‘சர்தார்-2’ திரைப்பட விமர்சனம்

கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா,மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரெஜிஷா விஜயன் ,யோகி பாபு, நிழல்கள் ரவி, ஆஷிஷ் வித்யார்த்தி, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை பி. எஸ் .மித்ரன் இயக்கியுள்ளார். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயன் கவனித்துள்ளார். கலை இயக்குநராக ராஜீவன் நம்பியார், படத்தொகுப்பாளராக வேலுக்குட்டியும் பணியாற்றியுள்ளனர்.பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும் விவிஒய் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா தயாரிப்பில் இந்த ‘சர்தார்-2’ திரைப்படம் உருவாகி உள்ளது.

‘சர்தார்’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அடுத்ததொரு சாகசப் பயணமாக இந்தப் படம் உருவாகி உள்ளது.சர்தார் முதல் பாகத்தில் கார்த்தி, தண்ணீருக்காக இந்தியாவில் நாசகார வேலைகள் செய்யும் வில்லனை வீழ்த்தும் கதையில் நடித்திருந்தார்.இந்தக் கதை வேறு விதமான ஒன்று.

ரா உளவுத்துறை ‘டோக்கு’ என்ற ஒரு ரகசிய ஆபரேஷனை செய்கிறது.இரண்டாம் உலகப் போரில் எதிரிப் படைகளை அழிப்பதற்காக ஜப்பான் உருவாக்கி இருந்த ஒரு நாசக்கார ரசாயன குண்டு தற்செயலாக இந்தியாவுக்குள் கர்நாடகா, தமிழக எல்லைக்கிராமத்தில் விழுகிறது.அதன் தாக்கத்தில் மக்கள் கும்பல் கும்பலாக சாகிறார்கள்.அந்த குண்டின் கதிரியக்கத் தடுப்பு மருந்து ஜப்பானில் இருப்பதைக் கண்டுபிடித்து இந்தியாவிற்குள் கடத்தி வரும்படி உளவுத்துறை தனது அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறது.அச்யூத்குமார், ஆஷிகா ரங்கநாத்துடன் ஜப்பான் செல்லும் கார்த்தி அங்கிருந்து அந்த மருந்து இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அதை இந்தியாவிற்கு கொண்டு வர முயல்கிறார்.இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அந்த மருந்தைக் கைப்பற்றி அழிவுச் செயல்களில் ஈடுபடுவதற்கு எஸ்.ஜே.சூர்யா முயல்கிறார்.இந்த நேரத்தில் இதுவரையிலும் தலைமறைவாக இருந்த கார்த்தியின் அப்பாவான சர்தார் வெளிப்படுகிறார். இந்தப் பிரச்சினையில் அவரும் தலையிட்டு அந்த மருந்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்.

இந்த மூவரின் முயற்சிகள் வெற்றி பெற்றதா? அந்த ஆபரேஷன் ‘டோக்கு’ என்ன ஆனது? அப்பாவும், மகனும் இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த 179 . 14  நிமிடங்கள் கொண்ட ‘சர்தார்-2’ படத்தின் திரைக்கதை செல்லும் பாதை.

படத்தில் நடிகர் கார்த்தி அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது மட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் இருவரும் திரையில் தோன்றியிருக்கிறார்கள்.அப்பாவின் இளமைக்கால கதையும் படத்தில் ஒரு பகுதியாக வருகிறது. இப்போதைய மகன் உளவுத்துறைக்குத் தெரியாமல் ஒரு செயல் திட்டத்தில் இறங்குவதில் இருந்துதான் இந்தப் படமே தொடங்குகிறது.

கார்த்தியின் வழக்கமான முகபாவனைகள் இதில் வெளிப்படவில்லை. எனவே அந்தப்பாத்திரத்தில் தனித்து தெரிகிறார்.ஓர் உளவாளியின் சாகசப் பயணத்தைக் கூறுவது போலவே படம் தெரிகிறது.அந்த உளவாளியின் பயணத்தின் திட்டமிடல்கள் செயல்பாடுகள் போன்ற காட்சிகளில் துடிப்பான ஒரு மனிதராக கார்த்தி வருகிறார்.சண்டைக் காட்சிகளில் நகைச்சுவைக்கு இடமின்றி தீவிரமாகப் புகுந்து விளையாடி இருக்கிறார். கார்த்தி ஏற்ற இரு வேடங்களில் அப்பா வேடத்திற்குத்தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.

எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் ‘யோகி’ என்ற வில்லனாகவே வாழ்ந்திருக்கிறார்.அவர் நிதானமாக நின்று ஆடியிருக்கிறார். ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகள் பற்றி அவர் பெரிய பாடமே எடுக்கிறார்.அவருக்கும், அப்பா கார்த்திக்கும் இடையில் இருக்கும் தொடர்பு என்ன?அந்த தொடர்பு புதிர் ஒரு இடத்தில் உடையும்பொழுது வியப்பூட்டுகிறார் இயக்குநர்.

மாளவிகா மோகன், ஆசிகா ரங்கநாத் இருவருமே சாகச காட்சிகளில் தோன்றி தங்களுடைய பணியை நிறைவு செய்து இருக்கிறார்கள்.யோகி பாபுவையும், நிழல்கள் ரவியையும் ரா உளவுத் துறை ஏஜெண்டுகளாக காட்டியிருப்பது சற்றே நம்ப முடியாதபடி உள்ளது.ரா உளவுத்துறையின் தலைவரான ஆஸிஷ் வித்யார்த்தி அதிகமாக ஆங்கிலம் பேசுவது அந்தப் பாத்திரத்தின் மீது ஒட்டுதலைத் தடுக்கிறது.

தந்தை பாத்திர கார்த்தியின் காதலியாக, மனைவியாக வரும் ரஜிஷா விஜயன் சில காட்சிகளில் வந்து செல்கிறார். அப்பா கார்த்தியின் தந்தையாக வரும் பாலாஜி சக்திவேல் குறைந்த அளவில் வந்தாலும் மனதில் பதிகிறார்.

ஜார்ஜ் சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அபாரம். சென்னை, டெல்லி, ஜப்பான், காடுகள், வேதியியல் கூடங்கள், ரகசிய சுரங்கங்கள் என்ற பல இடங்களிலும் தன்னுடைய கேமராவைச் சுழலை விட்டு காட்சிகள் மூலம் ஆச்சரியங்களை அள்ளுகிறார் .

சண்டைக் காட்சிகளை விறுவிறுப்பாக அமைத்துக் கொடுத்த சண்டை இயக்குநர்களையும் பாராட்ட வேண்டும்.

சாம் சி.எஸ் வழக்கம்போல் பின்னணியில் அடித்து அடி இருக்கிறார். இது அவரது நூறாவது படம். வழக்கம் போல் பயன்படுத்தும் வாத்திய ஒலிகளைத் தவிர்த்து அவர் புதிய புதிய இசைக்கருவிகளை ஒலிக்கவிட்டு ஈர்க்கிறார்.

விஜய் வேலு குட்டியின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தை பராமரித்துள்ளது.ராஜீவனின் கலை இயக்கம் பின்புலங்களைக் கண் முன் நிறுத்துவதில் பெரிய வெற்றி பெற்றுள்ளது.படத்தின் பிரம்மாண்டம் காட்சிக்குக் காட்சி தெரிய வருகிறது. அதை மிகச் சரியான விதத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.சில காட்சிகள் இது தமிழ் படம் தானா என்று நம்மை வியக்க வைக்கிறார் இயக்குநர்

ஆன்ட்டிபயாட்டிக் என்கிற ஆபத்தைப் பற்றி இந்தப் படம் பேசியிருக்கிறது. நாம் அதிகம் அறியாத நமது உடல், மருத்துவம் சார்ந்த வரவேற்கத்தக்க ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறது. இதற்காகவே இந்தக் குழுவினருக்கும் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கும் பாராட்டைத் தெரிவிக்கலாம்.
மொத்தத்தில் ‘சர்தார் 2’ சோடைபோகவில்லை.