இளன் , சான்வி மேகனா , ராதிகா சரத்குமார்,எம் எஸ் பாஸ்கர், யோகி பாபு, செந்தில், இளங்கோ குமாரவேல், கீதா கைலாசம், டீப்ஸ்,மோகனப்பிரியா, ஆருஷ், மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இளன் எழுதி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தினேஷ் கே பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.பிரதீப் ஈ . ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.நெட்ப்ளிக்ஸ் வழங்கும் இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்தப் படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகிறது.
சமூக ஊடகப் பிரபலமான பவித்ராவை இளன் என்கிற இளவரசன் காதலிக்கிறார்.ஆனால் பவித்ரா திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீடு செல்ல மறுக்கிறார். வீட்டோடு மாப்பிள்ளையாக இளன் பவித்ரா வீட்டுக்குச் செல்கிறார்.சரியான வேலை கிடைக்காததால் வீட்டு வேலைகளைச் செய்கிறார். ஒரு கட்டத்தில் ஒரு வேலைக்காரர் போல குடும்பப் பொறுப்புகளை அவர் மீது சுமத்துகிறார்கள்.இதைப் பார்த்த இளனின் தாயார் பதறிப் போய் விடுகிறார். தன் மகனை அங்கிருந்து மீட்கத் திட்டமிடுகிறார். புகுந்த வீட்டில் மருமகள் மட்டுமே வீட்டு வேலைகளைச் செய்யும் போது ஏன் மருமகன் செய்யக்கூடாது? என்ற கேள்வி எழுகிறது . இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே சச்சரவும் கலாச்சார மோதல்களும் ஏற்படுகின்றன.இது எதில் போய் முடிகிறது என்பது தான் ’பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் மீதிக் கதை.
இதில் இளன் என்கிற இளவரசனாக இயக்குநர் இளனே நடித்திருக்கிறார். காதலில் விழுவதும் காதலிக்காக எல்லாவற்றையும் செய்வதையும் குடும்பத்தினரிடமிருந்து விலகிச் செல்வதும் வேலை தேடாமல் சோம்பேறித்தனமாக இருப்பதும் என்று இருப்பவர் மாமியார் வீட்டில் ஒரு அடிமை போல் நடத்தும் போது தவிக்கிறார்.தாய்ப் பாசத்தில் உருகுகிறார். இப்படி அவர் பல்வேறு நல்ல நடிப்புச் சூழல்களை உருவாக்கி நடித்துள்ளார். அதேபோல நாயகியாக நடித்துள்ள
சான்வி, தன் சொந்தக்காலில் நிற்க விரும்பும் பெண்ணாக வருகிறார். தாயையும் காதலனையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தவிக்கும் கட்டங்களிலும் நன்றாக வெளிபட்டுள்ளார்.ஒரு கட்டத்தில் சுமுகமாகச் செல்ல மனம் மாறுகிறார். இப்படிப் பல்வேறு நடிப்புச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு வெளிப்படுத்தி உள்ளார். நாயகியின் தாயாராக சந்திரா பாத்திரத்தில் வரும் ராதிகா சரத்குமாரின் தோற்ற இருப்பே அந்த பாத்திரத்திற்குக் கம்பீரம் தருகிறது. அவர் மருமகனை கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப்படுத்துவது கதைக்கு விறுவிறுப்பு ஏற்றுகிறது. அதேபோல் நாயகன் இளனின் தயாராக நடித்துள்ள கீதா கைலாசம் பாசமுள்ள தாயாக தனது மகனின் நிம்மதிக்காக எது வேண்டுமானாலும் செய்யும் பாத்திரத்தில் வருகிறார். இளனின் கண்டிப்பான தந்தையாக வரும் எம்.எஸ். பாஸ்கர் ஒரு நடுத்தர வர்க்கத் தந்தையின் பிரதிநிதியாக வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் வயதான தாத்தா பாத்திரத்தில் வருகிறார் செந்தில். நடக்க முடியாமல் உட்கார்ந்து கொண்டே எல்லா விதமான கருத்துகளை சொல்வதும் உணர்வுகளை வெளிப்படுத்துவதுமாக அவர் நடித்துள்ளார்.
நாயகனின் நண்பனாக வினோத் பாத்திரத்தில் வரும் யோகி பாபு மற்றும் அவரது மனைவி ஜோடி ஒரு புரிதல் உள்ள தம்பதி என்றால் யார் என்று நாயகனுக்குப் புரிய வைக்கிறார்கள்.அது மட்டுமில்லாமல் இளனின் அண்ணியாக நடித்துள்ள மோகனப்பிரியா கடைசியில் பேசும் வசனங்கள் மிகவும் அர்த்தமுள்ளவை. அவர் பேசும் கருத்துகளில் சமகாலப் பெண்களின் குரல் கேட்கிறது
நடித்துள்ள அனைவருக்கும் நடிப்பு வெளிப்பாட்டுக்கான இடங்களை உருவாக்கி இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் இளன். படத்திற்கான நிகழ்விடங்கள் பின்புலங்கள் எல்லாம் வண்ணமயமாக இளமைத் தோரணம் கட்டி நல்ல காட்சி இன்பம் தருகின்றன.அந்த வகையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கே பாபு.அதேபோல் யுவன் சங்கர் ராஜா இசையில் இளமைத் துள்ளலோடு பாடல்களும் பின்னணி இசையும் ஒலிக்கின்றன. முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் இல்லாமல் உருவாகி இருப்பது பெரிய ஆறுதலாக இருக்கிறது.
மொத்தத்தில் ஒரு கலகலப்பான காதல் கதையாக இருந்தாலும் சமகாலச் சமுதாயத்தின் குடும்ப சூழ்நிலைகளை வெளிப்படுத்தியுள்ள ஒரு நல்லதொரு கதையாக மாறியுள்ளது.ஆங்காங்கே போகிற போக்கில் சிந்திக்க வைக்கும் கருத்தையும் தூவி விட்டுச் சென்றுள்ளார் இயக்குநர் இளன் . அந்த வகையில் அனைவரும் பார்க்கக்கூடிய விதத்தில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.


