா ப்ரொடக்ஷன் என்கிற பெரிய நிறுவனத்தால் தான் இந்த பிரம்மாண்ட தரிசனம் சாத்தியமாகி உள்ளது.இவ்வளவு செலவு செய்து படத்தை எடுத்தவர்கள் திரைக்கதையில் சின்ன சின்ன ஓட்டைகளை அடைத்து இருந்தால் படம் பல வகையிலும் பேசப்படும் ஒன்றாக அமைந்திருக்கும்.என்றாலும் நிச்சயமாக ராங்கி திரையில் புதிய அனுபவம் தான்.