‘அமரம்’ திரைப்பட விமர்சனம்

ராஜன் தேஜஸ்வர் , அகர்வால், சாய் தீனா ,ஜார்ஜ்,மரியான், நாகி நீடு ,கல்கி ராஜா, ஹரிஷ் பெராடி ,வாசுதேவன் முரளி நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் திரு அருள் கிருஷ்ணா.இசை – மிக்கி ஜெ .மேயர் ,
பாடல்கள் – சௌந்தரராஜன். K,ஒளிப்பதிவு – பரத் குமார், எடிட்டிங் – R. ஸ்ரீராமர் ,கலை இயக்கம் – ஜனார்த்தனன்,
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்.

திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க சி.ஆர்.ராஜன் தயாரித்திருக்கிறார்.டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்தப் படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதி கிராமத்தில் வாழ்வாதாரத்திற்கு சிரமப்படும் நிலையில் மக்கள் இருக்கிறார்கள். அங்குள்ள இளைஞர்களின் வீரத்தைத் தவறாக அணுகிக் கூலிப்படையாக  ஒரு கும்பல் பயன்படுத்துகிறது . அதன்படி அவர்கள் கூலிக்குக் கொலை செய்து வருகிறார்கள்.அவர்களில் ஒருவன் தான் அருகன் .தனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத ஒருவரை காசுக்காகக் கொலை செய்கிறான்.அப்படிக் கொலை செய்யப்பட்ட ஒருவரின் மகள் ஷர்மிளா அருகனைத் தேடிக் கொலை செய்ய வருகிறாள்.கொலை செய்ய அவனை ஏற்பாடு செய்த ஆட்களே அவளிடம் அவனைக் காட்டிக் கொடுக்கிறார்கள். அருகில் சென்று பார்க்கும் போது எதிரியை விட துரோகி மோசமானவர்கள் என்று அவளுக்குத் தெரிகிறது.அதற்கு பிறகு ஷர்மிளா என்ன முடிவெடுக்கிறாள் என்பது தான் 150 நிமிடங்கள் கொண்ட ’அமரம் ’படத்தின் மீதிக்கதை.

ஜாதி மாறி காதலிக்கும் வாலிபனை கல்லூரிக்குள் அருகன் புகுந்து வெட்டுகிற பரபர காட்சியோடு தொடங்குகிறது படம்.

படத்தில் அருகனாக நடித்திருக்கும் ராஜன் தேஜஸ்வர் முதல் பாதி படம் வரை முரட்டுத்தனமான தோற்றம் வெறித்த விழிகள் என்று வருகிறார்.தான் அடிமை போல் நடத்தப்படுவதையும் அதிலிருந்து மீள முடியாததையும் எண்ணி புழுங்குபவராக வருகிறார்.அந்த அழுத்தத்தை மனதில் தேக்கிக் கொண்டவராக இருக்கிறார் .படத்தின் இரண்டாவது பாதியில் தான் அவர் பேச ஆரம்பிக்கிறார்.அந்த மண்ணின் மைந்தனாக அவர் சரியாகவே வெளிப்பட்டுள்ளார். படத்தின் நாயகியாக வரும் ஐரா அகர்வால் அநியாயத்தைக் கண்டு பொங்குபவராக நேர்மையை வெளிப்படுத்த அஞ்சாதவராக வருகிறார்.தன் தந்தையைக் கொலை செய்த கொலைகாரனைப் பழிவாங்கும் பாத்திரத்தில் சரியாகப் பொருந்தி நடித்துள்ளார்.அவரது தோற்றமும் நடிப்பும் குறை இல்லை. சாய் தீனா வழக்கம் போல இதில் எதிர்மறைப் பாத்திரத்தில் வருகிறார்.ஜார்ஜ் மரியான் வித்தியாச  தோற்றத்தில் மொசாட் பாத்திரத்தில் நடித்துள்ளார். நாகி நீடு எம்எல்ஏவாக வருகிறார். அவருக்குள் ஒளிந்திருக்கும் அரசியலும் பழி வாங்கும் குணமும் வெளிப்படும் பாத்திரத்தில் நன்றாக  நடித்துள்ளார். மேலும் கல்கி ராஜா, ஹரிஷ் பெராடி , வாசுதேவன் முரளி ஆகியோரும் நடித்துள்ளனர்.

கிழக்குத் தொடர்ச்சி மலையாக காட்டப்படும் மலைப்பகுதியில் இயற்கை சூழலில் பரத் குமாரின் கேமரா அழகாகப் பதிவு செய்துள்ளது.கேமராவின் கோணத்தில் அந்தக் காட்சிகளில் மக்களின் வறுமையும் இயலாமையும் தெரிகிறது.அங்கே மறைந்துள்ள வன்முறையின் நிறத்தையும் காட்டுகிறது. அந்த மலைவழிப்பாதைகள் கரடு முரடான பகுதிகளில் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது கேமரா.

படத்தில் ஏகப்பட்ட கொலைகள் நடக்கின்றன.வன்முறைக் காட்சிகள் அதிகம் உள்ளன. கூலிக்கு கொலை செய்யும் செயலை நியாயப்படுத்தும் வசனங்கள் உள்ளன. அது துரதிர்ஷ்டவசமானது.தமிழ்த்திரையில் இதுவரை  சொல்லப்படாத கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதரத்தை கதைக்களத்துடன் சேர்த்து சொல்லியிருக்கிற விதம் நன்று. அனால் ஒரு கட்டத்தில் இயக்குநர் சொல்ல வந்த பிரதான விஷயம் எது என்ற குழப்பம் நேரிடுகிறது.

மிக்கி ஜெ .மேயரின் பின்னணி இசை கதையில் நிகழும் பரபரப்பைச் சரியான விதத்தில் தூக்கி நிறுத்துகிறது.

மொத்தத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலை மக்களின்  வாழ்வியலைப் பதிவு செய்வதாக இறங்கி அதிலிருந்து விலகி வெட்டுக்குத்து  கொலை என்று ரத்தம் வழிய ஒரு இயற்கை சூழ் பின்னணி கொண்ட ஆக்சன் படமாக மாறி உள்ளது.