‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்பட விமர்சனம்

நடிகர் டாம் ஹாலண்ட் இதில்பீட்டர் பார்க்கர் அதாவது ஸ்பைடர்-மேனாக நடித்துள்ளார். இவருடன் ஜெண்டயா, ஜேக்கப் படலான், ஜான் பெர்ன்தால், சேடி சிங்க், மார்க் ரஃபலோ மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியிருக்கிறார்.

இப்படக்கதை ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ உருவாக்கிய ஸ்பைடர்-மேனை அடிப்படையாகக் கொண்டது.ஒளிப்பதிவு – பிரெட் பாவ்லக் , இசை – மைக்கேல் ஜியாக்கினோ,ஆடை வடிவமைப்பாளர் – சான்யா மில்கோவிக் என்று தொழில்நுட்பக் கரங்கள் இணைந்துள்ளன.
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளத்தில்வெளியாகி இருக்கிறது. மார்வெல் காமிக்ஸ் உருவாக்கிய சூப்பர்ஹீரோ ஸ்பைடர்-மேன் ஹாலிவுட் ரசிகர்களில் இதயங்களை ஆக்கிரமித்த ஒன்றாகும்.

ஸ்பைடர் மேன் என்கிற பாத்திரத்தின் திகைக்க வைக்கும் சாகசங்களை அடிப்படையாகக் கொண்டது இப்படம்.

சீக்குவல் என்று கூறப்படுகிற தொடர் திரைப்பட வடிவங்களில் இது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஸ்பைடர்-மேன் தொடரின் 4வது படமாக அமைந்துள்ளது.அதுமட்டுமல்ல MCU ஸ்பைடர்-மேன் திரைப்பட தொடரின் 38வது படமாகவும் உள்ளது.

ஹாலிவுட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த பீட்டர் பார்க்கர், ஸ்பைடர்-மேன் என்ற நாயகனாக நியூயார்க் நகரை அடையாளம் தெரியாமல் பாதுகாக்கிறார். மேலும் தனது மனித சக்திக்கு அப்பாற்பட்ட சூப்பர் ஆற்றல்கள் ஆச்சரியமானதும் ஆபத்தான திமான பரிணாம மாற்றத்திற்கு உட்படுகிற சூழல் வருகிறது. இந் நிலையில், ஒரு சக்திவாய்ந்த புதிய அபாய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்.

பீட்டர் பார்க்கருக்கு இது ஒரு புத்தம் புதிய நாள். தன்னையே மறந்து தனது நினைவுகளையே சேமித்து வைத்திருக்காத ஓர் உலகத்தில் ஸ்பைடர் மேன் இருக்கிறார்.ஸ்பைடர் மேன் ஆக முழு நேர குற்றங்களை எதிர்த்துப் போராடும் பீட்டர், தன் பழைய நண்பர்கள் தன்னைத் தாண்டி வாழ்க்கையில் முன்னேறுவதைப் பார்க்கும் அழுத்தத்தால், தன்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை சந்திக்கிறார். ஆனால் அந்த மாற்றமே, நகரத்தையும் அவர் நேசிப்பவர்களையும் அச்சுறுத்தும் – யாராலும் பார்க்க முடியாத ஒரு சக்திவாய்ந்த வில்லனை – எதிர்கொள்ள உதவுகிறது . உலகம் பீட்டர் பார்க்கரை மறந்திருக்கலாம், ஆனால் அவர் அவர்களை மறக்கவில்லை. அவர்களிடம் சொல்ல ஏதோ இருக்கிறது.இப்படி செல்கிறது கதை.

