துல்கர் சல்மான்,கயாடு லோஹர்,மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட், கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.
கதை: நஹாஸ் ஹிதாயத்,திரைக்கதை: சஜீர் பாபா, பிலால் மொய்து, இஸ்மாயில் அபூபக்கர்,ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித், இசை : ஜேக்ஸ் பிஜாய்,படத்தொகுப்பு: சாமன் சாக்கோ,தயாரிப்பு வடிவமைப்பாளர்: அஜயன் சாலிசேரி,
ஆடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா,நடன அமைப்பு: சாண்டி. துல்கர் சல்மான் & ஜோம் வர்கீஸ் தயாரித்துள்ளனர்.
பணக்கார வீட்டுப் பிள்ளையான துல்கர் சல்மான் திறமை இல்லாதவர், பிழைக்கத் தெரியாத உதவாக்கரை என்று தந்தையால் இகழப்படுகிறார்.துல்கரின் ஊதாரித்தனத்தால் சூதாட்ட மோகத்தால் தந்தை பல லட்சங்கள் கடன் கொடுக்க வேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட துல்கரிடம் அம்மா ஜெயசுதா இதுதான் தனது கடைசி உதவிப் பணம் என்று கூறி 60 லட்ச ரூபாய் கொடுக்கிறார். எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் தன் தந்தையின் அவமதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். ஆரம்பத்தில் ஜெயிக்கிறவர் பிறகு அனைத்தையும் இழக்கிறார்.ஒரு நெருக்கடியான சூழலில் அங்கிருந்து காரில் தப்பிக்கும் போது விபத்தில் அடிபட்டுக் கையை இழக்கிறார்.அந்த கைக்கு வேறொரு மாற்றுக்கை பொருத்துகிறார்கள். அந்தக் கையை உடலோடு இணைத்துச் செயல்பட பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அவரது கட்டுப்பாட்டை இழந்து அது விருப்பத்திற்குச் செயல்படுகிறது. முதலில் அதனை டாக்டர்கள் ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என நினைக்கிறார்கள். பிறகு கொலை முயற்சிகளில் எல்லாம் ஈடுபட்டு ஒரு நிலையில் துல்கரையே கொலை செய்யப் பார்க்கிறது. பிறகுதான் தெரிகிறது அந்த கைக்குப் பின் இன்னொரு ஆன்மா இருந்து இயக்குகிறது என்பது.அது யாருடைய கை என்று தேடும் போது முன் கதை விரிகிறது. அது ஒரு கிரிக்கெட் வீரரின் கதை.அவருடைய பிரச்சினை என்ன? அது ஏன் பலரையும் பழிவாங்கத் துடிக்கிறது? என்பதை அறிந்து துல்கர் என்ன செய்கிறார் என்பதுதான் 173. 25 நிமிடங்கள் கொண்ட ‘ஐஆம் கேம் ‘ திரைப்படத்தின் மீதிக்கதை.
உலகம் தோன்றிய நாள் முதல் சூதும் சூதாட்டமும் தொடங்கியது என்று படத்தின் தொடக்கத்தில் கூறப்படுகிறது.அந்த வகையில் இந்தப் படத்தில் ஆரம்பத்திலேயே சூதாட்ட உலகத்தை கண் முன் பிரமாண்ட காட்சிகளாகக் காட்டுகிறார்கள். அவற்றைப் பார்க்கும்போது பிரமிப்பு கூடுகிறது.அப்படி ஒரு சூது உலகம் இருக்கிறதா என்று வியக்க வைக்கிறது.
இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ,டேன் ஜான் என்ற பாத்திரத்தில் வருகிறார். பல்வேறு வகை நடிப்பு வாய்ப்புகள் வெளிப்படும் வகையில் நடித்துள்ளார். உணர்ச்சி மிக்க காட்சிகளிலும் தோன்றி நடித்துள்ளார். அவமானம் காதல் மோதல் வலி ஏமாற்றம் அனைத்தையும் அவர் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.தன் கையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அந்தக் கையுடன் போராடும் காட்சிகளில் நகைச்சுவையாகவும் உணர்ச்சிகரமாகவும் தோன்றுகிறார் .இந்தப் படத்தின் கதையில் மட்டுமல்ல நடிப்பிலும் ஐ ஆம் கேம் என்று அடித்து ஆடி இருக்கிறார் துல்கர் சல்மான் .
டைட்டில் போடும்போது இது சார்ந்த ’ ஏற்கெனவே இதயம் அறிந்ததை கை வெளிப்படுத்துகிறது’ என்ற அமெரிக்க கட்டிடக் கலைஞர் சாமுவேல் மோக்பியின் வரியை ஆங்கிலத்தில் காட்டி நமக்கு ஒரு சின்ன குறிப்பு தருகிறார்கள். ஆனால் கதையின் வேகத்தில் அதை மறந்து விடுகிறோம். பிறகு தான் தெரிகிறது இது, இதயம் உணர்ந்ததைச் செய்கிற கையின் கதை என்று.இந்தக் கற்பனை நினைக்கும்போது ஒரு காலத்தில் காமிக்ஸ் உலகத்தில் கலக்கிய இரும்புக்கை மாயாவி கதை நினைவுக்கு வருகிறது.
