ஜோசப் விஜய், பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ,பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நிழல்கள் ரவி, நாசர்,கௌதம் வாசுதேவ் மேனன் , ரேவதி,பிரியாமணி, நரேன்,சுனில், ஏ எல் அழகப்பன், ஸ்ரீமன்,வேட்டை முத்துக்குமார்,ஷரத் ரவி , அர்ஷத் நடித்துள்ளனர்.எச்..வினோத் இயக்கியுள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார் .சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம்; வி செல்வகுமார்,சண்டைக் காட்சிகளை அனல் அரசு அமைத்துள்ளார். இணைத் தயாரிப்பாளர்கள்: ஜெகதீஷ் பழனிசாமி, லோகித் என். கே. இப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் K நாராயணா தயாரித்துள்ளார்.
2026 தேர்தல் நாளில் தொடங்குகிற கதை பிறகு 2013-க்குள் செல்கிறது. மதுரை சிறையில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது. சிறையைக் கலவர பூமி ஆக்க முயற்சி நடக்கிறது .அப்போது ஒரு கைதி புகுந்து அவர்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்கிறார். அவர் கைதி அல்ல இந்தச் சிறையைக் காப்பாற்றுபவரே அவர்தான் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறுகிறார். தைரியத்துக்கு மறு பெயர் அவர் தான் என்று கூறி அவரது கதையைத் தொடங்குகிறார் .
அவர்தான் தளபதி வெற்றி கொண்டான் என்கிற விஜய்.
அவர் ஒரு காலத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர் .அவர் சிறையில் இருக்கிறார் .அவரது தாய் ரேவதி மரணப்படுக்கையில் இருக்கிறார். சிறை அதிகாரி கௌதம் வாசுதேவனின் தனிப்பட்ட அனுமதியின் பெயரில் தாயைச் சென்று பார்க்கிறார். மகனைக் கண்ட ரேவதி அங்கேயே கண்மூடுகிறார் .கௌதம் மேனன் தன் மனைவியை ஒரு கலவரத்தில் பறி கொடுத்தவர் .தன் ஒரே மகளை வளர்க்கிறார்.வீட்டுக்கு வெளியே சென்ற கெளதம் மேனன் லாரி ஏற்றிக் கொலை செய்யப்படுகிறார்.விஜய் அவரது மகள் சிறுமி விஜியைத் தன் மகள் போல் வளர்க்கிறார்.விஜியும் சித்தா சித்தா என்று விஜய்யுடன் ஒட்டிக்கொண்டு வளர்கிறார் அவர் வளர்ந்து பெரிய ஆளாகிறார். அவர் தான் மமிதா பைஜூ. அப்படிப்பட்ட மமிதாவுக்கு பியர் போபியா இருக்கிறது. அப்படிப்பட்ட பெண்ணை தைரியமுள்ள பெண்ணாக வளர்க்க விஜய் முயற்சி செய்து பாடுபட்டு வருகிறார்.
ஒரு காலத்தில் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த பாபி தியோல், அரசியல்வாதிகளால் அவமானப்படுத்தப்பட்டு மனமுடைந்து போய் ஒரு கட்டத்தில் அவர் எதிர்மறை சிந்தனைக்கு ஆளாகி சமூக விரோத காரியங்களுக்கு உடந்தையாக இருக்கிறார்.உள்நாடு முதல் வெளிநாடு வரை சென்று பல்வேறு மக்கள் விரோத ,தேச விரோத நடவடிக்கையில் இறங்கி ,அதில் ஜாம்பவானாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய்க்கும் அவருக்கும் மோதல் வருகிறது. அரசியல்வாதி பிரகாஷ்ராஜுடன் மட்டுமல்ல பாபி தியோலுடனும் விஜய் மோதுகிறார். முடிவு என்ன என்பதுதான் இந்த 183.11 நிமிடங்கள் கொண்ட ’ஜனநாயகன்’ படத்தின் மீதிக் கதை.
இந்தப் படம் ஜனவரி மாதம் வருவதற்குத் திட்டமிடப்பட்டது .தணிக்கை பிரச்சினையில் சிக்கியதால் தாமதமாக இப்போது வெளியாகி இருக்கிறது. எம்ஜிஆர் முதல்வரான பிறகு ’மீனவ நண்பன்’ வந்தது போல இந்தப் படம் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் என்கிற பெயருடன் வந்திருக்கிறது.
இந்தப் படம் தணிக்கையில் ஏன் சிக்கியது என்று யோசித்தால் தேர்தல் நெருங்கும் காலத்தில் இது ஒரு பிரச்சார தொனியில் இருப்பதால் அரசியல் கட்சி சார்ந்த படம் போல் தோன்றும் என்று தணிக்கை அப்போது அனுமதிக்காது இருந்திருக்கலாமோ எனத்தோன்றுகிறது. தெலுங்கில் இருந்து பகவந்த் கேசரி என்கிற பாலையா நடித்த படத்தின் கதையை எடுத்துக் கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் .தெலுங்கில் கதையை எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் மிகையான காட்சிகளையும் சேர்த்துக் கொண்டிருப்பது தான் வேடிக்கை.
