‘றெக்க’ விமர்சனம்

rekka4விஜய் சேதுபதி, லட்சுமிமேனன், சதீஷ் ,ஹரீஷ் உத்தமன் நடித்துள்ளனர்.

யதார்த்த நாயகனாக வலம் வந்த விஜய் சேதுபதி அடிதடி மசாலா ஆக்ஷன் கதையில் நடித்துள்ள படம்.

கும்பகோணத்தில் ஜூனியர் வக்கீலாக இருக்கும் விஜய் சேதுபதி. ‘ஷாஜகான் ‘ விஜய்யைப் போல  காதலர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்து காதல் திருமணங்களை நடத்தி வைக்கிறார்.  இப்படி இவர் செய்யும் காதல் சேவை பகையையும் சேர்த்து வருகிறது..

அதேஊர் பிரபல ரவுடி ஹரீஷ் உத்தமன் திருமணம் செய்யவிருந்த பெண்ணைத் தூக்கி வந்து இப்படித் திருமணம் செய்து வைக்கிறார் விஜய் சேதுபதி. இது போதாதா ஹரீஷ் உத்தமன் விரோதம் வர?

காலம் வரும் எனக்  காத்திருந்த ஹரீஷுக்கு ஒரு வாய்ப்பு அமைகிறது. விஜய் சேதுபதியின் தங்கையின் திருமணத்திற்கு முதல் நாள் நண்பன் சதீஷின் டாஸ்மாக் கலாட்டாவால் விஜய் சேதுபதி ,ஹரீஷிடம் மாட்டிக் கொள்கிறார்.

உடனே   ஆட்களை அனுப்பி தங்கையின் திருமணத்தை நிறுத்த கலாட்டா செய்யப் போவதாக மிரட்டுகிறார் ஹரீஷ். இதைத் தவிர்க்க அவருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் விஜய் சேதுபதி.

ஹரீஷ் விதிக்கும் நிபந்தனைகளுக்கு  விஜய் சேதுபதி ஒப்புக் கொள்கிறார்.

அதில் ஒன்றாக அடுத்த இரண்டு மாதங்களில் திருமணமாகப் போகும் ஒரு  மதுரைப் பெண்ணைக் கடத்தி வந்து தன்னிடம் ஒப்படைக்கும்படி சொல்கிறார் ஹரீஷ்.  சரியென்று மதுரைக்கு பஸ் ஏறுகிறார் விஜய் சேதுபதி. அப்போதுதான் அப்பெண்ணின் தந்தை அமைச்சர் என்பது  தெரிகிறது.

அந்தப் பெண்தான் நாயகி லட்சுமி மேனன். அவரை அவருடைய கல்லூரிக்கே சென்று பார்த்து  ஒரு செல்பி எடுத்து அதனை வில்லன் ஹரீஷுக்கு அனுப்பி அத்தோடு  தப்பிக்கலாம் என்றுதான் திட்டம். ஆனால், பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல  லட்சுமி மேனன் “நானே கூட வர்றேன்…” என்று சொல்லி  தன் வீட்டில்  சொல்லிவிட்டே விஜய்சேதுபதியுடன்  வருகிறார்.

ஹரீஷ் உத்தமனுக்கும், கோவையில் இருக்கும் இன்னொரு வில்லனான கபீர் சிங்கிற்கும் ஏற்கெனவே விரோதம், பிரச்சினை. அந்த கபீர் சிங் திருமணம் செய்யப் போகும் பெண்தான் லட்சுமி மேனன்.

லட்சுமி மேனனைக் கடத்துவதன் மூலம், தன் எதிரியின்  திருமணத்தையும் நிறுத்தி விஜய் சேதுபதியைக் கபீரிமும் மாட்டிவிடலாம் என்று  திட்டமிடுகிறார் ஹரீஷ் .இந்தச் சிக்கலிலிருந்து விஜய் சேதுபதியும், லட்சுமி மேனனும் எப்படி விடுபட்டுத் தப்பித்தார்கள் என்பதுதான் ‘றெக்க’ படத்தின் மீதிக்கதை.

மதுரையில் 50 பேர் அரிவாளோடு சுற்றி வர.. லட்சுமி மேனனின் கையைப் பிடித்தபடியே ஒரு கையால் அனைவரையும் வீழ்த்திவிட்டு தப்பித்து வருகிறார் விஜய் சேதுபதி. இக்காட்சிக்கு லாஜிக் மறந்து போடலாம் அட்ரா சக்க! அட்ரா சக்க!

