‘வாரிசு ‘விமர்சனம்

சில படங்களின் தலைப்பே கதையைச் சொல்லிவிடும் அப்படித்தான் இதுவும். சரத்குமாருக்குத் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், விஜய் என்று மூன்று பிள்ளைகள். முதல் இரண்டு பிள்ளைகளும் தந்தைக்கு உதவியாக வியாபாரத்தில் இருக்கிறார்கள். சுதந்திர மனப்பான்மையுடன் இருக்கும் விஜய் முரண்பாடுகளால் வீட்டை விட்டுவிட்டுப் பிரிகிறார் . சரத்தின் மனைவி ஜெயசுதா. விஜய் அம்மாவுடன் மட்டும் அவ்வப்போது போனில் தொடர்பில் இருந்து கொண்டிருப்பார். இப்படிப்பட்ட சூழலில் பெரிய வணிக சாம்ராஜ்யத்தின் அதிபரான சரத்குமாருக்கு புற்றுநோய் வருகிறது. அதனால் வீட்டை ஒரு சிறையாக நினைத்து வெளியேறிய விஜய் அம்மாவுக்காக மீண்டும் வீட்டுக்கு வருகிறார் .அங்கே வந்து அந்த வணிக சாம்ராஜ்யத்திற்கு எப்படி வாரிசாக உருவாகிறார் என்பதுதான் கதை.வம்சி பைடிபள்ளி இயக்கி உள்ளார்.

வாரிசு என்கிறபோது கதாநாயகன் விஜய் தான் வாரிசாக இருப்பார் என்று யாருமே யூகிக்க முடியும். அப்படித்தான் கதையும் செல்கிறது.

சாத்தின் தொழில் முறைப் போட்டியாளராக பிரகாஷ்ராஜ் வருகிறார். அவரது காய் நகர்த்தல்களும் அதை எப்படி சரத்குமார் சமாளிக்கிறார், அதன் பிறகு விஜய் எப்படி அவரை சமாளித்து வீழ்த்தி மேலே வருகிறார் என்பதுதான் கதை செல்லும் பாதை.

ஒரு கம்பீரமான பிசினஸ் மேனாக சரத்குமார் நடித்துள்ளார் . குடும்ப அழுத்தங்களை மனதில் வைத்துக் கொண்டு இருக்கும் மனைவியாக ஜெயசுதா வருகிறார்.

வீராப்பு விரைப்பு என்று இருக்கும் மூத்த மகன்களாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்தும் ஷாமும் வருகிறார்கள்.குடும்ப டாக்டராக பிரபு நடித்துள்ளார்.நாயகி ராஷ்மிகா மந்தனாவுக்கு பெரிதாக வேலை இல்லை.
எதிர்பாராத வரவாக எஸ் ஜே சூர்யா வருகிறார்.சரத் வீட்டு சமையல்காரராக வரும் யோகி பாபு சிரிக்க வைக்கிறார்.

அனைத்து நடிகர்களும் இயல்பாக இருக்கும் போது விஜய்யின் பாத்திரம் மட்டும் அவரது ரசிகர்களுக்காகச் சற்று மிகைப்படுத்திச் சித்தரிக்கப்பட்டுள்ளது.அடிக்கடி பஞ்ச் டயலாக் பேசுகிறார்.அல்லது பஞ்ச் என்று நினைத்துப் பேசுகிறார்.திரையில் அனைவரையும் ஓரம் கட்டி விட்டு விஜய் முன்னால் தெரிகிறார்.

படத்திற்கு ரஞ்சிதமே பாடல் தவிர மற்றவை கை கொடுக்க வில்லை. தமன் பின்னணியில் முடிந்ததைச் செய்திருக்கிறார்.

இதுவரை முழுக்க முழுக்க ஆக்சன் படத்தில் நடித்து வந்த விஜய், இதில் குடும்ப சென்டிமென்ட் கலந்து ரசிகர்களுக்கு வேறு விதமான படத்தைக் கொடுக்க வேண்டும் என முயற்சி செய்துள்ளார். படத்தின் பல காட்சிகளை யூகிக்க முடியும் அளவிற்கு உள்ளன .இது படத்தின் பலவீனம்.

ஆனால் விஜய் நடனம், நடை, உடை,பாவனை, சண்டைக் காட்சிகள் என்று அவரது ரசிகர்களுக்கு ஏற்றமாதிரி அவர்களது ரசனைக்குத் தீனி போட்டுள்ளார்.
அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை.

‘வாரிசு’ விஜய் ரசிகர்களுக்கான முழு நீளப் படம்.