‘உயிர் தமிழுக்கு’ விமர்சனம்

அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், ராஜ்கபூர்,  இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, கஞ்சா கருப்பு,சரவண சக்தி  நடித்துள்ளனர். தயாரித்து
இயக்கி உள்ளார் ஆதம்பாவா . இசை வித்யாசாகர், ஒளிப்பதிவு தேவராஜ்,எடிட்டிங் – அசோக்.

உயிர் தமிழுக்கு என்கிற தலைப்பைப் பார்த்ததும் கதாநாயகன் தமிழ் மொழிக்காகப் போராடி ஒரு போராளியாக உயிரைக் கொடுப்பவரோ என்று நினைக்க வேண்டாம்.கதாநாயகியின் பெயர் தமிழ்ச்செல்வி.அவர் மீது உயிரையே வைத்துக் காதலிக்கும் கதாநாயகனின் கதைதான் இது.

‘உயிர் தமிழுக்கு’  கதைதான் என்ன?
படம் ஆரம்பித்ததும் முதல் காட்சியிலேயே ஆனந்தராஜ் காலையில் நடைப்பயிற்சி போகும்போது மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார்.  அவர் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொருளாளர்.அவரின் மகள் தான் சாந்தினி. அவரைக் காதலிக்கிறார் அமீர். அவரோ எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்தவர். கட்சிப் பகைமையால் அமீர் தான் அந்தக் கொலையைச் செய்தார் என சந்தேகப்படுகிறார்கள்.தமிழ்ச்செல்வியான சாந்தினியும் இதை நம்பி அமீரை வெறுக்கிறார்.
இறுதியாக அமீர் தன் மீதான கொலைப்பழியை எதிர்கொண்டு அதிலிருந்து எப்படி மீள்கிறார்? சாந்தினியோடு எப்படிச் சேர்கிறார் என்பதே இப்படத்தின் கதை.

அரசியல் கதை என்று நினைக்க வைத்து ஒரு காதல் கதையில் அரசியல் கலந்து உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆதம்பாவா. இடையிடையே கேலி கிண்டல் நகைச்சுவை நையாண்டி அரசியல் வசனங்கள் என்று கலந்து தூவியுள்ளார்.

கேபிள் டிவி நடத்தும் பாண்டியனாக வரும் அமீர் படிப்படியாக அரசியலில் வளர்கிறார்.அவர் அரசியல் செய்வது எல்லாமே தமிழ்ச்செல்வியை அடைவதற்குத் தான் என்று இருக்கிறது. அமீர்,  இமான் அண்ணாச்சி,சரவண சக்தியுடன் பேசும் வசனங்கள் அரசியல் நையாண்டி .முதல் பாதியில் அமீர் காதல் காட்சிகளில் அழகாக நடித்துள்ளார் .அமீரின் அரசியல் வசனங்கள் சிரிப்பு மூட்டினாலும் சில இடங்களில் எல்லை தாண்டி உள்ளார். நாயகி தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் சாந்தினி ஒரு கதாநாயகி அரசியல்வாதியாக மாறும் காட்சிகளிலும் அமீரை எதிர்த்து சவால் விடும் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார்.டைமிங் காமெடியில் இமான் அண்ணாச்சி கவனம் ஈர்க்கிறார்.
ஆனந்தராஜ், ராஜ் கபூர்,கஞ்சா கருப்பு பேசும் வசனங்கள் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கின்றன.

படத்தைக் கலகலப்பாக மாற்றி இருப்பது ஆங்காங்கே அரசியல் கட்சிகளையும் கொள்கைகளையும் கிண்டல் செய்யும் வசனங்கள் தான்.சமீப காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் படத்தில் பேச வைத்துச் சிரிக்க வைக்கிறார்கள்.சமாதி முன் தியானம், சபதம்,மத்திய அரசின் தயவில் 4 ஆண்டுகள் ஆட்சி, பீச்சில் தலைவர்கள் சமாதி, இவிஎம் மிஷின்,ஆன்மீக அரசியல், நடிகர்களின் அரசியல் போன்றவை வசனங்களில் பகடி செய்யப்படுகின்றன.’உயிர் தமிழுக்கு’  லாஜிக்கை மறக்க வைத்துக் கலகலப்பூட்டுகிறது என்பதுதான் இயக்குநரின் வெற்றி.

நீண்ட இடைவெளிக்குப் பின் வந்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.தன்னால் முடிந்ததைச் செய்துள்ள அவரது இசை ஓகே ரகம்.   முழு நீள மசாலாப் படமாக இந்த அரசியல் கலந்த காதல் படம் உருவாகி உள்ளது.ரசிகர்கள் கலகலப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதால் போர் அடிக்காமல் இந்த வணிகப் படத்தைப் பார்க்கலாம்.