தனுஷ் , மமிதா பைஜு,கே. எஸ் .ரவிக்குமார்,ஜெயராம், ஸ்ரீஜா ரவி ,கருணாஸ், பிருத்வி பாண்டியராஜன்,சுராஜ் வெஞ்சரமூடு,எம் எஸ் பாஸ்கர் , ஆடுகளம் நரேன் நடித்துள்ளனர்.
விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். எழுத்து: ஆல்பிரட் பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ராஜா.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சண்டை இயக்குநர்: தினேஷ் காசி, படத்தொகுப்பு:ஸ்ரீஜித் சாரங்,பாடல்கள்: யுக பாரதி, உமாதேவி ,தனுஷ் ,அருண் ராஜா காமராஜ்,கார்த்திக் நேத்தா ,அறிவு.
வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.
ஆசை காட்டி வங்கிகளில் கடன் கொடுக்கிறார்கள். கடன் கட்ட முடியாத ஏழ்மையைப் பயன்படுத்திக் கொண்டு வட்டி மேல் வட்டி போட்டு மீள முடியாத துயரத்தில் ஏழைகளை ஆழ்த்துகிறார்கள்.அப்படிப்பட்ட ஓர் ஏழை தங்களிடம் சுரண்டப்பட்ட பணத்தை தானும் அதே போல் சுரண்டி அடைக்க முயலும் கதைதான் இந்த ‘கர’.
வீட்டில் அப்பாவின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்ட கரசாமி என்கிற கர, அதாவது தனுஷ் களவாடுவதில் கை தேர்ந்தவராக மாறிவிடுகிறார் . படம் தொடங்கியதுமே இதுதான் தனது கடைசித் திருட்டு என்று சொல்லிவிட்டு வருங்காலத்தில் காதலியுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று கூறுகிறார். அப்படிச் சொல்லிவிட்டு பிரித்வி பாண்டியராஜனுக்குத் திருட்டு கற்றுக் கொடுக்கும் ஒரு காட்சி. ஒரு எம்எல்ஏ வீட்டில் புகுந்து பூட்டை உடைத்துக் கொள்ளையடிக்கிறார்கள். சிக்கிக் கொள்கிறார்கள்.ஒரு வழியாகத் தப்பித்து வெளியே வந்து ஆந்திரா சென்று ரேணிகுண்டாவில் ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கிறார் .அவருக்கு ஒரு காதலியும் உண்டு. மிக ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்கிறார். ஓட்டலில் எத்தனை நாள் தான் அடிமையாக வேலை பார்ப்பது என்றும், தான் ஒரு ஹோட்டல் தொழில் தொடங்க நினைக்கிறேன் என்றும் நினைக்கிறார்.தனக்கு நிலம் இருப்பது நினைவுக்கு வந்து ஊர் சென்று தந்தையைச் சந்திக்கிறார், தந்தையோ கலங்கிப் போயிருக்கிறார். ஓடிப்போன மகனைத் தேடி அலைந்து களைத்து சோர்வாக இருக்கும் அவர் தனுஷை அங்கேயே தங்கும்படி கூறுகிறார். இவரோ நிலத்தை விற்றுப் பணம் வேண்டும் என்று கேட்கிறார் .அவர் நிலம் தான் தனக்கு உயிர் என்பதோடு நிலம் அனைத்தும் வங்கிக் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.இப்படி அந்த ஊர் மக்களின் நிலங்கள் எல்லாம் பெரிதாக விவசாயம் செய்யவும் டிராக்டர் வாங்கவும் என்று பஞ்சவன் யூனியன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருக்கின்றன. அடமானம் வைத்துவிட்டுச் செய்வது தெரியாமல் தவிக்கிறார்கள். கடன் வட்டிக்கு மேல் வட்டி போய்அடமானம் வைக்கப்பட்ட பொருள் மூழ்கிப் போகும் நிலையில் இருக்கிறது.வங்கி ஜப்தி செய்ய ஆரம்பிக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் தனுஷ் அந்த வங்கியிலேயே கொள்ளை அடித்து அந்தக் கடனை அடைக்க முயல்கிறார். அவரது முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் பரபரவென 161.13 நிமிடங்கள் செல்லும் ‘கர’ படத்தின் மீதிக் கதை.
