’பரமசிவன் பாத்திமா’ திரைப்பட விமர்சனம்

விமல், சாயாதேவி, எம் எஸ் பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், எம் சுகுமார், கூல் சுரேஷ் ,மகேந்திரன், ஆதிரா, ஸ்ரீ ரஞ்சனி ,மனோஜ் குமார், சேஸ்விதா ,பி ஆர் விமல் ராஜ், காதல் சுகுமார், ஆறுபாலா, வீரசமர், கலைவாணி  மற்றும் பலர் நடித்துள்ளனர். இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார் லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் மலைக் கிராமம் ஒன்று .மதங்களின் ஆதிக்கத்தாலும் பரப்புரைகளாலும் மத மாற்றங்களாலும் மூன்று வெவ்வேறு பகுதிகளாகவும் மூன்று வெவ்வேறு சமுதாயங்களாகவும் பிரிந்து கிடக்கிறது.கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும் இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன.
இந்த இரண்டு கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை நாயகன் விமல், நாயகி சாயாதேவி இணைந்து கொலை செய்வதோடு,மேலும் சிலரை கொலை செய்யும் முயற்சியிலும் இறங்குகிறார்கள்.யார் கொலை செய்வது என்று தெரியாமல் மர்மம் நீடிக்கிறது. போலீசுக்கு தலைவலியாக இருக்கும் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு விசாரிக்கிறது. மறுபக்கம் கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதல் தொடர்கிறது. விமலும், சாயாதேவியும் எதற்காக கொலை செய்கிறார்கள்?யாரைக் கொலை செய்கிறார்கள்? அதன் பின்னணி என்ன? என்பதைச் சொல்வதே ‘பரமசிவன் பாத்திமா’.

அரசு உதவி பெறும் கிறிஸ்தவ நிர்வாகப் பள்ளியில் ஆசிரியராக வரும் விமல் கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாயாதேவியும் அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியராக அந்த கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்.

எம் எஸ் பாஸ்கர் கிறிஸ்தவ தேவாலய பாதிரியராக நடித்திருக்கிறார். நீளமாகப் பேசிக் கொண்டு அந்தக் கதாபாத்திரத்தில் வருகிறார்.போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணனும் ஏராளம் பேசுகிறார்.ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், கூல் சுரேஷ், மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் பெரிதாக மெனக்கெடாமல் காட்சிகள் எடுத்துள்ளார்.குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கேமரா பயணிக்கிறது.தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் குறை சொல்லும் அளவுக்கு இல்லை.

படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் பெரும்பாலும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை இயக்குநர் மறந்து விட்டார் போலும். படத்தொகுப்பாளர் புவன் ஆங்காங்கே கத்திரி போட மறந்துவிட்டார்.

சிறுவயதிலேயே அன்பு வசப்பட்ட பரமசிவன் பாத்திமா என்கிற இரு பாத்திரங்கள் மதங்களைக் கடந்த அன்பினால் இணைகின்றன. ஆனால் மதங்களைக் கடந்து மனிதநேயத்தைப் பேச வேண்டிய இந்தப் படம் ஒரு கட்டத்தில் மதத் பிரச்சாரமாக மாறிவிடுகிறது.

தங்கள் எந்த வேறுபாடும் பிணக்கம் இல்லாமல் வாழும் மனிதர்களிடையே நுழைந்து அவர்களை பிரித்து தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும்
மதமாற்றம் பற்றிய விஷயம் தனியாக விவாதிக்கப்பட்டு அது தனியாகப்  பேசப்பட வேண்டிய ஒன்று. எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன், படத்தின் இரண்டாவது பாதியில் மதங்கள் பற்றி பேசும் சர்ச்சைப் பகுதிக்குள் நுழைந்து விட்டார். மதத்திற்கு விசுவாசமாக இல்லாமல் லாப நோக்கில் மதம் மாறுவதைப் பற்றிப் பேசி இருக்கிறார்.அது பிரதான கதையை விட்டு சற்று விலகியது போல் தோன்றுகிறது.அது பரபரப்பு சர்ச்சைகளை எழுப்பி படத்தின் வெற்றிக்கு உதவலாம் என்று நினைத்துள்ளார்.

மொத்தத்தில், ‘பரமசிவன் பாத்திமா’ ‘மத’ யானைக் கூட்டம் உலவும் இடமாக உள்ளது.