‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்பட விமர்சனம்

விளையாட்டுகளில் அரசியல் ஜாதி அதிகார வர்க்கத்தின் தலையீடு போன்றவற்றை மையப்படுத்தி நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன. சதுரங்க விளையாட்டில் வர்க்க பேதத்தை மையப்படுத்தி வந்துள்ள படம் தான் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ .

இப்படத்தில் அபர்ணதி முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்துள்ளார்.வெற்றிச் செழியன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அபர்ணதி நகரத்தில் தெருக்களை சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளராக பணி செய்கிறார். அவரது கணவரும் இதே வேலையைத்தான் செய்து வருகிறார். அபர்ணதி செஸ் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர். அதற்கான பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெறுகிறார். இது பல மேலாதிக்க ஜாதி உணர்வு கொண்டவர்களுக்குப் பிடிக்கவில்லை.ஆனாலும் தடைகளைத் தாண்டி முன்னேறி வருகிறார். சதுரங்க விளையாட்டு அமைப்பு நிர்வாகிகளில் முதன்மையாக இருக்கும் பணக்காரர் சுரேஷ் மேனனின் மகளுடன் ஒரு கட்டத்தில் அபர்ணதி மோத வேண்டிய சூழல் வருகிறது.அப்போது சுரேஷ் மேனன் இவர்கள் எல்லாம் தெரு பெருக்குபவர்கள் என்று அவமானப்படுத்துகிறார்.அப்போது ஆவேசமான அபர்ணதி, ஒரு சவால் விடுகிறார்.”இந்த போட்டியில் நான் ஜெயித்து விட்டால் நீ என் தெருவிற்கு வந்து சுத்தம் செய்ய வேண்டும். உன் மகள் ஜெயித்து விட்டால் நான் உன் வீட்டிற்கு வந்து உன் வீட்டைச் சுத்தப்படுத்துவேன்” என்று சவால் விடுகிறார்.இந்தச் சவாலை சுரேஷ் மேனன் ஏற்கிறார். போட்டியில் அபர்ணதி வென்று விடுகிறார். சுரேஷ் மேனன் வேறு வழியில்லாமல் அபர்ணதியின் பகுதிக்கு வந்து சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்கிறார்.ஆனாலும் அவரது ஆணவம் சீண்டப்படுகிறது. அவமானம் தாங்காமல் சுரேஷ் மேனன் அபர்ணதியின் கணவரைக் கொன்று விடுகிறார். மேலும் இனி நீ செஸ் விளையாட்டு விளையாடக் கூடாது என்று மிரட்டுகிறார். அப்படிப்பட்ட அபர்ணதியின் மகன் பத்து வயதுச் சிறுவன் தாயைப் போலவே விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறான்.அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தலுக்குப் பயந்து ரகசியமாக விளையாட வைக்கிறார்.ஒரு கட்டத்தில் சுரேஷ் மேனனுக்கு அபர்ணதியின் மகன் தான் இப்படி விளையாடுவது என்று தெரிகிறது.தன் நிறுவனத்திற்காக ஆட அழைக்கிறார். அபர்ணதி அதை மறுக்கிறார்.அந்தச் சிறுவனையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். முடிவு என்ன என்பதுதான் தி கிராண்ட் மாஸ்டர் படத்தின் மீதிக்கதை.

பொதுவாக இது மாதிரி விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்களில் கதாநாயகன் தான் தடைகளை மீறி மேலே வந்து வெற்றி பெறுவது போல் இருக்கும். இதில் கதாநாயகி எப்படி வெற்றி பெறுகிறார் என்பது காட்டப்பட்டுள்ளது.அந்த வகையில் பெண் இனத்திற்கு முன்னுரிமை கொடுத்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

எடுத்துக்கொண்ட கதையை இயல்பு மீறாமல் படமாக்கி இருந்தால் படம் பார்ப்பவர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் நாடகத்தனங்களும் மிகையான காட்சிகளும் பிரச்சார வசனங்களும் யூகிக்கவைக்கக்கூடிய காட்சிகளும் படத்தை ஒரு நாடகமாகக் கண்முன் கொண்டு வந்து விடுகிறது.அதைக் கடந்து பார்க்கும் போது படத்தின் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

சுரேஷ் மேனனின் சதியை அபர்ணதி அறிவுபூர்வமாக எதிர்கொள்வது ,வெல்வது என்பது ரசிக்க வைக்கிறது.படத்தின் முடிவு பார்ப்பவர்களுக்குப் புதிதாக தோன்றும்.படத்தின் இரண்டாம் பாதியில் வரும் பல காட்சிகள் கவனிக்க வைக்கின்றன.
தூய்மை பணியாளரின் வலியையும் சமூகப் புறக்கணிப்பையும் படம் பேசி உள்ளது.படத்தில் பாத்திரத்தின் தன்மை மீறி பல காட்சிகள் உள்ளன.உதாரணத்திற்கு ஒன்று என்றால் ,அபர்ணதி இவ்வளவு விளையாட்டு தெரிந்த ஒரு பெண்ணாக இருக்கும் போது அவருடைய மகனை பள்ளியில் அவமானப்படுத்துவது என்பது நம்பும்படியாக இல்லை. மிகவும் மிகையாக உள்ளது. சுரேஷ் மேனன் சாக்கடை அள்ளுவது அழுத்தமுள்ள காட்சி. நந்தனின் அம்மா யார் என்று தெரியாமல் இன்னொரு பெண்ணிடம் சுரேஷ் மேனனின் ஆட்கள் அணுகுவது நம்பும்படி இல்லை. படம் எதைப் பற்றிப் பேசப் போகிறது என்று டைட்டில் பாடலிலேயே தெரிந்துவிடுகிறது. அவ்வளவு வெளிப்படையாகக் கூறி படத்தின் மர்மத்தை உடைத்து இருக்க வேண்டாம்.

படத்தின் வெள்ளையம்மாள் கேரக்டரில் நடித்திருக்கும் அபர்ணதி முழுப் படத்தினையும் தனது தோளில் சுமந்து இருக்கிறார்.சுரேஷ் மேனனும் குறை இல்லாத நடிப்பை வழங்கி உள்ளார். நந்தனாக நடித்த சிறுவனும் அலட்டிக் கொள்ளாமலேயே பார்ப்பவர் மனதில் தங்கி விடுகிறான்.
இயக்குநரின் பார்வையில் ஒளிப்பதிவும் இசையும் இரு கரம் கோர்த்து பயணத்துள்ளன.
மொத்தத்தில் விளையாட்டில் ஜாதியக் குறுக்கீடுகளை மேட்டிய ஆணவத்தை அதிகார வர்க்கத்தின் ஆதிக்க மனோபாவத்தைப் பற்றிப் பேசுகிற ஒரு படம் எனலாம்.