‘ரசவாதி’ விமர்சனம்

அர்ஜுன் தாஸ் ,தன்யா ரவிச்சந்திரன் ,சுஜித் சங்கர் ,விஜே ரம்யா, ரிஷிகா நடித்துள்ளனர். சாந்த குமார் இயக்கி உள்ளார்.

போலீஸ் அதிகாரி பரசுராஜ் பிரச்சினைக்குரிய பெற்றோரால் மனம் பாதிக்கப்பட்டவர்.அவரால் யாரும் மகிழ்ச்சியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.அப்படி ஒரு மன அழுத்தம் கொண்டவர்.கடலூரில் ஒரு வழக்கில் இருந்து தப்பிக்க தனது உயர் அதிகாரியைக் கொலை செய்து அதனை மறைத்துவிட்டு கொடைக்கானலுக்கு மாற்றலாகி வருகிறார் . அதே கொடைக்கானலில் சித்த மருத்துவராக இருக்கிறார் சதாசிவ பாண்டியன்  சாந்த சொரூபி. யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல், இயற்கையை நேசிப்பவர்.

தன் சொந்த பிரச்சினை காரணமாக ஐடி வேலையை விட்டு கொடைக்கானலில் உள்ள ஒரு ஹோட்டலில் மேனேஜராக வேலைக்கு வருகிறார் சூர்யா (தன்யா ரவிச்சந்திரன்), அவரும் சதாசிவனும் காதலில் விழுகின்றனர். உளவியல் சிக்கல் கொண்ட பரசுராஜ்,இந்தக் காதலர்களை பிரிப்பதற்காகப் பல்வேறு நரித்தனமான சதித்திட்டங்களை மேற்கொள்கிறார்.

பரசுராஜின் உள்நோக்கத்துக்கான பின்னணி என்ன? சிக்கல்களிலிருந்து நாயகன், நாயகி இருவரும் மீண்டார்களா? – இதுவே ‘ரசவாதி’ சொல்லும் கதை.

ரோட்டில் இறந்து கிடக்கும் புறாவுக்கு இயற்கை முறையில் சிகிச்சையளித்து காப்பாற்றி பறக்க விடுகிறான் நாயகன். இன்னொரு புறம், தன் வீட்டில் பொறியில் சிக்கிய எலியைக் கூட எரித்துக் கொல்லும் வில்லன். முரண்பட்ட இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பழிவாங்கும் கதை.

நாயகன் நல்லவர் என்றும், வில்லன் ஒரு சைக்கோ என்பதையும் காட்ட ஓரிரு காட்சிகள் போதாதா?மீண்டும் மீண்டும் வரும் காட்சிகள் சலிப்பூட்டுகின்றன.அர்ஜுன் தாஸ் – தன்யா இடையிலான காதல் காட்சிகளிலும் வலுவில்லை.

நாயகன் அர்ஜுன் தாசின் தோற்றமும் குரலுமே அவருடைய பாத்திரத்துக்கு அடர்த்தி சேர்த்து விடுகிறது. அர்ஜுன் தாஸின் இறுகிய முகமும், குரலும் இயல்பாகவே அவரை அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றச் செய்துவிடுகின்றன.ஆர்ப்பாட்டம் இல்லாமல் அனாயாசமாக நடித்து ஸ்கோர் செய்கிறார் அர்ஜுன் தாஸ்.

படம் முழுக்க கவனிக்க வைக்கும் ஒரே அம்சம் வில்லனாக வரும் சுஜித் சங்கரின் நடிப்பு.சிறுவயதில் குடும்ப வன்முறை சூழலில் வளரும் குழந்தை எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினை எப்படி வளர்ந்தபிறகும் அவனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தனது சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

நாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரன் ஒளி வீசும் கண்களுடன் வந்து பார்வையாளர்களை வசிகரிக்கிறார்.  நாயகனின் நண்பனாக கல் குவாரியை எதிர்க்கும் கேரக்டரில் வரும் ரிஷிகாந்த், மனநல மருத்துவராக வரும் விஜே ரம்யா, ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர்.சிறிதுநேரமே வந்தாலும் சிறப்பான நடிப்பால் கவனிக்க வைக்கிறார் ரேஷ்மா வெங்கடேஷ்.  நாயகன் பின்னணிக்கும், வில்லனின் பின்னணிக்கும் இடையே கிளைமாக்ஸில் இணைத்து முடிச்சு போட்ட விதம் சிறப்பு.

எஸ்.தமனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசைதான் காட்சிகளைத் தூக்கி நிறுத்துகிறது. சரவணன் இளவரசுவின் கேமரா கொடைக்கானலுக்கு மேலும் அழகு கூட்டியுள்ளது.

சுவாரஸ்யமான ஒரு ஒன்லைனை எடுத்துக் கொண்டவர்கள் அதற்கேற்ற பலமான திரைக்கதை அமைக்காதது ஒரு குறை. பட உருவாக்கத்தில் உள்ள நேர்த்தி திரைக்கதைகள் இல்லாதது உறுத்தல். படமாக்கலில் காட்டிய சிரத்தையைத் திரைக்கதையிலும் காட்டிருந்தால் இந்தப் படம் மேலும் உயர்ந்திருக்கும்.