‘லாபம் ‘ விமர்சனம்

ஏதாவது ஒரு சமூக கருத்தை எடுத்து திரைப்படம் ஆக்குவதில் தனக்கென முத்திரை பதித்த எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய இப்படம் எப்படி கவனிக்க வைக்கிறது என்று பார்க்கலாம்.

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் பக்கிரிசாமி. விவசாய சங்கத்தின் தலைவராகிறான். விவசாயிகளின் பஞ்சமி நிலங்களை மீட்கிறான்.கூட்டுப் பண்ணை திட்டத்தின் மூலம் விவசாயம் செய்கிறான்.லாபம் ஈட்ட முதலாளி வர்க்கத்தை எதிர்த்து போராடுகிறான்.உழைக்கும் வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் இடையேயுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரி செய்தானா என்பதே கதை.

இக்கதையில் பொதுவுடைமைக் கருத்துக்களோடு, நடப்பு அரசியலை கலந்து, அறிவியல்  வளர்ச்சியின் நன்மை தீமைகளை அலசி கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி. ஜனநாதன் .


சென்னை மாநகரமே ஒரு காலத்தில் பணப் பயிர் விளையும் விவசாய பூமியாக இருந்தது என்று ஆரம்பித்து, இன்று தின பயிர், வார பயிர், மாத பயிர், ஆண்டு பயிர் திட்டங்கள் என முப்போகம் தாண்டி 365 நாட்களுக்கும் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை விவசாயம் மூலம் ஏற்படுத்தி தர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் இயக்குநர்.
அவரின் இந்த திரைக்கனவு நிறைவேறும் தருணம் இந்த லாபம் வரமாக மதிக்கப்படும். அவ்வகையில் விவசாயம் லாபமா நஷ்டமா என்று கேள்வி கேட்டு அலசி சிந்திக்க வைக்கிற படம்.
இது பொழுதுபோக்கு படம் அல்ல பழுதுநீக்கும் படம்.


விஜய் சேதுபதி பக்கிரிசாமி கதாபாத்திரத்தில் ஒரு புரட்சியாளராக வாழ்ந்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த பாராட்டுகளையும் அள்ளுகிறார். விவசாயிகளை கரும்பு ஆலைக்கு அழைத்துச்சென்று  கரும்பிலிருந்து கிடைக்கும் வளங்களை விளக்கும் போது உண்மையில் விவசாயிகள் மட்டுமல்ல நாட்டு மக்களுக்கே விவசாய பொருட்களின் மதிப்பை உணர்த்துகிறார்.விஜய் சேதுபதி கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தைக் கைப்பற்றத் துடிப்பதைத் தன் நடிப்பின் மூலம் உணர்த்திய விதம் அருமை. விவசாய சங்கத்தின் தலைவனாய் விவசாயிகளை ஒருங்கிணைக்க வசனங்கள் பேசும் போதும்,  முதலாளிகளை எதிர்க்கும் தருணங்களிலும், தன்னுடைய நடிப்பின் மூலம் கவர்கிறார்.
கிளாரா கதாபாத்திரத்தில் புரட்சிக் கருத்துகளை பாட்டாக்கியும், தன்னுடைய காதலை வெளிப்படுத்தியும் வருகிற ஸ்ருதிஹாசன்  பாதியில் விடைபெறுகிறார். இருப்பினும்  அவரது பங்களிப்பு படத்திற்கு பலம் .
சுயநலமிக்க முதலாளிக்குணத்துடன்  ஜெகபதி பாபு நடித்திருக்கிறார். சாய் தன்ஷிகா வசனம் பேசாமலேயே தன் நடிப்பின் மூலம் வசீகரிக்கிறார். வின்சன்ட் அசோகன், சண்முகராஜா, இயக்குநர்.மாரிமுத்து, தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, ரமேஷ் திலக், கலையரசன் என அனைவரும் தங்கள் கதாபாத்திரம் உணர்ந்து பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் ராம்ஜி விவசாயிகளின் திரைப போராட்டத்தை நிஜப் போராட்டமாக பதிவு செய்திருக்கிறார். டி. இமானின் பாடல் இசையும்,  பின்னணியும் நன்று.
படம் பார்த்து முடிக்கும்போது விவசாயம் இழப்பு ஏற்படுத்தும் தொழிலல்ல. புரிந்து கொண்டால் லாபம் தரும்  என்று உணர வைக்கும்.