நிவின் பாலி ,அஞ்சலி, சூரி நடித்துள்ளனர். ராம் எழுதி இயக்கியுள்ளார். என். கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.வி எஸ் மதி படத்தொகுப்பு செய்துள்ளார்.
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
நேரம் நமது வாழ்வின் போக்கை மாற்றக்கூடியது. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சம்பவங்கள் சந்திப்புகள் ஒட்டுமொத்த பயணத்தையே திசை மாற்றிவிடும்.ஆனால் ராம் இதில் கூறும் சந்திப்பு வேறு விதமானது.
ஒரு தீபாவளி மழை நாள் இரவில் ஒரு சந்திப்பு நடக்கிறது. ஆளில்லாத ஓடும் ரயில் ஒன்றில் நடக்கும் அந்தச் சந்திப்பில் தனது குடும்பத்தைப் பிரிந்து துபாயில் எட்டு ஆண்டுகளாக வேலை பார்த்துவிட்டு இந்தியா வந்து ஏர்ப்போட்டிலிருந்து ரயிலில் வருகிற ஒரு சாதாரண மனிதனான சூரியின் வாழ்க்கையும், எட்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து தன் காதலைத் தேடிக் கொண்டிருக்கும் நிவின் பாலியின் வாழ்க்கையும் எதிர்பாராத விதமாகச் சந்திக்கின்றன.
நிவினின் முரட்டுத்தனமான தோற்றத்தைப் பார்த்த சூரி மிரள்கிறார் .அவர் அசாதாரணமான ஆளாகத் தோன்றுகிறார்.மெல்ல சூரி பேச்சுக் கொடுக்கிறார். ஆனால் சூரியை அவர் மிரட்டிக் கேள்வி கேட்கிறார்.அந்தக் கேள்வி மனிதவர்க்கத்தின் மீது பிற உயிரினம் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது. மனிதன் தனது சுயநலத்திற்காக இயற்கையின் சட்டத்திற்கு மாறாக விலங்குகளை துன்புறுத்துவது கொலை செய்வது என்று இருப்பதைப் பற்றிய கேள்வியாக இருக்கிறது.
ரயிலில் அவரிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் சூரி ஆனால் அது முடியவில்லை.அப்போது சூரிக்கு என்னென்னவெல்லாம் நிகழ்கின்றன நிவினின் காதலி அஞ்சலி யார் ? அவர் எப்படிப்பட்டவர்? போன்ற கேள்விகளுக்குப் பதிலாக விரிந்து செல்கிறது ராம் எழுதியிருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கதை.
நீள் முடி, பயமுறுத்தும் தாடி ,அவர் எப்படிப்பட்டவர் என்று யூகிக்க முடியாத குணச்சித்திரம் என்று வருகிறார் நிவின்.பயத்தையும் பதற்றத்தையும் கொடுக்கும் தோரணை உடல் மொழி போன்றவை மூலம் நிவின் ஏற்றுள்ள அந்தக் கதாபாத்திரம் மர்மம் கொண்டதாக இருக்கிறது. .அவர் மூலம் வெளிப்படும் அன்பு, காதல், ஆவேசம், கேலி, கிண்டல் ,மிருகங்களின் மீதான பரிவு ணர்வு போன்றவற்றால் அந்தப் பாத்திரம் வலுவாக மாறுகிறது.
வெள்ளந்தித்தனம் ,கொஞ்சம் கேலி ,கிண்டல், பயம், மிரட்சி, பதற்றம் போன்றவற்றை, வெளிப்படுத்தி ,ஒரே உடையிலேயே வந்து கலக்கி இருக்கிறார் சூரி.சில இடங்களில் மிகை நடிப்பு எட்டிப் பார்க்கிறது. இருந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் சூரி பாத்திரம் கவனிக்க வைக்கிறது .
தேவதை போலத்தோற்றத்துடன் வந்து காதலும் அது வெளிப்படும் விதமும் அதன் மூலம் பரவும் மயக்கம் புதிர் தன்மை அனைத்தும் கலந்த பாத்திரமாக அஞ்சலி வருகிறார்.இந்தப் பிரதான பாத்திரங்களோடு ஒரு எலியும் படத்தில் தோன்றி மறக்க முடியாத பாத்திரமாக மாறி உள்ளது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு ரயிலுக்குள்ளேயே குறிப்பாக ஒன்று இரண்டு பெட்டிகளிலேயே நடக்கின்றன. ஆனால் அதை சலிப்பூட்டாத வண்ணம் வித்தியாசமான கோணங்களிலும் விதவிதமான ஒளியமைப்பிலும் காட்சிப்படுத்தி உள்ளார் ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம். அது மட்டுமல்லாமல் கதை ரயிலை விட்டு வெளியேறி காடு,மலை, கடல் ,கடற்கரை, பாலைவனம் என்று வெவ்வேறு நிலக்காட்சிகளையும் அழகுணர்ச்சியோடு கொண்டு வந்து கண் முன் நிறுத்துகிறது அவரது கேமரா. சில இடங்களில் கதாபாத்திரங்கள் பேசாத போது காட்சிகளும் பேசுகின்றன.
காட்சிகள் ரயிலுக்கும் வெளியேயும் தாவித்தாவிச் சென்றாலும் அழகாக ரசிக்கும் படி உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.
குறிப்பாக ரயில் பெட்டிக்குள் நடக்கும் சண்டைக் காட்சிகளில் கோணங்களில் கிறு கிறுக்க வைக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதி இருவரும் கூட்டணி அமைத்து இசையமைத்து இருப்பது புதிய அனுபவமாக இருக்கிறது.
பாடல்களும் பின்னணி இசையும் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளன.
நிவின் பாலி -சூரி இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடலில் தான் படம் தொடங்குகிறது. ஆனால் கதை நகர்ந்து உலக சுற்றுச்சூழலுக்கும் மனிதருக்குமான உரையாடலாக மாறி இப் படத்தின் நோக்கத்தை விஸ்தாரப்படுத்தி உள்ளார் இயக்குநர் ராம்.தொல்காப்பியத்தின் வெட்சித் திணை வரிகளில் இருந்து உலகப் பல்லுயிர்ச் சுற்றுச்சூழல் வரை பேசுகிறார் ராம்.
பிற உயிரினங்களுக்கு மனிதன் செய்த கொடுமைகள் பற்றி நிவின் பாலி பாத்திரத்தின் மூலம் கேட்டு கேள்வி கேட்கிறார் இயக்குநர்.ஐந்து பிறவி எடுத்து இருக்கும் அஞ்சலி,ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுக்குமான கதை சொல்லும் நிவின் பாலி என்று வருவது புது அனுபவமாக இருக்கிறது.
இதில் நிவின் பாலியின் காதல் சார்ந்த அத்தியாயங்கள் வேறு வகையான தளத்துக்கு நம்மை அழைத்துச் சென்று அழகு காட்டுகின்றன.
படத்தில் அழகியலோடு காட்சிகள் இருந்தாலும் ராம் தான் கூற விரும்பும் அரசியலையும் கூறியுள்ளார்.
இந்தப் படத்தின் கதை கூறும் முறை படம் பார்ப்பவர்களுக்குத் திகைப்பை ஏற்படுத்தலாம். ஆனால் பழகிப்போன பாணியிலிருந்து மாறுபட்டு இப்படிச் சொல்வதையும் புரிந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் ‘ஏழு கடல் ஏழுமலை’ புதிய திரை அனுபவம் எனலாம்.