படம் 1990 இல் திருவெறும்பூரில் தொடங்குகிறது.பிறகு ரேணிகுண்டா , ராமநாதபுரத்தில் முதுகுளத்தூர், சாயல்குடி எனப் பல்வேறு பகுதிகளில் கதை பயணம் செய்கிறது.
படத்தில் கர என்கிற பாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார் . மிகை நடிப்பு காட்டாமல் அடக்கி வாசித்து இருப்பது அந்தப் பாத்திரத்தில் நம்மோடு ஒன்றச் செய்கிறது. திருடுவதை ஒரு கலையாகச் செய்யும் போதும் அதில் கைதேர்ந்தவராக இருப்பவராகக் காட்டிக் கொள்ளும் போதும் காதலியிடம் தனது தொழிலை விட்டு விடுவதாகக் கூறும் போதும் தந்தையிடம் பணம் கேட்கும் போதும் ஏழ்மைக்கும் சுய மரியாதைக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் போதும் இறுதியில் தனது தவறை உணர்ந்து தாயின் காலில் சரணடையும் போதும் என்று பல்வேறு தருணங்களில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திக் காட்சிகளில் பளிச்சிட்டுள்ளார் .வங்கிக் கொள்ளைக்காட்சிகளில் அவர் நிதானமாகக் கையாளும் விதம் ரசிகர்களைக் கவரும்.சண்டைக்காட்சியில் நடித்தாலும் அது மிகையாகத் தெரியாமல் நடித்துள்ளது சிறப்பு.
தனுஷின் காதலியாக வரும் நடிகை மமிதா பைஜூ குறைந்த அளவிலான காட்சிகளில் வந்து இருந்தாலும் அவரை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவரும் குறை இல்லாமல் செய்துள்ளார்.
தனுஷின் கூட்டாளியாக முருகேசன் பாத்திரத்தில் வரும் பிருத்வி பாண்டியராஜன் நினைவில் பதியும் பாத்திரத்தில் நடித்துள்ளார் .மாவட்ட காவல் அதிகாரி பரதனாக வரும் சுராஜ் வெஞ்சரமூடு வங்கிக் கொள்ளைக் கேஸை எடுத்துக்கொண்டு பெயர் பெற நினைக்கிறார். அவர் படம் முழுக்க சிகரெட் பிடித்தபடியே வந்து அனைவரும் மனதையும் புகைய வைக்கிறார்.
சிரித்துக் கொண்டே கார்ப்பரேட் வில்லத்தனம் செய்யும் வங்கி அதிகாரியாக வரும் ஜெயராம் சைலன்ட் வில்லனாக வந்து படத்தில் மிரட்டி இருக்கிறார்.
படத்தில் தனுஷின் அப்பா கந்தசாமி ஆக வரும் கே எஸ் ரவிக்குமார் பாத்திரம் சிறப்பு அவரது அந்தத் தோற்றமே பாதி நடிப்பை வழங்கிவிடுகிறது.நல்ல குணச்சித்திர நடிப்புக்கு அவர் தயாராகி விட்டார்.
தனுஷின் மாமா காசி பாத்திரத்தில் வரும் கருணாஸ் தனது பாமர பார்வையுடன் உடல்மொழி நடிப்பு என அனைத்திலும் அந்த மண்ணின் மைந்தராகவே வந்து அசத்தியுள்ளார். பாத்திரத்தை விட்டுத் தடம் புரளாமல் தேர்ந்த நடிப்பை வழங்கி உள்ளார்.
ஸ்ரீஜாரவி தனுஷின் அம்மாவாக வருகிறார்.அவரா இவர் என்று தோன்ற வைக்கும் தோற்றத்தில்
வயதான விவசாயியாக வாழும் நம்மாழ்வாராக எம் எஸ் பாஸ்கர் வந்து மனதில் பதிகிறார்.ஒரு போலீஸ்காரராக வங்கிக்குள் புகுந்த அப்பாவித்தனமான சில காரியங்கள் செய்யும் ஆடுகளம் நரேன் அந்த நேரத்தில் ,கதை தடதடக்கும் அந்த தருணத்தில் பரபரப்பு கூட்டுவது மட்டுமல்ல சிரிக்கவும் வைக்கிறார்.