இது வழக்கமான அதீத ஆற்றல் கொண்ட கதாநாயகன் மற்றும் நாயகனுக்குச் சளைக்காத ஆற்றல் கொண்ட வில்லன் மோதல் கொண்ட கதை என்று கூற முடியாது.இதனை வெறும் ஆக்சன் படம் என்ற சட்டத்திற்குள் அடக்க முடியாது .ஏனென்றால் இதில் நாயகனாக வரும் இளைஞனின் காதல், இழப்புவலி, தனிமை ,ஏக்கம், தியாகம் போன்ற மெல்லுணர்வுகளும் சொல்லப்பட்டுள்ளன.அந்த வகையில் மனித உணர்வுகளைக் கூறி பார்ப்பவர்கள் இதயத்தைத் தொடுகிற படமாகவும் மாறி இருக்கிறது. இதில் பிரம்மாண்டங்கள், சாகசங்கள் ,விழிகளை விரிய வைக்கும் காட்சிகள் இருந்தாலும் கூட மனதைத் தொடும் காட்சிகள் அதிகம்.
அவ்வகையில் இந்தக் கதை முழுவதும் பீட்டர் பார்க்கரின் அகவுலகத்தை மையம் கொண்டு உருவாகி உள்ளது. உலகத்தையே ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிய பிறகு, அந்த உலகமே தன்னை மறந்துவிட்டது என்ற வலியை சுமந்து வாழும் மனிதனின் வேதனை, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிப்பது நிஜம்.

டாம் ஹாலண்ட் தனது நடிப்புக்கான ஆதாரப் பட்டியலில் இதில் வெளிப்படுத்தி உள்ள சிறந்த நடிப்பை முன்னணியில் வைத்திருக்கலாம்.அவர் கண்களில் தெரியும் பாவனைகளில் இருந்து தனிமை,ஏக்கம், கோபம், காதல் , கடமை என ஒவ்வொரு உணர்வும் ரசிகர்களை சென்றடைகின்றன. அதன் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமாக மாறுகிறார்.எனவே சாகசமான காட்சிகளில் மட்டுமல்ல சாந்தமான காட்சிகளிலும் அவர் ஈர்க்கிறார்.அவர் திரையை மட்டுமல்ல ரசிகர்கள் மனங்களையும் ஆக்கிரமித்து விடுகிறார்.

படத்தில் வருகிற வில்லன் சினிமா சூத்திரங்களுக்குள் அடங்காதவன். மார்க் ரஃபலோவின் புரூஸ் பேனர், ஜான் பெர்ன்தாலின் பனிஷர் ஆகியோரின் வருகை ரசிகர்களுக்கு சிறந்த திரை விருந்தாக மாறுகிறது.
அதைவிட யாரும் எதிர்பாராத வகையில் இரண்டு முக்கியமான மார்வல் கதாபாத்திரங்களின் தோற்றமும் வருகையும் ரசிகர்களுக்கு போனஸ் பரிசு.

இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன், ஆக்சன் காட்சிகளுக்கும் அகவுணர்வை வெளிப்படுத்தும் காட்சிகளுக்கும் முக்கிய இடம் கொடுத்து சமநிலையைக் காப்பாற்றியுள்ளார்.

திரைக்கதையின் பயணம் சில இடங்களில் நிதானமாகவும் சில இடங்களில் டாப் கியர் வேகத்திலும் செல்கிறது.

காதலியை நினைத்து ஏங்கும் பீட்டர், நட்புகளால் மறக்கப்பட்ட வலி, அத்தை மேயின் நினைவுகள், தனது மனித தன்மைக்கும் சிலந்தி சக்திக்கும் இடையேயான உள்போராட்டம் எனப் பல தளங்களில் கதை நகர்கிறது. இதனால் இது வெறும் சூப்பர் ஹீரோ திரைப்படமாக இல்லாமல், மனித மனவுணர்வுகளைப் பேசும் படைப்பாக ஆழம் கொண்டு விடுகிறது .

இப்படத்தை வெறும் காமிக் புத்தக உலகின் இன்னொரு அத்தியாயம் இன்று எளிதாக கூறிவிட முடியாது.அந்தச் சிவப்பு நீல நிறமுள்ள முகமூடிக்குள் மறைந்திருக்கும் மனிதனின் இதயத் துடிப்பை உணர வைக்கும் மறக்க முடியாத திரையனுபவம்.

மொத்தத்தில் இந்த ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படம் தடதடக்கும் திரைக்கதை ,உணர்ச்சிமிக்க காட்சிகள், வியக்க வைக்கும் பிரம்மாண்டம் என்று ஒரு முழு நீள ஹாலிவுட் விருந்தாக மாறியிருக்கிறது