‘லவ் ஓ லவ் ‘திரைப்பட விமர்சனம்

பவிஷ் , நாக துர்கா, கே எஸ் ரவிக்குமார், ஆதித்யா கதிர், செல்வராகவன், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.பாக்ஸன் இசையமைத்துள்ளார். பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் என்.பி. படத்தொகுப்பு செய்துள்ளார் .அபிஷேக் சீனிவாஸ் சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார். தினேஷ் ராஜ், தனஞ்செயன் ஜி தயாரித்துள்ளனர்.

காதலிப்பதில் பிரச்சினை என்றால் காதலே பிரச்சினை என்று உருவாகி இருக்கிற கதை இது. கே எஸ் ரவிக்குமார் கடன் என்பது கேன்சர் மாதிரி சிறிது இருந்தாலும் வளரும் வளர்ந்து அழித்துவிடும் என்ற கொள்கை உடையவர் .கே எஸ் ரவிக்குமார் மகன் பவிஷிடம் உள்ளதைக் கொண்டு நல்லது செய்ய வேண்டும் என்று கூறி பிள்ளையை வளர்க்கிறார். அப்படிப்பட்டவர் மகனாகவே பவிஷும்  வளர்கிறார்   .சுமாரான வேலை, சொற்ப சம்பளம் என்றாலும் வாங்கிய சம்பளத்தைப் பெற்றவரிடம் கொடுத்து செலவுக்கு வாங்கிக் கொள்ளும் நல்ல பிள்ளையாக இருக்கிறார்.ஆனால் ஒரு கட்டத்தில் நாகதுர்காவிடம் காதலில் விழுகிறார். அதற்கு முன்பு மாத சம்பளத்தை பெற்றவரிடம் கொடுத்து விட்டுத் தன் செலவுக்கு வாங்கிச் செல்லும் பிள்ளையாக இருக்கும் பவிஷ் காதலி நாகதுர்காவைக் கவர்வதற்காக அவர் கேட்டபடி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார். இதனால் ஊதாரித்தனமான செலவாளி ஆகிறார். சம்பளத்தை மீறிக் கடன் வாங்கி வாங்கி செலவழிக்கிறார்.கடன்காரர்கள் நெருக்கி பிடிக்கிறார்கள்.திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கிறார்.மகனது நிலை அறிந்த பெற்றோர் பிரிந்து விடுகிறார்கள் வாழ்க்கை வேலை இழப்பு, கடன் சுமை மற்றும் குடும்பத்தினரின் விலகல் எனச் சிதைகிறது.

இந்த நிலையில் தன்னை விட்டு விடும்படி ‘எல் 3’ கடிதம் கேட்கிறார் .அதாவது லவ் லீவிங் லெட்டர்(LOVE LEAVING LETTER) கேட்கிறார். இந்தப் பஞ்சாயத்து காவல் நிலையத்திற்கு வருகிறது.அங்கே செல்வராகவன் ஆய்வாளராக இருக்கிறார். அவரிடம் தன் கதையைச் சொல்கிறார். நாக துர்காவை ஏமாற்றி விட்டார் என்று வனிதா விஜயகுமார் தலைமையில் மாதர் சங்கத்தினர் காவல் நிலையத்தில் வந்து கலாட்டா செய்கிறார்கள்.அவர்களிடம் தன் தரப்புக் கதையைக் கேட்காமலேயே இப்படி முடிவு செய்வது தவறு என்று தன் கதையைக் கூறுகிறார். அப்போது ,எப்படி எல்லாம் தனது காதலி தான்தோன்றித்தனமாகச் செலவழித்து தன்னை அழித்தார் என்று பவிஷ் கூறுகிறார். எனவே தன்னை விட்டு விடுமாறு கூறுகிறார்.நாக துர்காவோ அதெல்லாம் முடியாது என்கிறார். ஏமாற்றப் பார்க்கிறார் என்கிறார் வனிதா விஜயகுமார். இறுதியில் ஒரு நிபந்தனைக்கு வருகிறார்கள். நான்கு ஆண்டுகளாக தான் காதலிக்காகச் செய்தது செலவழித்தது எல்லாம் நான்கு மாதங்கள் தனக்காக அவர் செய்ய வேண்டும்,இந்த ஆணின் வாழ்க்கை அவர் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று பவிஷ் கூறுகிறார். அதற்கு நாகதுர்கா ஒப்புக்கொள்கிறார்.

இந்த ஒப்பந்தத்திற்கு இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள். அதற்குப் பிறகு என்ன நடந்தது? அந்தக் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் 130-02 நிமிடங்கள் கொண்ட ‘லவ் ஓ லவ் ‘படத்தின் மீதிக் கதை.

பவிஷின் சொந்த மாமா தனுஷ் ஒரு படத்தில் ஏற்றிருந்த ரகுவரன் பாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார் பவிஷ்.நடுத்தர வர்க்கத்து வாலிபனாக பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாக ,பிறகு  காதலில் விழுந்து செலவாளியாக தவிப்பவராக பிறகு மீண்டும் போக விரும்புவதாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கும் இளைஞராக தனது உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார் பவிஷ்.இது அவருக்கு இரண்டாவது படம் என்றாலும் பல படங்களில் நடித்த அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் சரியாகச் செய்துள்ளார்.

