‘ஈவில் டெட் பர்ன்’ திரை விமர்சனம்

சொஹைலா யாக்கூப் ,டாண்டி ரைட் ஹண்டர் டூ ஹான், லூசியான் புக்கானன் ,ஏரல் ஷாண்ட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.செபாஸ்டியன் வானிசெக் இயக்கி இருக்கிறார். பிலிப் லொசானா ஒளிப்பதிவு செய்துள்ளார்.இசை – டபுள் டேஞ்சர்.

ஹாலிவுட் படங்களில் ரத்தத்தைச் சூடேற்றும் ரத்தம் தெறிக்கும் வன்முறை கொண்ட படங்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.அவர்களைக் குறிவைத்து அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் தான் ‘ஈவில் டெட்’ வரிசைப் படங்கள் வந்து வெற்றி பெற்றன .அந்த வரிசையில் ஆறாவது பாகமாக வந்திருப்பது தான் ‘ஈவில் டெட் பர்ன்’.இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டில் வெளியான ‘ஈவில் டெட் ரைஸ்’ படத்தின் ரசிக வரவேற்பைத் தொடர்ந்து,இப்படம் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு படத்திலும் கதை தொடங்கி நகர்ந்து வளர்ந்து ஒரு கட்டத்துக்கு மேல் தான் திகில் சம்பவங்கள் தொடங்கும். ஆனால் இந்தப் படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே திகில் காட்சிகள் பயமுறுத்த ஆரம்பிக்கின்றன. எட்கர் -சூசன் குடும்பத்தில் ஒரு மரணம் விழுகிறது. அதற்கான இறுதிக் காரியங்கள் பற்றி அந்த குடும்பம் ஓரிடத்தில் ஒன்று கூடி ஆலோசிக்கிறது .ஆனால் அதற்குப் பிறகு நடக்கப் போகும் இறுதிக் காரியங்கள் யார் யாருக்கு என்று தெரியாத வகையில் அந்தக் குடும்பத்தில் அமானுஷ்ய சக்தியின் ஆட்டம் ஆரம்பிக்கிறது.ஏராளமான துர்சம்பவங்கள் நடக்கின்றன .அவை என்ன என்பதை இரத்தம் தெறிக்கச் சொல்வது தான் இந்தப் படம்.

படத்தின் பிரதானமாக ஆறே கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு இந்த முழு நீள ஹாரர் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் செபாஸ்டியன் வானிசெக். கணவன் மனைவி மகன்கள் மருமகள்கள் தாத்தா என்கிற குடும்ப உறுப்பினர்களைக் கொண்டே இந்த ஆட்டத்தை ஆடியிருக்கிறார் இயக்குநர் .

முதல் பாதி வரை நகரும் நகரும் காட்சிகள் திக் திக் திடுக் தருணங்கள் தான்.குறிப்பாக சாப்பாட்டு மேசையில் குடும்பத்தினர் அமர்ந்து பேசும் காட்சி இருக்கையின் நுனிக்கு நம்மை இழுத்துச் செல்லும் காட்சி. பெரும்பாலும் படங்களில் ஆங்காங்கே தான் இது மாதிரியான காட்சிகள் வரும் ஆனால் இதில் தொடர்ச்சியாகவே அப்படிப்பட்ட காட்சிகளாகவே வருகின்றன. வெட்டு குத்து வக்கிரம் ரத்தம் அருவருப்பு அதிர்ச்சி என்று வரிசை கட்டும் காட்சிகள் வெவ்வேறு வித உணர்வுகள் மூலம் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன.

நடிப்புக் கலைஞர்களைப் பொறுத்தவரை கதாநாயகி சௌஹைலா அடித்து ஆடி அத களம் செய்திருக்கிறார்.அச்சத்தில் உறையும் காட்சிகளில் திருப்பித் தாக்கும் காட்சிகளில் அவர் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.படம் முழுக்க நம்மை முதியோர் பாத்திரத்தில் வந்து கலங்கடிப்பவர்
எர்ரோல் ஷான்ட் தான். எப்போது யாரைக் கொல்வாரோ என்ற பதற்றத்தை ஊட்டுகிறார்.உச்சகட்ட காட்சிகளில் அவர் வெல்ல முடியாத சக்தியோடு வருவது படம் பார்ப்பவர்களை அலறவிடும்.அதேபோல ஹண்டர் டுஹான்  படும் பாடும் பரிதவிப்பும் படம் பார்ப்பவர்களின் அனுதாபத்தை அள்ளும்.

இந்த ஈவில் டெட் வரிசையின் கதை என்பது தீய சக்திகளால்அவிழ்த்து விடப்பட்ட பேய் சக்திகளுக்கு எதிராக அப்பாவிக் கதாபாத்திரங்கள் நடத்தும் போராட்டம் என்பதை அடிநாதமாகக்கொண்டு இருக்கும்.இது படம் பார்ப்பவர்களை உணர்ச்சி மயத்தில் அழுத்தும் ஒரு சூத்திரமாகும்.அந்த சட்டகத்தில் தான் இந்தத் திரைப்படமும் உருவாகி இருக்கிறது என்றாலும் இந்தப் படத்தில் இடம்பெறும் காட்சிகளும் அதில் தெறிக்கும் வன்முறையும் படம் பார்ப்பவர்களைக் கதி கலங்க வைக்கும்.

படத்தின் கண்ணுக்குத் தெரியாத கதாநாயகனாக படத்தின் ஒளிப்பதி வாளர் பிலிப் லசானோ பணியாற்றி இருக்கிறார்.குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பாக வீட்டுக்குள்ளேயே நடக்கும் பல காட்சிகளை தனது மிரட்டலான கோணங்களின் மூலமும் கேமராவின் வேகத்தின் மூலமும்  அச்சமூட்டும் ஒளி அமைப்பு மூலமும் நம்மைக் கூர் கவனத்திற்குள் கொண்டு சென்று காட்சிகளின் மூலம் நம்மை ஈர்த்துக் கொள்கிறார்  .அதேபோல் இசையும் படத்தின் பயமுறுத்தும் தீவிரத்தை கூட்டிக் கொண்டே செல்கிறது சேவியர் காப்ஸ் , டபுள் டேஞ்சர் உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர். படத்தின் ஒலிஅமைப்பு அச்சத்தின் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது .

இந்தப் படத்தை  ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் & தெலுங்கு மொழிகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியாவெளியிட்டுள்ளது.

 

 

— .