‘கட்டில் ‘விமர்சனம்

மரத்தாலான கட்டில் என்பது வெறும் ஜடப்பொருளோ திடப்பொருளோ அல்ல அது குடும்பத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு உயிர்ப் பொருள் என்று சொல்கிற கதை.

தஞ்சைப் பகுதியில் பெரிய குடும்பமாக வாழ்ந்து வந்த அவர்கள் ,பாரம்பரியப் பெருமை கொண்ட தங்கள் பழைய வீட்டை விற்க முடிவெடுக்கிறார்கள். முந்தைய தலைமுறையினரால் வீட்டை ஒரு கோயிலை போல் பாவித்து வாழ்ந்த அந்த குடும்பத்தில் அடுத்த தலை முறையோ அதை ஒரு வியாபாரப் பொருளாக்கி விடுகிறார்கள். ஆனால் குடும்பத்தில் இருக்கும் இளைய மகன் கணேசனுக்கு அதில் உடன்பாடு இல்லை அவனது மகன் சிறுவன் சுரேஷுக்கும் விருப்பமில்லைதான்.

வீட்டை விற்றாலும் அதில் உள்ள கட்டிலை விற்க மறுக்கிறான் கணேசன். தனது பங்குக்குரிய தொகையில் அந்த கட்டிலையும் விலை வைத்து கழித்துக் கொண்டு பெற்றுக் கொண்டு விடுகிறான்.
தனக்கான ஒரு வீடு அமையும் வரை இருக்கட்டும் என்று அந்தக் கட்டிலைப் பழைய பொருள்களை நேசித்துப் பாதுகாக்கும் ராமையா அதாவது இந்திரா சௌந்தரராஜன் வீட்டில் கொடுத்து விடுகிறான். ஆனால் அந்தக் கட்டிலை அந்த வீட்டினர் வெளியே தெரியாமல் விலை பேசி விற்று விடுகிறார்கள்.அந்தக் கட்டிலைத் தேடி செல்லும் நாயகனின் கதையும், அதற்கும் குடும்பத்திற்கும் உள்ள உறவும் தொடர்பும் பற்றிய முன் கதையும் பின்னிப்பிணைந்து திரைக்கதையாக வடிவம் எடுத்துள்ளது.இதற்கிடையில் குடும்பம், காதல் ,பாசம் சென்டிமென்ட் என்று ஒரு சினிமாவுக்கான அம்சங்களைக் கலந்து இந்தப் படத்தை எடுத்து கதாநாயகனாக நடித்து இயக்கித் தயாரித்துள்ளார் இயக்குநர் இ.வி. கணேஷ் பாபு.

படத்தில் காட்டப்படும் அந்த பெரிய வீடும் கட்டிலும் தஞ்சைப் பகுதியின் பின்னணிக் காட்சிகளும் கொண்டு வழக்கமான மசாலாப் படங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறது இந்தப் படம்.

மூன்று தலைமுறைப் பாத்திரங்களை ஏற்று நடித்து, படத்தை இயக்கி உள்ளார் இ.வி.கணேஷ் பாபு .குறை சொல்ல முடியாத தோற்றத்திலும் நடிப்பிலும் வருகிறார். தன்னால் முடிந்ததைச் செய்துள்ளார்.நாயகி தனலட்சுமியாக கட்டிப் பெட்டித்தனமும் பாசமும் நிறைந்த ஒரு மனைவியாக வந்து அனுதாபங்களை அள்ளுகிறார் சிருஷ்டி டாங்கே.

கணேசனின் தாயாக நடித்துள்ள கீதா கைலாசம் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார்.கணேஷ் பாபு. சிருஷ்டி டாங்கே தம்பதியின் மகன் சுரேஷாக வரும் அந்தச் சிறுவன் மாஸ்டர் நித்தீஷும் தனது துறுதுறுப்பான நடிப்பால் கவர்கிறான்.
புராதன பொருட்களை வாங்கி பாதுகாக்கும் ராமையா பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் ஒரு நடிகராக அழுத்தமாக மனதில் பதிகிறார். அவரது பாத்திரச் சித்தரிப்பு சிறப்பு.அவருக்கு நேர் விரோதமாக இருக்கும் குடும்ப உறுப்பினர்களும் தங்கள் நடிப்பால் கவனம் பெறுகிறார்கள்.கணேஷ்பாபுவின் அண்ணனாக ஓவியர் ஸ்யாம் வருகிறார். முதல் படம் என்று தெரியாத அளவான நடிப்பை வழங்கி உள்ளார். சகோதரியாக வரும் மெட்டிஒலி சாந்தியும் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார்.
குழந்தைப் பாசத்துக்கு ஏங்கும் ஏழைத் தாயாக செம்மலர் அன்னம் உணர்ச்சிகரமாக நடித்துள்ளார்.
கணேசனின் வளர்ந்த மகன் சுரேஷ் ஆக விதார்த் கௌரவத் தோற்றத்தில் வந்தாலும் ஆங்காங்கே அவர் வருவது படத்தில் நிறைவளிப்பதாக உள்ளது.

மூன்று தலைமுறைப் பாத்திரங்களைத் தொட்டுக்காட்டும் இந்தப் படத்தில் மூன்று தலைமுறைக் கவிஞர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பாரதியார், வைரமுத்து , மதன் கார்க்கி ஆகியோரின் பாடல்கள் வருகின்றன.

இயல்பான ஒளியில் காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளார் வைடு ஆங்கிள் ரவிசங்கரன்.
தனது முரட்டுத்தனமான வாத்தியங்கள் மூலம் பயமுறுத்தும் ஸ்ரீகாந்த் தேவா இந்தப் படத்தில் இதமான பின்னணி இசை மூலம் வருடுகிறார்.

குடும்பமே கோயிலாக கருதிடும் கருத்தில் வைரமுத்து எழுதியிருக்கும் ‘கோயிலிலே குடியிருந்தோம்’ பாடல் ஒரு முத்திரைப்பாடலாகும்.அந்தப் பாடலே இந்தப் படத்தின் கருவை விரிவாக்கித் தருகிறது.
ஒரு பொருள் இழப்பின் வலியைச் சொல்கிற இந்தக் கதையில் படம் முழுக்க ஒரே சோகமே இழையோடுகிறது. இடையிடையே கலகலப்பான காட்சிகளை இணைத்திருந்தால் படத்தில் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.
மொத்தத்தில் கட்டில் பாரம்பரியப் பெருமையை மறக்கக்கூடாது என்று சொல்கிற படம்.