‘இம்மார்ட்டல்’ திரைப்பட விமர்சனம்

ஜீவி  பிரகாஷ் குமார், கயாடு லோகர், டி எம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மகார்ஜன்,  சுனிதா ஸ்ரேஸ்தா நடித்துள்ளனர்.

மாரியப்பன் சின்னா இயக்கியுள்ளார்.அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ராஜேஷ் எம் படத்தொகுப்பு  செய்துள்ளார் .சிவசங்கர் கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார்.

ஏகே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ளார்.சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியிட்டுள்ளது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கதை தொடங்குகிறது. நாகரிகம் எட்டிப் பார்க்காத காலத்தில் இனம் புரியாத மொழி பேசிக் கொண்டிருக்கிற அந்தக் காட்டுப் பகுதியில் பத்தரா என்கிற ஒரு பெண்ணுக்குப் பிரசவம் நடக்கிறது . கொட்டும் மழையில் மருத்துவக்கிழவி பிரசவம் பார்க்கிறாள். பிறந்த குழந்தையைப் பராத்தவள் அதிர்கிறாள்.இது மனிதப் பிறவி போல் இல்லை என்று அதைத் தூக்கிக் கணவரிடம் கொடுத்து இதைக் கொன்று விடு . என்று கூறுகிறாள். தாயின் பரிதவிப்பை மீறி கணவன் அதைக் கொண்டு போய் ஒரு காட்டில் ஒரு பாறைக்கல்லில் வைத்துவிடுகிறான். அருகில் ஒரு ஓநாய் வந்து ஊளை விடுகிறது. அதற்குப் பிறகு படத்தின் தலைப்பு வருகிறது ‘இம்மார்ட்டல்’.

மாறனின் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் நாயகன் ஜீவி பிரகாஷ் வேலை பார்க்கிறார். ஜீவி  குடியிருந்த வீட்டுக்காரர் வீட்டைக் காலி பண்ணச் சொன்னதால் புதிய வீடு தேடுகிறார். அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது. ஐந்தாயிரம் ரூபாய்க்கு நவீன வசதி கொண்ட தனது தனது அறையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றும்  தன்னுடன் தங்கிக் கொள்ளலாம் என்றும் அந்தப் பெண் கூறுகிறார்.கொஞ்சும் குரலில் மயங்கி
குறைவான வாடகை என்றதும் சென்னை ஒரகடம் பகுதிக்குச் செல்கிறார் பிரகாஷ் குமார். அங்கே ஒரு அழகான பெண் இருக்கிறார்.அவர்தான் கயாடு லோஹர். பார்த்தவுடனே மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன.
அசரடிக்கும் அழகு கொண்ட அந்தப் பெண் மீது பிரகாஷ் குமாருக்கு என்ன கோபமா வரும்? காதல் வருகிறது.அவரும் தனது வனப்பைக் காட்டி நெருங்கி வருகிறார்.இருவரும் நெருங்கும் நேரத்தில் திடீரென்று ஒரு அகோரமான ஆண் வெளிப்படுகிறார். பிறகு தான் தெரிகிறது அவ்வீட்டில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று. அந்த ஆணைத் தனது தாத்தா என்று கூறுகிறார் கயாடு. ஆனால் ஜீவி நம்பவில்லை ஒரு கட்டத்தில் அவர் இவரைப் போல் இங்கே வந்து சிக்கிக் கொண்டவர் என்று தெரிகிறது. அவர் தனது கதையைக் கூறுகிறார்.பயந்து போன ஜீவி அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். ஒரு திறப்பைத் திறந்து போய்  ரகசிய அறையில் பார்க்கும்போது சிதைந்து போன மனித உறுப்புகள் கிடக்கின்றன.நிறைய அமானுஷ்யமான விஷயங்கள் புலப்படுகின்றன.இப்படிப்பட்ட சூழலில் ஜீவியுடன் இணைந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார் கயாடு.அவருக்குள் ஒளிந்துள்ள தீய சக்தியை,மிருக வடிவில் உள்ள காட்டேரியைப் புரிந்து கொண்ட ஜீவி தப்பித்து ஓட நினைக்கிறார். எவ்வளவு  தாக்கினாலும் சொல்ல முடியாத அசுர பலத்துடன் இருக்கிறார் கயாடு.எனவே முடியாது தவிக்கிறார் ஜீவி..இந்தக் கதையின் முடிவு என்ன என்பதுதான் 131.18  நிமிடங்கள் கொண்ட   ‘இம்மார்ட்டல்’ படத்தின் மீதிக்கதை.
இம்மார்ட்டல் என்றாலே அழிவில்லாதது என்று பெயர். சாகாவரம் பெற்ற அந்த வினோதப் பிறவியிலிருந்து அவர் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் இந்த’இம்மார்ட்டல்’ படம் செல்கிற கதையின் பயணம்.இந்தப் படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடுத்தர வர்க்கத்து வாலிபனாக இருக்கிறார். பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ள தாய்மாமா லொள்ளு சபா மாறனிடம் வேலை பார்க்கிறார்.இன்னொரு வேலைக்காரர் ஆதித்யா கதிர் அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் கலகலப்பு நிறைந்த நகைச்சுவைத் தோரணங்கள்.

