அஜித்தேஜ், ஸ்ரீ ஸ்வேதா,பாக்யராஜ், தலைவாசல் விஜய்,நமோ நாராயணன்,செம்புலி ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எம் சுந்தர் எழுதி இயக்கியுள்ளார். . ஒளிப்பதிவு -கோபிநாத் துரை, இசை – சச்சின் சுந்தர்,படத்தொகுப்பு – முத்தமிழன் ராமு, கலை இயக்கம் – டி.கே. தினேஷ்குமார், ஸ்டண்ட் ராகேஷ் ராக்கி. முரளி கபீர் தாஸ் தயாரித்துள்ளார்.
நமோ நாராயணன் வளர்ந்து வரும் அரசியல்வாதியாக இருக்கிறார். அவர் தனக்கு எம்எல்ஏ சீட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன் கட்சிக்குள் இருக்கும் போட்டியாளரையே போட்டுத்தள்ள முயற்சி செய்கிறார் .அவரது மகன் தான் ஆதித்யா. அமைச்சராக
இருக்கும் பாக்யராஜ் ,நமோ நாராயணனின் மகனுக்குத் தன் பெண்ணைக் கொடுத்து சம்பதியாக்க நினைக்கிறார்.
நாயகன் ஆதித்யாவிற்கு அஸ்ட்ரோ பிசிக்ஸில் ஆர்வம், டெலஸ்கோப் வழியாக ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்படி பார்த்துக் கொண்டிருக்கும்போது எதிர் வீட்டு மொட்டை மாடியில் தோன்றும் கதாநாயகியைப் பார்த்து கவனம் கலைகிறார். அதுவே காதலாகிறது.
ஒரு புராதன டெலஸ்கோப் வாங்கி அவர் ஆராய்ச்சி செய்கிறார்.ஆனால் இந்த டெலஸ்கோப்பில் ஒரு மர்மம் இருக்கிறது.இதுசார்ந்து தலைவாசல் விஜய் தோன்றும் சுளீர் ப்ளாஷ்பேக்கும் உண்டு.அதன் வழியே அவர் யாரை உற்றுப் பார்க்கிறாரோ அவர்கள் எப்போது சாகப் போகிறார் என்று அவருக்குத் தெரிகிறது.அப்படி அவர் பார்த்துச் சொல்வதெல்லாம் நடக்கிறது.தனது காதலியைப் பார்க்கிறார். அப்போது அவர் ஒரு வாரத்தில் இறப்பார் என்று தோன்றுகிறது.அத்துடன் இடைவேளை வருகிறது.தனது காதலியின் ஆயுட்காலத்தை அறிந்து கொண்ட காதலன் ஆதித்யா பதற்றம் ஆகிறார்.எதனால் காதலி மரணத்தின் அருகே சென்று கொண்டிருக்கிறார் என்று அறியும் போது வேறு ஒரு திசையில் கதை பயணிக்கிறது.அதன் பிறகு மனதை கனக்க வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.
தன் உயிர்க் காதலியை எப்படியாவது காப்பாற்ற நினைக்கிறார்.காதலியோ இதை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று துணிந்து இறங்குகிறார். அதற்குப் பிறகு என்ன ஆகிறது? என்பதுதான் ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் மீதிக் கதை.
சூரிய கிரகணத்தைப் பார்த்தால் கண் பார்வை பறிபோய்விடும், வேறு எதாவது அசம்பாவிதம் நடக்கும் என்றுதான் கிரகணத்தின் போது எதுவும் சாப்பிடக்கூடாது என்பார்கள். இந்த நம்பிக்கையை வைத்து ஒரு கற்பனையாக இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.நம்ப முடியாத கதையாக இருந்தாலும் இதைப் பார்ப்பவர் நம்பும்படியாக படமாக்கி இருக்கிறார்கள்.
நாயகன் ஆதித்யாதன் கண்ணால் பார்க்கும் ஒவ்வொருவரது மரண தருணத்தை அவர் சொல்லும் போதும் அப்படி நடக்கும்போதும் நமக்கும் பதற்றம் பற்றிக் கொள்கிறது.
நாயகனாக ஆதித்யா பாத்திரத்தில் வருகிற அஜித் தேஜ் தோற்றம் நடிப்பு துறுதுறுப்பு துள்ளல் என்று அந்தப் பாத்திரத்திற்கு பொருத்தம் தான்.குறை சொல்ல முடியாத நடிப்பையே வழங்கி உள்ளார்.
ஸ்ரீ ஸ்வேதா நாயகியாக அந்த நிலா பாத்திரத்தில் வருகிறார்.சுமாரான தோற்றத்தில் வந்து கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.நாயகனின் நண்பனாக வரும் அந்த முகத்தையும் மறக்க முடியாது.
அமைச்சராக வரும் பாக்யராஜ் சற்றே தனது கலகலப்பை விட்டு விட்டு அரசியல்வாதியாகக் கண்டிப்பு காட்டி நடித்துள்ளார்.
கதாநாயகனின் தந்தையாக வரும் நமோ நாராயணன் அசல் அரசியல்வாதியாக வந்து வில்லத்தனம் காட்ட முயற்சி செய்கிறார்.நாயகன் தந்தையாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் சளைக்காமல் வில்லத்தனம் காட்டியுள்ளார்.
கதை நிகழ்விடங்கள் குறிப்பிட்ட சில இடங்களில் நடந்தாலும் அந்தக் குறை தெரியாமல் படத்தைக் கொண்டு சென்றுள்ளார்கள்.
நாய்க் காதலர்கள் நாய் விரோதிகள் என்று அவர்களாகவே சித்தரித்துக் கொண்டு மோதிக் கொண்டுள்ள இந்த நிலையில் வெறிநாய்களுக்கு எதிராக மக்கள் திரண்டு உள்ள இந்த நிலையில் வெளிநாய்க்கடி எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தப் படத்தின் முடிவு காட்டுகிறது.வெறிநாய்க்கடி பற்றிய அசட்டு தைரியம் தவறானது என்று கூறி விழிப்புணர்ச்சியையும் இந்தப் படம் ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் இந்த ‘அந்த 7 நாட்கள்’ வேறொரு கோணம் வேறொரு பார்வை.