எச்.வினோத் வித்தியாசமான சிந்தனையுடன் இயக்குநரின் பெயர் சொல்லும் வகையில் படங்களை இயக்கியவர். அவர் ஒரு நாயகனுக்காக பிரச்சாரப் படம் எடுத்திருப்பதால் ஓர் இயக்குநராக அவர் கரைந்து போயிருக்கிறார். ஏனென்றால் அவ்வளவு மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் பிரச்சார நெடி கொண்ட காட்சிகள் உள்ளன.
படத்தில் விஜய் அதிகம் பேசாமல் அலட்டிக் கொள்ளாமல் தோன்றினாலும் பஞ்ச் வசனங்களில் அரசியல் பேசியுள்ளார். ஆக்சன் காட்சிகளில் அதிரடியாகவும் சற்று மிகையாகவும் நடித்துள்ளார். ஒரே நேரத்தில் 30 கொலைகள் உட்பட ஏராளமான கொலைகளைச் செய்கிறார்.அவர் பேசும் அரசியல் வசனங்கள் அவரது அரசியலை முன்னிட்டு வைக்கப்பட்டது என்பது நன்றாகத் தெரிகிறது.அதுவும் தேர்தலுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம் என்பதால் சில காட்சிகள் வசனங்கள் காலப் பொருத்தமற்று தோன்றுகின்றன.
விஜி பாத்திரத்தில் நடித்துள்ள மமிதா பைஜூ பல்வேறு நடிப்பு சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்திப் பார்ப்பவர்கள் மனதில் அனுதாபங்களை அள்ளிக் கொண்டு பதிகிறார்.
பூஜா ஹெக்டேவுக்கு வழக்கம் போல் ஆக்சன் படத்தின் கதாநாயகிக்கு கிடைக்கக்கூடிய சில காட்சிகளில் வருகிறார்.அவ்வளவுதான். படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக வரும் பாபி தியோல் எதிர்மறைக் குணத்துடன் அந்த அம்ரித் பூஜாரி பாத்திரத்தில் வந்து கலக்கி உள்ளார். அவரது திரையிருப்பு படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது.
ரோஜா ரங்கசாமி பாத்திரத்தில் அரசியல்வாதியாக வரும் பிரகாஷ்ராஜ் வழக்கம்போலவே தனது அனாயாச நடிப்பில் கலக்கியுள்ளார்.
அவரது பாத்திரம் சமகால அரசியல்வாதிகளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மம்தா பைஜூவின் இளமைக்காலப் பாத்திரத்தில் நடித்துள்ள சிறுமியும் நடிப்பில் கவனிக்க வைக்கிறார். ஐஏஎஸ் அதிகாரியாக வருகிற பிரியாமணிக்குப் பெரிதாகக் காட்சிகள் இல்லை.
நிழல்கள் ரவி, நாசர்,பிரியாமணி, நரேன்,சுனில், ஏ எல் அழகப்பன், ஸ்ரீமன்,வேட்டை முத்துக்குமார்,ஷரத் ரவி , அர்ஷத் போன்றோரும் நடித்துள்ளனர். அட்லி, நெல்சன் திலீப் குமார், லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் மட்டுமல்ல புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் போன்ற அமைச்சர்களும் படத்தில் தோன்றுகிறார்கள்.
படத்தின் பாடல் காட்சிகளையும் சண்டைக் காட்சிகளையும் விஜய்யின் கதாநாயக பிம்பத்தை சித்தரிக்கும் வகையில் அமைத்துள்ளார்கள்.
ஒரு வணிக ரீதியிலான மசாலாப் படத்திற்குத் தேவையான ஆக்சன் காட்சிகள், அம்மா சென்டிமென்ட், குழந்தை குறிப்பாக நோயாளிப் பெண் குழந்தை செண்டிமெண்ட், பெண் மரணம், கொலைகள், அரசியல் மரணங்கள், ஏழைகளை உயர்த்திப் பிடிப்பது, ஊழல் எதிர்ப்பு என்று அனைத்தும் இணைந்த மசாலாப் பொடிகளையும் சரிவிகித விகிதத்தில் மட்டுமல்ல அதிகமாகவே தூவி எடுத்துள்ளார்கள்.
விஜய்யைத் தோற்றப்பொலிவுடன் காட்டியிருப்பதுடன் ,நிறைய பிரமாண்டமான காட்சிகளை மட்டுமல்ல கதாபாத்திரங்களையும் காட்டும் வகையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் சத்யன் சூரியன்.விஜயின் புகழ் பாடும் வகையிலும்உயர்த்திப் பிடிக்கும் வகையிலும் முழு நீள கமர்சியல் பாடல்களாகக் கொடுத்துள்ளார் அனிருத்.
பெரிதாக எதிர்பார்ப்பை விதைத்தார்கள் .ஆனால் இன்னும் எதிர்பார்த்தோம் விளைவு ஏமாற்றமாக இருக்கிறது. மொத்தத்தில் இந்தப் படம் அனைவருக்குமான படமாக அமையாமல் விஜய் ரசிகர்களுக்கான படமாக உருவாக்கப்பட்டுள்ளது. விஜயின் கடைசிப் படமாக இருப்பதால் இதை ரசிகர்கள் வெற்றிப் படமாக்கவே விரும்புவார்கள்.


