என் படங்களில் ஸ்கிரிப்ட்தான் ஹீரோவாக இருக்கும் :சித்தார்த்

எட்டாக்கி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சித்தார்த் தயாரித்து கதாநாயகனாக நடிக்க, அவருடன் அவினாஷ் ரகுதேவன் , சனந்த் ஆகிய இரு இளைஞர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ஜில் ஜங் ஜக்.

மூவரும் முறையே நடிக்கும் நாஞ்’ஜில்’ சிவாஜி , ‘ஜங்’குலிங்கம் , ஜாகுவார் ‘ஜக்’ ஆகிய மூன்று கதாபாத்திரப் பெயர்களின் சுருக்கமே இந்த ஜில் ஜங் ஜக்.

ஷங்கர் இயக்கி 1994 ஆம் ஆண்டு வெளிவந்த காதலன் படத்தில் வடிவேலு பேசும் ஜில் ஜங் ஜக் வசனம், அன்று இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது . அதே ஷங்கரின் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சித்தார்த் இப்போது நடிக்கும் ஒரு படத்துக்கு ஜில் ஜங் சக் என்று பெயர் வைத்து இருப்பது எவ்வளவு பொருத்தம் .

அதிலும் இந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகும் அந்தப் படத்தின் தயாரிப்பாளரே சித்தார்த்தான் என்பது இன்னும் அழகு

இவர்களுடன் ரோலெக்ஸ் ராவுத்தர் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார் டத்தோ ராதாரவி . தவிர ”ஷூட் த குருவி” என்ற பாடலின் சில வரிகளை பாடியும் இருக்கிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியே இல்லை என்பது குறிப்பிடத்தக்க வித்தியாச விஷயம்.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பல குறும்படங்களை இயக்கிய தீரஜ் வைத்தி . இசை விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா , படத்தொகுப்பு கர்ட்ஸ் ஸ்நீடர்.

படத்தின் பாடல்களை சித்தார்த் , இசை அமைப்பாளர்கள் அனிருந், சந்தோஷ் நாராயணன் , நடிகை ஆண்ட்ரியா என்று பல பிரபலங்கள் பாடி இருக்கிறார்கள்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட இந்தப் படத்தின் ஃ பர்ஸ்ட் லுக் டீசரும் , பல முன்னணி நடிகர்கள் வெளியிட்ட இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களும் யூ டியூபில் லைக்குகளை அள்ளிக் குவித்துக் கொண்டு இருக்கின்றன.

இப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன.

“எங்கள் படக் குழுவின் யூத் ஐக்கான்” என்ற அடைமொழியோடு சித்தார்த்தால் பேச அழைக்கப்பட டத்தோ ராதாரவி வழக்கம் போல தனது கலகலப்பான பேச்சால் விழாவை நகைச்சுவையால் அதிர வைத்தார் .

” பொதுவா நான் எதுக்கும் பயப்படாதவன் . ஆனா இந்த பெருமழையில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பார்த்து நான் அசந்துட்டேன் . ஆனா நம்ம சித்தார்த் இந்த பெருமழையில், எந்த விளம்பர வெளிச்ச எதிர்ப்பார்ப்பும் இல்லாம, கடலூருக்குப் போய்….. தனி ஆளா அவ்வளவு நிவாரண உதவிகள் செய்தார் . அந்த மனசு யாருக்கு வரும் ?

நான் சித்தார்த்தை ஏதோ தெலுங்குப் பையன்னே நினைச்சுட்டு இருந்தேன் . ஆனா அவரு நம்ம ஆளு என்பதில் ரொம்ப சந்தோசம் .

பொதுவா நான் வருஷம் ஏதாவது ஒரு நல்ல படத்துக்கு சம்பளம் வாங்காம வேலை செய்யறது வழக்கம் . இந்தப் படத்துக்கு அப்படி செய்யலாம்னு பார்த்தேன் . ஆனா தம்பி சித்தார்த் வற்புறுத்தி சம்பளம் கொடுத்துட்டார் .