துல்கருக்கு ஜோடியாக இஷா பாத்திரத்தில் வரும் கயாடு லோஹர் வசீகரமான தோற்றத்திலும் நடிப்பிலும் கவர்கிறார் .அவர் வந்தாலே போதும் நடிக்க வேண்டாம் என்கிற நிலையில் பார்வையாளர்களை ஈர்க்கிறார். துல்கரின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவ வரும் அவரிடம் துல்கர் முதலில் காதலைச் சொல்லும் போது அதை மறுதலிக்கிறார். பிறகு மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்கிறார். பிறகு கடைசி வரைக்கும் இருக்கிறார். அந்தப் பாத்திரம் உணர்ச்சிகரமான பாத்திரமாக மாறுகிறது.
அதேபோல் கிரிக்கெட் வீரராக விக்னேஷ் விக்கி தாஸ் பாத்திரத்தில் நடித்துள்ள ஆண்டணி தாஸ் பல்வேறு உணர்ச்சிகளை அழகாகக் காட்டியுள்ளார். கிரிக்கெட் என்பது எண்டர்டெயின்மென்ட் கிடையாது எமோஷனல் என்று அவர் நினைக்க வைத்துள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டப் போட்டிகளில் ஈடுபடும் டேவிட் பாத்திரத்தில் பெரிய டானாக மிஷ்கின் நடித்துள்ளார். தோற்றத்தில் உடல் மொழியில் அலட்சிய வசனத்தில் என்று ஒவ்வொரு அசைவிலும் அவர் வில்லத்தனம் காட்டி ரசிக்க வைக்கிறார்.
அதே போல விக்கிதாஸின் காதலியாக வரும் சம்யுக்தா விஸ்வநாதன் , துல்கரின் தாயாக வரும் ஜெயசுதா, தந்தையாக வருபவர்,நண்பனாக வரும் வினய் ஃபோர்ட், கிரிக்கெட் கேப்டனாக வரும்
கதிர் போன்ற பலரும் நடிப்பில் தங்களது பங்களிப்பைச் செலுத்தி இருக்கிறார்கள்; பார்ப்பவர்கள் நினைவில் நிற்கிறார்கள்.
ரசிக மனோபாவத்தில் கிரிக்கெட்டை அணுகும் ரசிகர்கள் இருக்கும் உலகத்தில் அங்கே அதை உணர்ச்சிகரமான வியாபாரம் ஆக்கி உள்ளுலகத்தில் நடக்கும் சூதுகளை நினைக்கும் போது அதிர்ச்சியூட்டுகிறது. ஏராளமான காட்சிப்பிரமாண்டங்கள் மட்டுமல்ல உணர்ச்சிகரமான காட்சிகளும் நிறைந்த ஒரு படமாக இருக்கிறது.
முதலில் சூதாட்டம் சார்ந்த படமாக இருக்குமோ என்று நினைக்க வைக்கும்படி காட்சிகள் உள்ளன. போகப் போக அது ஒரு கைக்குள் புகுந்த இன்னொரு ஆன்மாவின் பழி வாங்கும் கதையாக மாறி வேறு ஒரு திசைக்குச் சென்று சுவாரஸ்யம் ஊட்டுகிறது.அது சார்ந்த கற்பனைகள் ஒரு பேன்டஸி ரகத்தில் இருந்தாலும் ரசிக்க வைக்கின்றன.அப்படியா செல்கிற கதை மெல்ல திசைமாற்றிக்கொண்டு கிரிக்கெட் உலகத்தில் உள்ள சூது மோசடிகளை வெளிப்படுத்தும் ஒரு திரில்லர் படமாக உருமாறி வேறொரு தோற்றம் காட்டி நம்மை ஈர்க்கிறது.
பிரம்மாண்டமான காட்சிகளைச் சிறைப்பிடித்து தனது கேமராவுக்கு பதிவு செய்து காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித், இசை : ஜேக்ஸ் பிஜாய்.அவரது இசை படத்திற்கு வியக்க வைக்கும் பிரம்மாண்டத்தையும் விறுவிறுப்பையும் கூட்டி இருக்கிறது.படத்தின் இரண்டாவது பாதியில் நீளத்தைக் குறைத்திருந்தால் மேலும் விறுவிறுப்பு கூடியதாக மாறி இருக்கும்.
மொத்தத்தில் கலகலப்பான படமாக ஆரம்பித்து க்ரைம் த்ரில்லராக மாறியுள்ள இப்படம் நிச்சயம் அனைவருக்கும் ஒரு புதுமையான திரை அனுபவமாக இருக்கும்.


