‘ஒன்ஸ்மோர்’ திரைப்பட விமர்சனம்

அர்ஜுன் தாஸ் ,அதிதி ஷங்கர், ட்ராவிட் செல்வம், தேவதர்ஷினி, சோனா ஒலிக்கல்,அனுஷா பிரபு ,ஜெகபர், மோனிஷ் இளமாறன், வர்ணிகா பரத் ,அருண்குமார் மணி ,சௌந்தர்யா மனோகரன், சித்ரா லக்ஷ்மணன் ,தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர் ,தயாளன், மகேஸ்வர், குட் நைட் நாகராஜன் ,ரித்திக் கிருஷ்ணா ,ரமா ராஜேந்திரா ,லட்சுமி சரவணன்,சுதர்சன் காந்தி  நடித்துள்ளனர்.

விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.

ஒன்ஸ்மோர் என்றால் மீண்டும் ஒரு முறை என்று அர்த்தம் .தான் காதலித்த பெண் காரணம் சொல்லாமலேயே உறவைத் துண்டித்துக் கொண்டு பிரிந்து போகிறாள், அதனால் மனம் உடைந்த காதலன் 8 ஆண்டுகள் இருண்ட வாழ்வு வாழ்கிறான். அப்படிப்பட்டவனை அன்போடு ஒருத்தி அணுகி அவனது மகிழ்ச்சியை மீட்டெடுக்கிறாள்.அனைத்தையும் மறந்து அவளுடன் இணையலாம் என்று முடிவு எடுத்து திருமணம் வரை சொல்கிறது.திருமணம் நெருங்கும்  நிலையில் பழைய காதலி வந்து மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒரு முறை என்னை ஏற்றுக் கொள்வாயா? என்று கேட்கிறாள். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது தான் 137.10 நிமிடங்கள் கொண்ட ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் மீதிக் கதை.தோல்விகள், கசப்புகள், விரக்தி என்று இறுகிய மனம் கொண்ட ரகுவரன் பாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் அறிமுகம் ஆகிறார் . ஒரு சிறு துளி அசைவு கூட இல்லாமல் தனது மன அழுத்தத்தை விழிகளிலேயே காட்டி விடுகிறார்..ஆவேச வசனங்கள் பேசாமல் உடைந்த குரலின் மூலமே அந்த பாத்திரத்தின் வலியை உணர வைக்கிறார் அர்ஜுன் தாஸ்.அப்படிப்பட்டவர், படத்தின் முன் கதையில் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகள் நடிப்பில் முற்றிலும் மாறுபட்டதாக ஆச்சரியமூட்டுகின்றன.எதையும் எதார்த்தமாக நம்புகிறவரிடம் ஒரு பெண் தன்னைத் துண்டித்து விடுவதாக கூறும்போது அந்த அதிர்ச்சியைப் பற்றி அவர் பக்கம் பக்கமாகப் பேசவில்லை. புரியாது குழம்புவதைச் . சிறு அசைவுகளில் கூறி விடுகிறார்.இக்கட்டான சூழலில் அதிதி தன்னைக் கசப்பிலிருந்து மீட்கும்போது ஒரு பூ மலர்வது போல் அந்த மகிழுணர்வை அந்த முக பாவங்களில் காட்டி அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அர்ஜுன் தாஸ்.இவ்வாறாக  தோற்றத்திலும் குரலிலும் உடல் மொழியிலும் அந்தப் பாத்திரத்தை அப்படியே கண் முன் நிறுத்துகிறார்.  அதிதி ஷங்கர் ,அஞ்சலி பாத்திரத்தில் இதில் வருகிறார் . சிக்கெனத் தோற்றம் ,சிரிக்கும் கண்கள் ,துறுதுறு சுபாவம், எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் மனப்போக்கு,யாரிடமும் தானே முன்வந்து பேசுகிற  குணம் போன்றவற்றை வெளிப்படுத்தி அந்த பாத்திரத்தை அழகாக மாற்றிக் காட்டியுள்ளார்.

