‘லெனின் பாண்டியன்’ திரைப்பட விமர்சனம்

கங்கை அமரன் ,ரோஜா, தர்ஷன் கணேசன், ஷ்ரித்தாராவ் ,ஜார்ஜ் மரியான் ,ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன்,சுப்பு பஞ்சு,சரவண சுப்பையா நடித்துள்ளனர்.எழுதி இயக்கியிருக்கிறார் டிடி பாலச்சந்திரன். இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு: ஏ எம் எட்வின் சகாய்,கலை இயக்கம்: அத்தூரி ஜெயக்குமார்.

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இந்தப் படத்தை செந்தில் தியாகராஜன் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.

தர்ஷன் அதாவது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் போலீஸ்காரர் .அவர் தந்தை பணியில் இருந்த போது இறந்ததால் கருணை அடிப்படையில் அந்த வேலை அவருக்குக் கிடைத்திருக்கிறது.அவர் வேலையில் இருக்கும் காவல் நிலையத்தில் அவர் நாள்தோறும் அவமதிக்கப்படுகிறார். கருணை அடிப்படையில் அவர் வேலைக்கு வந்ததைத் தினமும் குத்திக் காட்டுகிறார்கள்.அவரை ஒரு வேலையாள் போல நடத்தி வேலையும் வாங்குகிறார்கள். பொறுமையாக அனைத்தையும் சகித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஷ்ரித்தாராவ் அவருக்கு நேர் எதிர் சிந்தனை கொண்டவர், துடுக்குத் தனமானவர் தைரியமானவர். ஒரு நாள் அப்படி தர்ஷனை இன்ஸ்பெக்டர் சரவண சுப்பையா ஒரு சந்தையில் அவமானப்படுத்துவதைப் பார்த்து எதிர்த்துக் கேள்வி கேட்கிறார் ஷ்ரித்தா. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஒரு கிராமத்தில் கங்கை அமரனும் ரோஜாவும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள் .இருவருக்கு இடையே வயது வித்தியாசம் நிறைய இருந்தாலும் அவர்களுக்குள் அன்பு நிலவுகிறது .அப்படிப்பட்ட கங்கை அமரனின் ஆடு மணல் குவாரி லாரி அடித்து இறந்து விடுகிறது. அப்போது அதற்கு நீதி கேட்டு காவல் நிலையம் செல்கிறார். அங்கே அவர் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார். மணல் குவாரி மாபியாக்கள் அதிகார வர்க்கத்துடன் கூட்டு சேர்ந்து ஆட்டம் போடுகிறார்கள்.மாபியாக்கள் மீது ஒரு கொலை வழக்கு வருகிறது. இந்த வழக்கில் கங்கை அமரன் ஒரு சாட்சியாக இருக்கிறார். அதனால் அவரைக் கொலை செய்ய குவாரி கும்பல் முடிவு செய்கிறார்கள்.அப்போது அவர் தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்க நீதிமன்றம் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க போலீஸ்காரர் தர்ஷனை அனுப்பி வைக்க ஆணையிடுகிறது.பாதுகாப்பு பணிக்கு சென்ற தர்ஷன் அங்கே அந்தக் குடும்பத்தில் ஒருவராக மாறுகிறார்.கங்கை அமரனைக் கொலை செய்ய மணல் மாபியா கும்பல் தர்ஷனை உதவக் கேட்கிறது.அவர் அதற்கு மறுக்கிறார். இப்படிச் செல்கிற கதையின் முடிவு என்ன என்பதுதான் ‘லெனின்பாண்டியன்’ படத்தின் மீதிக்கதை.பரபரப்போடும் பதை பதைப் போடும் செல்கிற இந்தக் கதையை ஒரு முதல் பட இயக்குநர் டிடி பாலச்சந்திரன் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார்.

கிராமியப் படங்கள் வந்து வெற்றி பெற்று  வெகு நாளாகிவிட்டது போல் ஒரு தோற்றமுள்ளது. கிராமியப் படங்களை யாரும் பார்ப்பதில்லை வரவேற்பு இல்லை என்று பரவலாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்ட சூழலில் அண்மையில் வந்த மண்டாடி பெரிய வெற்றி பெற்றுள்ளது.இப்போது ஒருகிராமத்து மண் மணத்தோடு டிடி பாலச்சந்திரன் என்கிற அறிமுக இயக்குநர் பண்ணைப்புரத்து ராசாக்கள் துணையோடு திரைக்களத்திற்கு வந்திருக்கிறார்.

கதையை மையப்படுத்திய கதாபாத்திரங்கள் என்ற வழியில் அவர் பயணம் செய்திருக்கிறார். அப்படியே உயிரோட்டமான கதாபாத்திரங்களை எழுதி உருவாக்கி இருக்கிறார்.அவர் எழுதி இருக்கிற அந்த ஜார்ஜ் மரியான் நடித்திருக்கிற ஒரு நீதிபதி பாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில அப்படி ஒரு நீதிபதி பாத்திரம் படைக்கப்பட்டதே இல்லை.அதை ஜார்ஜ் மரியான் மிக பிரமாதமா நடிக்கவும் செய்துள்ளார்.

படத்தில் துரைராசு பாத்திரத்தில் வரும் கங்கைமரன் நடிப்பு முக்கியமானது என்று கூறத்தக்க வகையில் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவ்வளவு தத்ரூபமான நடிப்பு . அவருடைய மனைவியாக வரக்கூடிய ரோஜாவும் மிகவும் பாந்தமாக மிகப் பிரமாதமாக நடித்துள்ளார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்து வாரிசாக வந்துள்ள தர்ஷன் கணேசனுக்கு இதுதான் முதல் படம். கதாநாயக பிம்பத்தை ஏற்றிக் கொள்ளாமல் சிறப்பாக இயல்பாக நடித்துள்ளார்.வில்லத்தனத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சரவண சுப்பையா போஸ் வெங்கட் இருவரும் கண்ணில் வெறுப்பு நெருப்பு பறக்க நடித்துமிரட்டி இருக்கிறார்கள்.இது போக வந்து மணல் மாபியாக்களாக வந்து ஆடுகளம் நரேன்,மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் என நடிப்பில் குறை வைக்காமல் செய்துள்ளார்கள்.

ஒரு சாமானியனின் குரலை அவனது உரிமையை உரத்து சபையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் இந்தப் படம் மணல் மாபியாக்களின், அதிகார வர்க்கத்தின் கொட்டத்தையும் ஆட்டத்தையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.

அந்த அசல் கிராமத்து மணத்தை இளையராஜாவின் இசை கொண்டு வருகிறது.இந்த படத்தினுடைய ஒளிப்பதிவு, கலை இயக்கம் படத்தொகுப்பு அனைத்துமே சரிவிகிதமாகப் படத்தில் செயல்பட்டுச் செழுமை சேர்த்துள்ளன.இன்னும் எதிர்பாரா ஆச்சரியங்களைக் கொண்டுள்ளது இப்படம்.

’லெனின் பாண்டியன்’ நிச்சயமாகச் சராசரிப் படங்களை தாண்டியவன், எனவே வெல்ல வேண்டியவன்.