இந்தப் படத்துல கதாநாயகியே இல்லை என்பது ஒரு குறையே இல்லை . ஹீரோயின் இல்லாம படம் பிரம்மாதமா வந்து இருக்கு . இபல்லாம் கதாநாயகி இருந்தாதான் பிரச்னை .

ஏன்னா, இந்த மாதிரி பிரஸ் மீட்டுக்கு கூப்பிடனும் . அது வந்து கால் மேல கால் போட்டு உட்காரும் . அதை ஒருத்தர் விவகாரமா போட்டோ புடிச்சு போடுவார் . அதைப் பார்த்து மகளிர் சங்கங்கள் கொதிக்கும் . கடைசியில சித்தார்த் வீட்டு வாசல்ல வந்து கோஷம் போடுவாங்க.

ஆனா இப்ப அந்த பிரச்னை எல்லாம் வராது பாருங்க .

இந்த படத்துல என்னை ஒரு பாட்டு பாட வச்சுட்டாங்க . நான் சும்மா படிச்சேன் . அதை விஷால்சந்திர சேகர் அதை பாட்டா ஆக்கிட்டாரு இப்போ அதை பார்த்துட்டு ஒருத்தன் பம்பாய்ல இருந்து போன் பண்ணி ‘யுவர் வாய்ஸ் ஈஸ் சோ சூப்பர் . எனக்கு ஒரு பாட்டு பாடிக் கொடுங்க’ன்னு கூப்பிடறான் . நானும் பாடப் போகப் போறேன் . எங்க குடும்பத்துல எல்லாருக்கும் குரல் எப்படி இருக்கும்னு உங்க எல்லாருக்கும் தெரியும் . ஆனா என்னையே இந்த படத்து ஆளுங்க பாடகர் ஆக்கிட்டாங்க .

முன்னூத்திப் பத்து படங்கள்ல நடிச்சுட்டேன். 35 வருஷத்துக்கும் மேல நடிச்சுட்டு இருக்கேன் . இப்போ கூட ஓடிக்கிட்டு இருக்கும் இறுதிச் சுற்று , அரண்மனை -2 படங்கள்ல என்னோட நடிப்பை எல்லாரும் பாராட்டுறாங்க .

ஆனா இந்த ஜில் ஜங் ஜக் படம் வந்த பிறகு நான் நடிச்சதுலேயே பெஸ்ட் படம் இதுதான் னு எல்லாரும் சொல்வாங்க . அந்த அளவுக்கு இது சிறப்பான படம் ” என்றார் .

இயக்குநர் தீரஜ் வைத்தி தன் பேச்சில் “இந்தப் படத்துக்கு என்னோடு சேர்ந்து திரைக்கதை எழுதி இருக்கும் மோகன் ராமகிருஷ்ணனும் நானும் மூணாம் வகுப்புல இருந்து ஒண்ணா படிக்கிறவங்க . வளர்ந்த அப்புறமும் எங்களுக்குள் இருந்த குழந்தை மனசை நாங்க விடல . அந்த உணர்வோடு ஒரு ஸ்கிரிப்ட் பண்ணுவோம்னு எல்லாத்தையும் நகைச்சுவையா டீல் பண்ணி நாங்க இந்த கதையை பண்ண ஆரம்பிச்சோம் .

அப்புறம் வேறொரு ஸ்கிரிப்ட் பண்ணினோம் ஆனாலும் இந்த ஸ்கிரிப்ட் ஒரு நிலையில் நல்லா உருவாகி வந்தது. .

அப்புறம் குறும்படங்கள் எடுத்துட்டு இருந்த காலத்துல சித்தார்த் சார் நடிச்ச எனக்குள் ஒருவன் படம் பார்த்தேன் . அந்தப் படத்துல அவர் முகத்தை எல்லாம் மாத்திட்டு சிரததையோட நடிச்சதைப் பார்த்து, என் கதையிலையும் அவர் நடிச்சா பொருத்தமா இருக்கும்னு நினைச்சேன் .