சோனா பலிக்கல் இந்திரா பாத்திரத்தில் நடித்திருக்கிறார் .அர்ஜுன் தாஸின் முன்னாள் காதலியாக வந்து உரையாடி உறவாடிச் செல்கிறவர், பிரிவதற்கான எந்தக் காரணத்தையும் ஆழமாக சொல்லவில்லை .
தனது வசீகரமான தோற்றத்தால் கவர்ந்தாலும் அவரது முடிவால் அந்தப் பாத்திரத்தின் மீது எதிர்மறை நிழல் படிந்து விடுகிறது. படத்தில் கதாநாயகன் வில்லன் என்று எல்லாம் ஒன்றும் இல்லை. சூழல்கள் தான் எதிரே நிற்கின்றன. பகைமை பாராட்டுகின்றன என்று சொல்ல வேண்டும்.

மற்றபடி நாயகன் அர்ஜுன் தாஸ் ,அவர்  காதலித்த ஒருத்தி, அவரைக் காதலித்து விட்டுச் என்ற ஒருத்தி என்று மூன்று பிரதான பாத்திரங்களை வைத்துக்கொண்டு துணைப் பாத்திரங்களைப் பக்கபலமாக வைத்துக் கொண்டு இந்தத் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.

அதன்படி இதில் நடித்திருக்கும் அனுஷா பிரபு ,ஜெகபர், மோனிஷ் இளமாறன், வர்ணிகா பரத் ,அருண்குமார் மணி , சௌந்தர்யா மனோகரன், சித்ரா லக்ஷ்மணன் ,தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர் ,தயாளன், மகேஸ்வர், குட் நைட் நாகராஜன் ,ரித்திக் கிருஷ்ணா ,ரமா ராஜேந்திரா ,லட்சுமி சரவணன்,சுதர்சன் காந்தி  போன்ற பலரும் அந்தக் கதை ஓட்டத்திற்குத் துணை நின்று இருக்கிறார்கள்.

இனிமையான இந்த அழகான காதல் கதைக்குக் கண்முன் நடமாடும் சித்திரங்களாக உரிய பாத்திரங்களை நம் முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் .அந்த இளமையின் துறுதுறுப்பும் பரபரப்பும் என அனைத்து உணர்வுகளையும் தனது காட்சிகளின் மூலம் பார்வையாளர் மனதில் கொண்டு சேர்க்கிறார்.

இப்பபடத்தில்  ஹேஷம் அப்துல் வஹாப் அமைத்துள்ள இசை பெரும் பலமாக மாறி உள்ளது.சமீப காலப் படங்களில் பாடல்கள் கூச்சல்களாக வரும் சூழலில் இந்த படத்தில் ஏராளமான பாடல்கள் இருந்தாலும் வரிகள் புரியும்படி உள்ளன.புதிய இசை முகமாக அறிமுகமாகி இருக்கிறார்  வஹாப். பாடல் வரிகளை இயக்குநரே எழுதியிருக்கிறார். வரிகளிலும் கவிதைத் தன்மையும் நவீனமும் கூடி அமைந்துள்ளன.எத்தனை பாடல்கள் இருந்தாலும் கூட அவை கதை சொல்பவையாக இருப்பதால் வேகத்தடையாக உணர வைக்கவில்லை என்பது சிறப்பு.

படத்தில் வரும் இயக்குநரின் நேர்த்தியான எளிமையான கூர்மையான வசனங்கள் பளிச்.

தான்தயாரிக்கும் படங்களில் வித்தியாசமான கதைகளுக்கு வாய்ப்பு கொடுத்து தனது பட நிறுவனத்திற்கு ஒரு முத்திரையைத் தேடிக் கொண்டிருக்கும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் யுவராஜ் கணேசனை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

அர்ஜுன் தாஸின் முன்னாள் காதலியாக உறவாடிச் செல்கிற இந்திரா  பிரிவதற்கான  காரணத்தைத் தெளிவாகச் சொல்லாதது ஒரு குறை. படத்தின் முதல் பாதியில் இருந்த அதே இறுக்கத்தை இரண்டாம் பாதியிலும் பராமரித்திருக்கவேண்டும்.படத்தின் பிற்பாதியில் சற்று நீளத்தைக் குறைத்து இருந்தால் படத்தின்வேகம் இன்னும் கூடி, கட்டுக்கோப்பாக அமைந்திருக்கும். மற்றபடி ஒன்ஸ்மோர் தாராளமாக ஒருமுறை பார்க்கக் கூடிய வகையில்அமைந்துள்ள படம் என்றே கூற வேண்டும்.

ஒன்ஸ்மோர் இளைஞர்களைக் கவரும் கதையம்சம் கொண்ட ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம் என்று கூறலாம்