‘அநீதி’ விமர்சனம்

இயக்குநர் வசந்தபாலன் எழுதி இயக்கியிருக்கும் படம் அநீதி.
அர்பன் பாய்ஸ் ஸ்டியோஸ் சார்பில் உருவாகியுள்ளது.எஸ்.பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார், பரணி, அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷாரா, சாந்தா தனஞ்ஜெயன், டி.சிவா, அறந்தாங்கி நிஷா நடித்துள்ளனர்.

படத்துக்கு இசை-ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு-எட்வின் சாகே, வசனம்-எஸ்.கே.ஜீவா, எடிட்டர்-ரவிக்குமார்.எம், கலை-சுரேஷ் கல்லேரி

மீல் மங்கி என்ற நிறுவனத்தில் உணவு டெலிவரி மேனாக பணிபுரிகிறான் திருமேனி.சிறுவயது அனுபவங்களால் சற்றே மனப்பிறழ்வு கொண்டவன்.அதாவது
அவனுக்கு அப்செசிவ்-கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர் என்கிற உளவியல் சிக்கல் இருப்பது தெரிய வருகிறது. யாரைப் பார்த்தாலும் கொல்ல வேண்டும் என்று தோன்றும் மனப்பிரச்சினை.இதனால் பலரையும் அவ்வப்போது அடித்து தாக்கி விடுகிறான்.அவன் நகரத்தில் உள்ள ஆடம்பரமான வீட்டுப் பணிப்பெண் சுப்புலட்சுமி யைச் சந்திக்க நேர்கிறது. அவளது அன்பால் ஆறுதல் அடைகிறான். உணவு விநியோகம் என்ற பெயரில் அவளை அடிக்கடி சந்திக்கிறான். இந்தச் சந்திப்பு பின்பு காதலாக மாறுகிறது. எதிர்பாராத விதமாக சுப்புலட்சுமியின் முதலாளி அம்மா மர்மமான முறையில் இறந்து விடுகிறார். இறப்பு கொலையாக மாறி அந்தக் கொலைப்பழி இவர்கள் மீது விழுகிறது.
அந்த மரணம் அவர்கள் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதுதான் ‘அநீதி’ திரைப்படத்தின் கதை.

அர்ஜுன்தாஸ் தான் திருவாக நடித்துள்ளார். துயரம், வேதனை, ஏக்கம் ரெளத்ரம்,வன்மம் , ஆவேசம் என பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரது குரல் கூடுதல் பலம் .

அடுத்து, சுப்புலட்சுமியாக வரும் துஷாரா விஜயன் யதார்த்தமாக நடித்து அந்த பாத்திரத்திற்குச் சிறப்பு சேர்த்துள்ளார்.

இரண்டாம் பாதியில் ஃப்ளாஷ்பேக் காட்சியில் தோன்றும் காளி வெங்கட்டின் கதாபாத்திரம் கவனிக்க வைக்கிறது. பாசமிகு தந்தையாக அவரின் நடிப்பு பரிமளிப்பு சபாஷ் பெறும்.

வனிதா விஜயகுமார், பரணி, அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷாரா, சாந்தா தனஞ்ஜெயன், டி.சிவா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தோன்றும் காட்சிகள் நாடகத்தனம்.அவர்களின் மிகை நடிப்பு அலுப்பு .

 

எஸ்.கே.ஜீவாவின் உணர்வு பூர்வமான வசனம், எட்வின் சாகே ஒளிப்பதிவு மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசையும் பின்னணி இசையும், பபத்துக்குப் பலம்.

எடிட்டர் ரவிக்குமார், கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால் பார்வையாளர்களுக்கு அலுப்பூட்டி இருக்காது.

உணவு டெலிவரி செய்பவர்கள் தினந்தோறும் சந்திக்கும் இன்னல்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

கதாநாயகன் நாயகி இடையே மலரும் காதல் காட்சிகளில், காளி வெங்கட் தோன்றும் முன்கதைக் காட்சிகளில் மட்டும் வசந்த பாலன் தெரிகிறார்.

இயக்குநர் வசந்தபாலன் படம் என்றால் இருக்கும் எதார்த்தமான காட்சிகளும் உண்மையை உணர்த்தும் சம்பவங்களும் இதில் காணப்படவில்லை.
இது ஹாரர் சஸ்பென்ஸ் பட சீசன் என்பதால் அந்தப் பாணியில் அவர் பயணம் செய்திருப்பது அவருக்குப் பொருந்தவில்லை.
ஒருவனுக்கு மன அழுத்தம் இருந்தால் ஊரில் உள்ளவனை எல்லாம் கொலை செய்ய நினைப்பது என்பது எந்த காலத்தின் நீதி, நியாயம்? இது அநீதி இல்லையா?

டெலிவரி பாய்ஸ் வாழ்க்கையைச் சித்தரிப்பதா? மனப்பிறழ்வு கொண்டவரின் பாத்திரத்தை முன்னிறுத்துவதா என்று குழப்பம் வந்திருக்க வேண்டும்.இயக்குநர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.வசந்த பாலன் தனக்குள்ள முத்திரை கொண்ட பாதையில் பயணம் செய்வது நல்லது. அதிலிருந்து அவர் தடம் மாறி இருப்பதால் இறுதியில் சாதாரண ஆக்சன் படம் போல் அமைந்து இப்படம் ஏமாற்றம் தருவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

.