போன ஜனவரியில் அவரைப் பார்த்து கதை சொன்னேன் . “நல்ல கதை . கண்டிப்பா பண்ணலாம் . ஆனா இதை தயாரிக்கும் தைரியம் உள்ள தயாரிப்பாளரைக் கொண்டு வாங்க . நான் பண்றேன்னு சொன்னார் . நானும் போனேன் .

ஆனா ரெண்டே நாள்ல போன் பண்ணி” நானே புரடியூஸ் பண்றேன்”னு சொன்னார் . அடுத்த ஒரே மாசத்தில் ஷூட்டிங் போய்ட்டோம் .

படம் ரொம்ப நல்ல வந்திருக்கு . என்னதான் வளர்ந்தாலும் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் ஒரு குழந்தைத் தன்மை குணம் இருக்கும் இல்லியா? . அந்த குழந்தை குணத்தோட கதை பண்ணி இந்த படம் பண்ணி இருக்கோம் . நீங்களும் ஒரு குழந்தையின் மன நிலையில் வந்தா மனசார ரசிச்சுட்டுப் போலாம் ” என்றார் .

சித்தார்த் பேசும்போது ” ஒரு குறும்பட இயக்குநர் சினிமா இயக்குநரா வந்த முதல் படம் காதலில் சொதப்புவது எப்படி . அதன் ஹீரோ நான்தான் .அது தொடர்கிறது . தீரஜ் வைத்தியும் குறும்படங்கள் இயக்கியவர்தான்.

இந்தப் படத்தில் சில ஆண்கள் பெண் வேடத்தில் வருவது போல காட்சிகள் உண்டு . ஆனால் கதாநாயகி இல்லை அது ஒரு குறையாகவே இல்லாத அளவுக்கு படம் நல்லா வந்திருக்கு.

இந்தப் படத்துல பெரிய மெசேஜ் தத்துவம் எல்லாம் எதுவும் இல்ல . குடும்பத்தோட வந்து உட்காந்தா நல்லா வாய் விட்டு சிரிச்சு மனம் விட்டு ரசிச்சிட்டு போலாம்.

எனது எட்டாக்கி நிறுவனம் மூலம் தொடந்து அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்கிறேன் .அதுல இரண்டு படங்கள் விரைவில் ஆரம்பிக்கிறேன் . என் படங்களில் ஸ்கிரிப்ட்தான் ஹீரோவாக இருக்கும் . அதனால் நான் நடிப்பேன் . இல்லன்னா ஆரம்ப நிலையில் உள்ள ஹீரோக்கள் அல்லது புதுமுக ஹீரோக்கள் நடிப்பார்கள் . ஏன்ன பெரிய ஹீரோக்களுக்கு என்னால் சம்பளம் கொடுக்க முடியாது .

ஆனா புதுசு புதுசா நிறைய டெக்னீசியன்களை படைப்பாளிகளை அறிமுகப் படுத்த ஆசை இருக்கு. இந்த ஜில் ஜங் ஜக் படமே அப்படிதான்

இது தவிர ரைட்டர்ஸ் லேப் என்ற பெயரில், நிறைய கதை திரைக்கதை ஆசிரியர்களை உருவாக்கவும் போகிறேன் . 18 வயசு முதல் 35 வயசு வரை உள்ள பலரை செலக்ட் பண்ணி அவங்களுக்கு பயிற்சி கொடுக்க இருக்கேன் . அவங்க வேலையே நிறைய கதை திரைக்கதைகளை உருவாக்குவதுதான் .

அவங்க டைரக்டரா எல்லாம் ஆக மாட்டங்க . எழுத்து மட்டும்தான் . ஏன்னா நல்ல கதைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் அது ரொம்ப நல்ல விஷயமா இருக்கும்னு நம்பறேன் .

இது எல்லாத்துக்குமான ஆரம்பத்தை இந்த ஜில் ஜங் ஜக் படம் கொடுத்ததுதான் சந்தோஷமான விஷயம் ” என்றார் , வரும் பன்னிரண்டாம் தேதி திரைக்கு வருகிறது இந்தப் படம்.” என்றார்.