பவிஷின் அதாவது ரகுவரனின் காதலி அவந்திகா பாத்திரத்தில் வருகிறார் நாக துர்கா. சுமாரான தோற்றம் என்றாலும் கூட சுமாரான நடிப்பைத் தான் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது முக பாவனைகள் ஏற்கெனவே படங்களில் பார்த்துப் பழகிய ஒன்றாக வே உள்ளன.

‘எப்போ வரப் போற?” என்ற பாடலைக் காலர் டியூனாக வைத்துக் கொண்டு பவிஷ் , நாக துர்கா சம்பந்தப்பட்ட காட்சிகளில் ரகளை செய்துள்ளார் இயக்குநர்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் சில காட்சிகளில் வந்தாலும் பொறுப்பான அப்பாவாக கவர்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வராகவன்,, தனது அக்கா மகன் பவிஷ் உடன் பெரும்பாலான காட்சிகளில் உடன் இருந்து நடித்து அவரது நடிப்பாற்றலைக் கவனித்துக் கொள்வது போன்ற வாய்ப்பை இதில் நடித்ததன் மூலம் பெற்றுள்ளார்.

மகளிர் சங்க தலைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் அந்தப் பெண்ணியம் பேசுகிற அலட்டலான பாத்திரத்திற்குப் பொருத்தமாகவே இருக்கிறார். பாடல் காட்சிகளிலும் தோன்றி ரகளை கட்டுகிறார்.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தனது ஒளிப்பதிவின் மூலம் காட்சிகளை இளமைக் கொண்டாட்டமாகவே மாற்றி இருக்கிறார் .அதே போல் கதாபாத்திர உணர்வுகளையும் திரையில் பதிவு செய்யத் தவறவில்லை.பாடல் காட்சிகளை வண்ணமயமாக்கி வணிக ரீதியிலான இப்படத்தை உயரத்திற்குக்  கொண்டு சென்றுள்ளார்.

இசை அமைப்பாளர் பாக்ஸன் இசையமைப்பில் பாடல்கள் திரும்பக் கேட்கும் ரகத்தில் இல்லை. ஆனால் பின்னணி இசையில் குறையில்லை.

இதே கதையை நல்ல உளவியல் பார்வையோடு தீவிரமான படமாகவும் கொடுத்திருக்க முடியும். ஆனால் வணிக நோக்கில் இந்தக் கதையை சில சமரசங்களோடு எடுத்துள்ளார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்.கடன் வாங்குவது, பெண்ணியம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் போன்றவற்றைப் பற்றி ஆங்காங்கே நல்ல கருத்துகளை பூத்தூவல் போலத் தூவுகிறார்.காதலர்கள் ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்காகச் செய்யும் செயல்பாடுகளையும் அந்த நாடகங்களையும் கலகலப்பான காட்சிகளின் மூலம் கூறியிருக்கிறார்.
அதற்கு உதாரணமாக டச் வகைகள் பற்றிய காட்சிகள்,காதலிகள் வைக்கும் செலவுப் பட்டியல் பற்றிய காட்சிகள் போன்றவை ஜாலி ரகளை
அதே வேளை உணவுப் பொருளை வீணாக்கக் கூடாது என்பதற்காக டேஸ்ட் செய்வதற்குத்தான் விருந்து கொடுக்கிறார்களே தவிர வேஸ்ட் செய்வதற்கு அல்ல என்கிற கருத்தையும் காட்சிகளின் மூலம் கூறியுள்ளார். பவிஷ் -நாகதுர்கா இடையில் மலரும் காதலை உணர்ச்சி பூர்வமாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பவிஷ் செல்வராகவனிடம் தனக்கு நடந்ததைப் பற்றி கூறும் போது தனக்கு வரிசையாகக் கதை சொல்லத் தெரியாது பிய்த்துப் பிய்த்துதான் கதை சொல்லத் தெரியும் என்று கூறினாலும் இயக்குநர் கூறியுள்ள கதை, எந்தக் குழப்பமும் இல்லாமல் இருக்கிறது.
ப்ளாஷ் பேக் முறையில் செல்லும் கதையைப் படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த் குழப்பமின்றித் தொகுத்து இயக்குநர் சொல்ல வந்ததை பார்வையாளர்களிடத்தில் கொண்டு சேர்த்து விடுகிறார்.

புதுமுகங்கள் அதிகம் கொண்ட இந்தப் படத்திற்கு வெற்றி தான் முக்கியம். எனவே வணிக ரீதியிலான அனைத்து அம்சங்களையும் கலந்து உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்.அவர் கொண்ட நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தெய்வீகக் காதல் தொடங்கி பல்வேறு பரிணாமங்களை காதல் அடைந்து இருக்கிறது. சமகாலத்தில் காதலை இளைஞர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? அதன் போக்கு எப்படி உள்ளது? என்பதைப் பற்றி ஒரு இழையை எடுத்துக்கொண்டு கதையாக மாற்றி ஒரு முழுப் படமாக இயக்கி வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்.எனவே இந்தப் படத்தை இக்கால இளைஞர்களால் புரிந்து கொள்ள முடியும்.இதிலிருந்து ஒரு பாடம் பெறவும் முடியும்.

மொத்தத்தில், ‘லவ் ஓ லவ்’ இளைஞர்கள் மட்டுமல்ல பெற்றோரும் பார்க்க கூடிய அளவிற்கு ஒரு பொழுது போக்குப் படமாக இருக்கிறது.