இத்தனை பலம் உள்ளவர் முந்தைய நாள் நள்ளிரவு கும்பகோணத்தில் ஹரீஷ் உத்தமன் கும்பலையும் இதேபோல் அடித்து உதைத்துப் போட்டு போயிருக்கலாமே..?

இதேபோல் லட்சுமி மேனன் கேரக்டர் சித்தரிப்பிலும் குழப்பம்.

மகள்தான் ஒரு மாதிரி என்று நினைத்தால், லட்சுமி மேனன் அம்மா அதைவிட மோசமான குழப்பம்.. மகளைத் தேடி கணவருடன் காரில் வந்து இறங்கும் அம்மா, “அடுத்த தடவை ஓடிப் போகும்போது சரியா ஓடுடி..” என்கிறார். ஐயோ!  ஐயோ!  !

அந்த ஸ்டைல், நடை, உடை, பாவனை.. சண்டை காட்சிகளில் இருக்கும் புதிய விறுவிறுப்பு. பாடல் காட்சிகளில் ஜிகு ஜிகு ஆடைகள்.. மிகைகிளப்பும் வசனங்கள்.. ஹீரோவை மேலும் சூப்பர் ஹீரோவாக்கும் திரைக்கதை.. என்று விஜய் சேதுபதிக்காகவே அமைக்கப்பட்ட கதை ,படம் போலவே தெரிகிறது.

ஆனாலும் கதையின் போக்கும் நம்பமுடியா காட்சிகளும்  விஜய் சேதுபதியை மாஸ்ஹீரோவாக்க எண்ணி டமாஸ் ஹீரோவாக்கப் பட்டது போலவே தெரிகிறது.

இடையிடையே சதீஷை பன்ச் டயலாக் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார். லட்சுமி மேனனிடம் எந்த காதல் பார்வையும் பார்க்காமலேயே இரண்டு டூயட்டுக்களை பாடுகிறார்.

படத்தில் மிக ஆறுதலான ஒரு விஷயம். இடையில் வரும் சிஜா ரோஸ்-கிஷோர் சம்பந்தப்பட்ட கிளைக் கதைதான். கிஷோரின் நடிப்பு ஒரு பக்கம் அசத்தல் என்றால் இன்னொரு பக்கம் கண்ணழகி சிஜா ரோஸ் விழிகளாலேயே நடித்திருக்கிறார்.

லட்சுமிக்கு உடல் பூசினாற் போலுள்ளது.. ஆனாலும் நடிப்பில்  குறை வைக்கவில்லை.

அப்பா கே.எஸ்.ரவிக்குமாருக்கும், மகன் விஜய்சேதுபதிக்கும் இடையில் இருக்கும் உறவு சபாஷ். தனிமையில் நண்பர்களை போல பேசிக் கொள்பவர்கள், பிறர் முன்னிலையில் அப்பா, மகனாக நடந்து கொள்வதும்.. மகனைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்து பேசும் அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமாரின் ஒவ்வொரு வசனமும் அட!

டி.இமானின் இசையில் ‘விர் விர் விர்று’ பாடல்  உள்பட   பாடல்கள் சிறப்புதான்.

விஜய்சேதுபதி  சில இடங்களில் அவர் யாரோ தைத்த சட்டையைப் போட்டுக் கொண்டது போல அந்நியமாகத் தெரிகிறார். பாத்திரப் படைப்பு அப்படி.

நம்பும்படியான யதார்த்த மான கதையில் நடிப்பதுதான் வித்தியாச முயற்சி. நம்ப முடியாத கதையில் நடிப்பது அல்ல.பறந்து பறந்து சண்டை போட யார் யாரோ இருக்கிறார்கள்.

யாரோ விஜய்சேதுபதிக்குத் தப்பாகப் பாடம் நடத்தியிருக்கிறார்கள்.

இருப்பதை தக்கவைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்  என்று விஜய்சேதுபதி இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

படத்தில் எனன எனனவோ  செய்து அசத்த முயன்றிருக்கிறார்கள்,
இருந்தாலும் ‘ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ.. பீஸ்.. ஆப் மைண்ட் ‘ என்பதுதான் படம் பார்ப்பவர்களின் மனக்குரலாக ஒலிக்கிறது.