‘இதயம் முரளி’ திரைப்பட விமர்சனம்

அதர்வா முரளி, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நடராஜ், தமன் எஸ் ,நிகாரிக்கா, சின்னி ஜெயந்த்,ரக்சன், டிராவிட் ,ஏஞ்சலின் அஞ்சுகுரியன், சுதாகர் , யாஷாஸ்ரீ ,ஜோனிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார் .எஸ் தமன் இசையமைத்துள்ளார் .மனோஜ் பரமஹம்சா மற்றும் சி ஹெச் சாய் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். எம் ஆர் கார்த்திக் ராஜ்குமார் பட வடிவமைப்பு செய்துள்ளார் .வசனங்களை ரமண கிரிவாசன் எழுதியுள்ளார். பாடல்கள் விவேக் எழுதியுள்ளார்.

தனது தாழ்வுணர்ச்சியாலும் தயக்கத்தாலும் தனது காதலைச் சொல்ல முடியாத பாத்திரத்தில் முரளி நடித்திருந்த ‘ இதயம்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும் .அந்த இதயம் முரளி என்கிற பாத்திரம் சமுதாயத்தில் தயக்க உணர்வு கொண்டவர்களுக்கு ‘நேரம் கூடி வந்த வேளை நெஞ்சை மூடி வைக்கும் கோழை’களுக்கு ஒரு குறியீடாக இன்றும் பேசப்பட்டு வருகிறது .அந்தப் பெயரில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது .

படம் தொடங்கியதும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக அந்தப் பகுதியே பரபரப்பாக இருக்கிறது.அதர்வாவுக்கு தான் அந்தத் திருமணம்.பெற்றோரை இழந்த அதர்வாவை அவரது தாய் மாமன் நட்டி தான் பிள்ளை போல் வளர்க்கிறார். அதர்வாவின் திருமணத்திற்கான வேலைகளைத் தலைமேல் போட்டுக் கொண்டு அவர்தான் செய்து வருகிறார்.அடுத்த நாள் திருமணம் என்கிற பரபரப்பான சூழ்நிலையில் கல்யாண மாப்பிள்ளை அதர்வாவோ வெளிநாட்டில் அமெரிக்காவில் தனது நண்பர்களுடன் இருக்கிறார். அவர் வரவேண்டும் அவருக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.நண்பர்களுடன் வெளிநாட்டில் இருந்து வரும் அதர்வா வரும் வழியில் பகத் பாசிலை விமானத்தில் சந்திக்கிறார். அவரிடம் தனது முன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார், அதாவது காதல் கதை தான்.

காதல் போயின் சாதல் என்றது ஒரு காலம். காதல் போயின் மறுபடியும் இன்னொரு காதல் என்கிற இந்த காலத்தில் அவரது காதல் கதையை அல்ல காதல் கதைகளைச் சொல்கிறார்.

பதின் பருவத்து பள்ளிக்காலத்தில் ப்ரீத்தி முகுந்தனை டியூஷனில் பார்த்த அதர்வா, அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். டியூஷன் சென்டர், டென்னிஸ் விளையாடும் மைதானம் என ப்ரீத்தி செல்லும் இடமெல்லாம் ரகசியமாகத் தனது காதலை மனதில் வளர்த்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார் .ஒரு நாள் ப்ரீத்தி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு அதர்வாவைத் தனது வீட்டிற்குஅழைக்கிறார். அங்கே சென்ற அதர்வா தனது காதலைச் சொல்லலாம் என்று நினைக்கும் போது ஒரு புதுச் சிக்கல் முளைக்கிறது.ப்ரீத்தி ஒருவர் அல்ல, இரட்டைப் பிறவி சகோதரிகளில் ஒருவர் என்று.யாரைக் காதலித்தோம் என்று இரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கிறார்.இதனால் சொல்ல வந்த வார்த்தைகள் சொல்ல முடியாமல் போய்விடுகிறது.காலம் செல்கிறது.திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து விடுகிறார் அதர்வா.சென்னையில் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் கயாடு லோஹரைக் கண்டதும் மனதை பறிகொடுத்து காதலில் விழுகிறார். அவருடன் பேசுகிறார்; பழகுகிறார் ;ஆனால் சொல்ல வேண்டியதைச் சொல்ல முடியாமல் தயங்கித் தவிக்கிறார்.கல்லூரிக் காலம் முடிந்து கயாடு தனது சொந்த ஊருக்குப் புறப்படுகிறார் அவரை வழி அனுப்பி வைக்கச் செல்லும்போது ரயில் நிலையத்தில் தனது காதலைச் சொல்லலாம் என்று எண்ணிக்கொண்டே செல்கிறார் ஆனால் முடியவில்லை.இப்படி தான் பழகி நேசித்த பெண்களிடம் தனது காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கிற அதர்வா இறுதியில் தனது காதலைச் சொன்னாரா இல்லையா என்பதை சொல்வதே ‘இதயம் முரளி ‘படத்தின் மீதிக் கதை.  

அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் தான் எடுத்துக் கொண்ட கதைக் களத்திற்கு ஏற்ப திரைக்கதை அமைத்து அதற்குரிய காட்சிகளை வண்ணமயமாகவும் இளமைத் துள்ளலாகவும் ஜீவனுள்ளவாறும் உருவாக்கி இருக்கிறார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் மனதில் பதியும் வகையில் உள்ளது.தயங்கும் ஒருவராக அதர்வா சொல்லும் கதையை அலட்சியமான தொனியில் பகத் பாசில் கேட்கும் விதமே எதார்த்தமாக உள்ளது.அவரது கதாபாத்திரத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்படுத்தாமல் இறுதியில் அதை நிறைவு செய்துள்ளது சிறப்பு.

பட ஆரம்பத்தில் 90களின் பதின்மப் பருவ பிள்ளைகளின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒலிக்கும் அதர்வாவின் குரல் எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருந்த அந்த காலகட்டத்தை நினைத்து நைன்டி கிட்ஸ்களைத் தங்கள் கடந்த காலத்தை மீட்டிப் பார்க்கும் நாஸ்டாலியா தருணம்.

அதர்வா, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு ஆகியோரின் கதாபாத்திரங்கள் தான் படத்தை முழுமையாக தூக்கி நிறுத்தும் தூண்களாக உள்ளன. காதலின் வலியை ஒவ்வொரு பாத்திரத்தின் மூலம் படம் பார்ப்பவர்களுக்கு கடத்தி உள்ளார் இயக்குநர்.

அதர்வாவின் பாத்திரம் அப்படியே தந்தை முரளியின் தொடர்ச்சியாக இருக்கிறது .அலட்டிக் கொள்ளாமலேயே ஸ்கோர் செய்கிறார்.கதாநாயகிகள் கயாடு லோஹர் ப்ரீத்தி முகுந்தன் இருவருமே தோற்றத்திலும் நடிப்பிலும் சின்ன சின்ன நுணுக்கமான முக பாவனைகள் மூலமும் அழுத்தமாகப் பதிகிறார்கள்.

அதே போல் ஜிஜோ பாத்திரத்தில் வரும் பரிதாபங்கள் சுதாகர் படத்தில் அதர்வாவின் நண்பனாக வந்த தூள் கிளப்பி உள்ளார்.
ரக்ஷன், தமன், நிஹாரிகா, டிராவிட், ஏஞ்சலின், ஜோனிடா ஆகியோரின் நடிப்புப் பங்களிப்பு படத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.இதயம் படத்தில் வந்த சின்னி ஜெயந்த்தை ரயில் நிலையத்தில் இந்தப் படத்தில் மீண்டும் காட்டி இருப்பது இரு படங்களுக்கும் இருக்கும் தொடர்பை காட்டும் வகையில் உள்ளது சிறப்பான உத்தி.எடை பார்க்கும் எந்திரத்தில் எடை சீட்டில்  பொன்மொழியாக வரும் ‘நீ தவறவிட்ட வாய்ப்பு திரும்ப வராது!: என்கிற வாக்கியத்தில் இயக்குநரின் டச் தெரிகிறது.

இசையமைப்பாளர் தமனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இளமைக் கொண்டாட்டமாகத் தெறிக்க விடும் விதத்தில் அமைந்துள்ளன.பொருத்தம் கருதி ‘பொட்டு வைத்த வட்ட நிலா ‘பாடலை இடம்பெற வைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

திருச்சி, சென்னை, மதுரை, அமெரிக்கா  நியூயார்க் ,நாஸா பகுதி என்று பயணிக்கிற கதையில் காட்சிகளை மிகப் பிரமாதமாகவும் கதாபாத்திரங்களை ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமாகவும் கொண்டு செல்லும் வகையில் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சி எச் சாய் இருவருமே. முன் புலத்தில் உள்ள கதாபாத்திரங்களை மட்டுமல்ல பின்புலத்து எழில் காட்சிகளையும்  அழகுணர்ச்சியோடு படம்பிடித்து பெரிய காட்சி இன்பத்தை  வழங்கி உள்ளார்கள்  ஒளிப்பதிவாளர்கள் இருவரும். ஒவ்வொரு காட்சியும் அழகாக வரவேண்டும் என்று பொருட்செலவு பற்றி கவலைப்படாமல் செலவிட்டுள்ளார் தயாரிப்பாளர். குறிப்பாக அமெரிக்காவில் ப்ரீத்தி முகுந்தன் தோன்றும் ஒரு பாடல் காட்சியில் தான் எத்தனை எத்தனை உடைகளை மாற்றிக்கொண்டு  தோன்றுகிறார்.

சில காட்சிகள் மித வேகத்தில் செல்வது போல் தோன்றலாம்.படத்தின் மையக் கதையே தயங்கித் தயங்கி தாழ்வுணர்ச்சி கொண்ட ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றி இருப்பதால் அந்த மிதமான வேகத்தை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இந்த இதயம் முரளி 90களின் ரசிகர்களையும் தொடர்பு படுத்தி வைக்கும் வகையிலும் ஜென்சீ தலைமுறைக்கும் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது என்று கூறலாம்.

மொத்தத்தில் இந்த ‘இதயம் முரளி’ காதல் இதயம் கொண்டுள்ளவர்கள் அனைவரையும் கவரும்.