படத்தில் கதை கேட்கும் ரகத்திலான படப்பிடிப்பிடங்களில் படப்பிடிப்பை நடத்தி மிகை ஒளி இல்லாமல் கதையின் பயணத்திற்கு உதவியுள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.
இக்காலத்தில் வரும் பல பாடல்கள் அடையாளம் இல்லாமல் வெற்றியும் இல்லாமல் கடந்து போய் போகின்றன .இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் எளிமையான மெட்டுகளில் அருமையான பாடல்களைக் கொடுத்துள்ளார். இதில் அற்புதமான வரிகளைக் கொண்ட பாடல்களும் அமைந்துள்ளன.
சற்றும் தொய்வில்லாமல் படத்தை நேர்த்தியாகத் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜீத் சாரங்.
படத்தில் நடுங்க வைக்கும், திகைக்க வைக்கும் ,மகிழ வைக்கும், நெகிழ வைக்கும், கலங்க வைக்கும் காட்சிகள் உள்ளன.படத்தில் நடித்திருக்கும் நடிகர்களை அவர்களின் பிம்பத்திலிருந்து விலக்கிக் கழித்து கதாபாத்திரமாக மாற்ற இயக்குநர் முயன்று இருப்பது சபாஷ் போட வைக்கிறது.
படத்தில் வங்கிக் கொள்ளையடிக்கும் காட்சிகள் பரபரப்பைக் கூட்டிநம்மை இருக்கை நுனிக்குக் கொண்டுவரும் காட்சிகள். கொள்ளைகள் சார்ந்த போலீஸ் விசாரிக்கும் நடைமுறைகள் பற்றிய விரிவான விவரணங்கள் இயக்குநரின் உழைப்புக்குச் சாட்சியம் கூறுகின்றன.தூர்தர்ஷன் செய்திகளின் இசையை உரிய இடத்தில் ஒலிக்க விட்டுள்ளது ரசிக்க வைக்கிறது.
நிசப்தமான இடத்தில் திருடும்போது விழும் சிறு ஓசை கூட கலவரப்படுத்தும். அப்படிப்பட்ட ஒலிகளைப் படத்தில் காட்டி மேலும் பரபரப்பைக்கூட்டி உள்ளார்கள்.படத்தில் ஒளியைப் போலவே ஒலியையும் சரியாகப் பயன்படுத்தியுள்ள விதம் பாராட்டுக்குரியது.
விவசாயிகள் கடன் வாங்கி நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி மூழ்குவது பற்றிப் படத்தில் பேசப்படுகிறது.
இந்தக் காலத்தில் அலைபேசி வழியே வலிய அழைத்து நமக்குக் கடன் தருகிறார்கள் .தயாரிப்புகளையும் அப்படியே நமது தலையில் கட்டுகிறார்கள்.எளிதில் கிடைக்கிறது என்று வாங்கி கடனாளியாவது இந்தக் க காலத்தில் சகஜமாகி வருகிறது. அது எவ்வளவு ஆபத்தானது, நமது சபலத்திலும் பேராசையிலும் கடனில் விழுந்தால் நாம் மீள முடியாத நரகத்தில் விழுவோம் என்பதையும் இந்த கதையின் மூலம் செய்தியாகப் பெற முடியும்.
கடன் வாங்குவது எளிது.திருப்பி செலுத்துவது தான் கடினம் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிற இந்தப் படம்,கடன் கொடுப்பவர்களின் நய வஞ்சகத்தையும் சுட்டிக்காட்டி உள்ளது.அந்த வகையில் இது அனைவருக்குமான படமாக மாறி இருக்கிறது.
மொத்தத்தில் ‘கர’ பரபரப்பும் சுவாரசியமும் கொண்ட திரை அனுபவமாக அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருக்கிறது எனலாம்.
ரேட்டிங் 4.2/5


