விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் , ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன்,அஜய் கோஷ், ,அர்ஜுன் சிதம்பரம் ,சாய் பிருத்வி ராஜ்,சஹஸ்ரா,விஷ்ணு கோவிந்த்,பாலமுருகன் நடித்துள்ளனர்.
பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். எஸ்.கே செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் .சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ஆர். கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளர் : டி. முத்துராஜ்.இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ ,ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
தயாரிப்பு: முராத் கெதானி , பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே.
இந்தப் படத்தின் கதை என்ன?
கதை எண்பதுகளில் குறிப்பாக 1986-ஆம் ஆண்டு சென்னையில், நடக்கிறது.பத்தா என்கிற பெயர் கொண்ட விஜய் சேதுபதி போக்கிரியாக இருக்கிறார். அடிதடி என்று இறங்கி ஊர் வசவுகளை வாங்கிக் கொண்டு வாழ்கிறார். அவரைப் பார்த்து அந்தப் பகுதியில் பயமும் மரியாதையும் உண்டு.அவரது மனைவி கன்னிமா என்கிற பெயர் கொண்ட லிஜோமோல்,தேன்மொழி என்கிற ஒரு பெண் குழந்தை என்று இருக்கும் பத்தா -விஜய் சேதுபதி ,நீண்ட விடுமுறை விடப்பட்டிருக்கும் ஒரு பள்ளியில் கழிவறைக்குள் சிக்கிக் கொள்கிறார் .ஹரி கிருஷ்ணன் -சாந்தி பாலச்சந்திரன் தம்பதியின் மகன் 8 வயதுச் சிறுவன் சபரி உள்ளே ஆள் இருப்பது தெரியாமல் இயல்பாக தாழ்ப்பாள் போட்டு விட்டுச் சென்று விடுகிறான். திறக்காமலேயே தினமும் அங்கே சென்று வருகிறான்..இதற்குத்தான் தான் காரணம் என்று அந்தச் சிறுவன் உறுத்தலோடு சில உதவிகளையும் செய்கிறான்.பத்தாவை விடுவித்தாலும் தன்னை ஏதாவது செய்து விடுவாரோ என்று அஞ்சுகிறான். பத்தா ஒரு வாரம் போல் தனிமையில் பசியோடு தவிக்க வேண்டி இருக்கிறது போலீசும் ஊராரும் தேடியும் கிடைக்கவில்லை.இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் பத்தா பள்ளியில் அடைபட்டு இருப்பது அந்தச் சிறுவன் சபரி மூலம் ஊருக்குத் தெரிகிறது.போய்ப் பார்த்தால் அசைவற்றுக் கிடைப்பதைப் பார்த்து உயிருடன் இல்லை என்று முடிவு செய்கிறார்கள்.ஆனால் அவர் காப்பாற்றப்படுகிறார்.அவரை அங்கு அடைத்து வைத்தது யார் என்று அவரது சகாக்கள் தேடுகிறார்கள். பத்தாவுக்கு எதிரிகளாக இருக்கும் அனைவரது மீதும் சந்தேகம் வருகிறது.
இன்னொரு பக்கம் பத்தாவைக் காப்பாற்றியது அந்தச் சிறுவன் தான் என்று அவரை விஜய் சேதுபதி குடும்பம் கொண்டாடுகிறது.அனைவரும் பாசத்தைப் பொழிகிறார்கள்.ஆனால் சபரிக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று தவிப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அவன் உண்மையைச் சொன்னானா? அதை பத்தா எப்படி எதிர்கொண்டார் ? என்பதுதான் 158 .59 நிமிடங்கள் கொண்ட ‘பத்தா’ படத்தின் மீதிக் கதை
படத்தில் பத்தா பாத்திரத்தில் விஜய் சேதுபதி அந்த எண்பதுகளின் தோற்றத்திலும் முரட்டுத்தனத்திலும் சரியாகப் பொருந்தி நடித்துள்ளார்.
எடுத்ததும் கை நீட்டுவது என்று அந்த போக்கிரித்தனத்தை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.ஆனால் கழிவறைக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகளில் பயம் தவிப்பு கவலை பதற்றம் அனைத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.அதே நேரம் அவர் சிறுவனை எதிர் கொள்ளும் விதம் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாக இருக்கிறது.
அடுத்த கன்னிமாவாக வரும் லிஜிமோல் ஜோஸ் மிகப் பிரமாதமாக அந்தத் தோற்றத்திலேயே பாஸ் மார்க் பெற்று விடுகிறார். அவரது ஒவ்வொரு அசைவும் ரசிக்க வைக்கிறது .சிறந்த குணச்சித்திரத்தை வெளிப்படுத்தி உள்ளார்.படத்தில் இரண்டாவது கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு சிறுவன் சாய் பிருத்விராஜ் வருகிறான் .அவன் ஏற்று நடித்த சபரி பாத்திரத்தில் அனாயசமாக முகபாவனைகளையும் விழியசைவுகளையும் காட்டி பிரமாதப்படுத்தியுள்ளான்.பயம் ,குற்ற உணர்ச்சி அனைத்தையும் தன் முக பாவனையில் காட்டி அசத்தியுள்ளான்.அதே நேரம் உண்மையைச் சொன்ன பிறகு அவன் முகத்தில் ஒளி வீசுவதையும் அழகாகக் காட்டியுள்ளான்.படத்தில் வரும் பிற நடிப்புக் கலைஞர்கள் ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன்,அஜய் கோஷ், ,அர்ஜுன் சிதம்பரம் , ராஜ்,சஹஸ்ரா,விஷ்ணு கோவிந்த்,பாலமுருகன் போன்ற அனைவரும் தத்தமது பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளார்கள்
மனித மனம் மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது பொய் சொல்லாது அறத்தைப் பற்றியே சிந்திக்கும் என்பதை இந்த படத்தின் கதை சொல்கிறது.இந்தக் கதையை எண்பதுகளின் காலப் பின்புலத்தைக் கொண்டு அழகாகக் கூறியுள்ளார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். ஒரு அடிதடி ரவுடியின் கதையாகத் தொடங்கும் இந்தப்படக்கதை போகப்போக வேறொரு திசையில் சென்று மனித மனங்களின் உணர்ச்சிப் போராட்டத்தின் கதையாக மாறி நம்மை மகிழவும் நெகிழவும் வைக்கிறது.
அந்த காலகட்டத்தைக் கண் முன் நிற்கும் காட்சிகளாகப் பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் எஸ்.கே செல்வகுமார். .சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்..படத்தின் பின்னணி இசை கதையின் பதற்றத்தை நமக்குள் கடத்துகிறது.
உலகில் உள்ள காவியங்கள் படைப்புகள் அனைத்துமே மன்னிப்பையும் அறத்தையும் போதிப்பவை. அப்படி ஒரு கலைசெய்யும் காரியத்தை இந்தப் படம் செய்கிறது.
இந்தப் படத்தில் பார்த்து ரசிக்கவும் பரவச உணர்வை அனுபவிக்கவும் ஏகப்பட்ட காட்சிகள் உள்ளன. அவற்றை எல்லாம் திரையரங்கு சென்று பார்த்து தான் உணர முடியும். நிச்சயமாக இந்தப் படம் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் படியான ஒரு புதிய உணர்ச்சிக் கொந்தளிப்பான திரையரங்கு அனுபவத்தைத் தரும். இந்தப் படத்தைக் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும்படியான ஒன்றாகப் பரிந்துரை செய்யலாம்.


