மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவில் நடிகை ரோஜா பேசியதாவது:-
“இந்தப் படத்தின் கதையை கேட்டவுடனே இது ஒரு அழகான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை உணர்ந்தேன். குடும்ப பாசம், உறவுகள், காதல், உணர்வுகள் என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த ஒரு நல்ல படமாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. ‘அன்பே டயானா’வில் நான் நடித்த பாத்திரம் என்னைப் பிரதிபலித்தது போல் இருந்தது.எனக்கு ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து செட்டிலான பெண் வேடம், என் நிஜ வாழ்க்கைப் பாத்திரம் போலவே இருந்தது.
குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் அனைவரின் மனதையும் தொடும். அது மிகவும் வித்தியாசமாகவும், நிறைவான அனுபவத்தை தரக்கூடியதாகவும் இருக்கும். அந்தக் காட்சி ரசிகர்களை நிச்சயம் கவரும்.
இயக்குநர் பாரி இளவழகன் மிகவும் திறமையானவர். அவருடைய உழைப்பும், படத்தின் மீது இருந்த அர்ப்பணிப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. அவருக்கும், கதாநாயகி ரம்யாவுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளனர். குறிப்பாக கேமரா வேலை மிகவும் அருமையாக இருந்தது. பல காட்சிகள் ஒரே ஷாட்டில் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளன.
‘அன்பே டயானா’ முழுக்க முழுக்க குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்தப் படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”