ஜீவி பிரகாஷ் குமார், கயா டு லோகர் வீட்டுக்கு சென்ற பிறகு வசனங்கள் அதிகம் இல்லை. காட்சிகள் தான் விரிகின்றன.வசனங்கள் இல்லாமலேயே அச்சத்தை பார்வையாளர்களுக்குக் கடத்தி உள்ளார் இயக்குநர்.

தனது வசீகரமான தோற்றத்தின் மூலம் ரசிகர்களை ஈர்கும் கயாடு, இதில் அமானுஷ்ய சக்தி கொண்டவராக வருகிறார். கயாடுவின் அழகில் லயிக்கும் கண்கள் பிறகு பயத்தில் சுருள்கின்றன.தோற்றத்தின் மூலம் முதல் பாதியில் பார்வையாளர்களை ஈர்த்தவர் அமானுஷ்ய சக்தியாக மாறுகிறார். அப்போது அந்த ஈர்ப்பு குறைந்து பயம் வந்து விடுகிறது .அவர் ஓர் ஏலியனாக இருந்தாலும் அந்த வசீகரம் படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது.

கயாடுவின் அழகு பிம்பத்தை நம்பியே இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது .அதையும் அவர் சரியாக வெளிப்படுத்தி ஈடு கொடுத்து இருக்கிறார் .

மிகக் குறைந்த நிகழிடங்களிலேயே இந்தக் கதை நகர்ந்தாலும் அந்தக்குறை தெரியாத அளவிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன்.

ஒரு திகில் படம் என்கிற போது அதன் வீரியத்தைக் குறைக்காமல் வேகத்தையும் விறுவிறுப்பையும் பார்வையாளர்களுக்குக் கடத்தும் வகையில் தனது பின்னணி இசையால் தூக்கி நிறுத்தி உள்ளார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.அந்த வகையில் வித்தியாசமான ஒலிகளைக் கொண்டு அச்சத்தின் சதவீதத்தை அதிகப்படுத்தி உள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

இதில் வரும் அந்த ஏலியன் விசித்திர விலங்கு தோற்றத்தில் துல்லியம் தெரியும் வகையில் நேர்த்தியான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அது வரும் காட்சிகளை அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் பயமுறுத்தி படத்தின் எடை கூடி இருக்கும்.

மொத்தத்தில் இந்தப் படம் ஒரு காதல் கதை போல் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் காலத்தின் கதையைக் கூறி சாகாவரம் பெற்ற ஒரு பெண்ணைக்காட்டிப் பயமுறுத்தி ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.

மொத்தத்தில் ‘இம்மார்ட்டல்’  ஏமாற்றாது.