‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ விமர்சனம்

இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த், சாருகேஷ், சேனாதிபதி தர்மா, கோபி, சுதாகர், ஹரிஜா, ஆஷிக் உசேன், நந்தகோபால கிருஷ்ணன், அப்துல் லீ, ஜாங்கிரி மதுமிதா, ஜார்ஜ் மரியன், முனிஷ்காந்த், ரித்விகா, சந்தோஷ் பிரியன், ஷா, விஜய் குமார் ராஜேந்திரன், சத்தியமூர்த்தி என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ளது.கௌஷிக் இசையமைத்துள்ளார்.
யாஷிகா ஆனந்த்தும் ஹரிஜாவும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். கோபியும் சுதாகரும் நண்பர்களுடன் வசித்து வருகின்றனர். அவர்களில் இரண்டு பேர் திரைப்பட இயக்குநர் கனவில் இருந்து வருகிறார்கள், அதற்கான முயற்சிகள் செய்து வருகிறார்கள். இப்படி நான்கு விதமாக இருக்கும் இவர்கள் ஒரு திரையரங்கிற்குப் படம் பார்க்க வருகின்றனர், அங்கு சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன .அதிலிருந்து எப்படி தப்பித்து வெளியே வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
பேய் பயமுறுத்தியதெல்லாம் அந்தக் காலம் .பேய் சிரிக்க வைப்பதுதான் இந்தக் காலம் அந்த வகையில் இந்தப் பேய்ப் படமும் நகைச்சுவையாக உருவாகி உள்ளது. இயக்குநர் ரமேஷ் வெங்கட்.  நிறைய யூடியூபர்களைத் தோன்ற வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் பலர் தற்போது பிரபலமாக இருந்தாலும் படம் உருவான சமயத்தில் யாருமே பிரபலம் இல்லை.  கோபி மற்றும் சுதாகரின் காமெடிகள் ஆங்காங்கே நன்றாக ஒர்க் ஆகி உள்ளது.  எரும சாணி விஜய் மற்றும் ஹரிஜாவின் காட்சிகளும் நன்றாகவே வந்துள்ளன. யாஷிகா ஆனந்த் மட்டும் சற்று கவர்ச்சியாக படம் முழுக்க வருகிறார்.  முனிஷ்காந்த் எதிர்மறைப் பாத்திரத்தில் வித்தியாச வில்லனாக வருகிறார். எல்லா காட்சிகள் மூலமும் சிரிக்க வைக்கிறார்கள் ஆனால் சில இடங்களில் தான் சிரிக்க முடிகிறது. கடந்த சில ஆண்டுகளாகப் பேய்களை வைத்து நிறைய படங்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளதால் பல காட்சிகள் அலுப்பைத் தருகின்றன. முதல் பாதி ஓரளவுக்கு கடந்து விட்டாலும், இரண்டாம் பகுதி நிறைய இடங்களில் நம்மை சோதிக்கிறது.  கௌசிக்கின் இசையில் பேய்ப் படத்திற்கு ஏற்ற பின்னணி இசையைக் கொடுத்துள்ளார். 
லாஜிக் பார்க்காமல் பேய்ப் படங்களை விரும்பி ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்.