‘கழுவேத்தி மூர்க்கன் ‘ திரைப்பட விமர்சனம்  

அருள்நிதி பிரதான நாயகனாக நடித்து , ஒலிம்பியா மூவீஸ் சார்பாக அம்பேத்குமார் தயாரித்து சை. கௌதம ராஜ் இயக்கியுள்ள படம் “கழுவேத்தி மூர்க்கன்”.

இராமநாதபுரம் பகுதியில் இந்தக் கதை நடக்கிறது.முரட்டுத்தனமும் மூர்க்க குணமும் கொண்டவர் அருள்நிதி.நாளொரு வம்பு பொழுதொரு சண்டை என்று அடங்காத காளையாகத் திரிகிறார். அடுத்த அடுக்கு சமூகத்தை சேர்ந்தவர் பூமிநாதன் என்கிற பெயர் கொண்ட சந்தோஷ் பிரதாப். பொறுப்பான மனிதராக இருக்கிறார். இருவரும் இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், இரு வேறு படிநிலைகளில் இருப்பவர்கள் என்றாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்போடும் நட்போடும் இருக்கிறார்கள்.இந்த நட்பு சிறு வயது முதல் தொடர்கிறது.

ஆமை புகுந்த வீடாக அரசியல் புகுந்து அந்த ஊரைப் பாடாய்ப் படுத்துகிறது.தங்கள் ஆதாயத்திற்குத் தடையாக இருப்பதால் இவர்களது நட்பின் இடையே அரசியல் புகுந்து விடுகிறது.
இதில் பூமி கொல்லப்பட,. அந்தப்பழி மூர்க்கன் மீது விழ அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை செல்லும் பாதை.

 பெரும்பாலும் திகில் படங்களில் நடித்து வந்து, அதைத் தனக்கான பாணியாகத் தொடர்ந்து வந்த அருள்நிதி, இதில் கிராமத்துப் பின்னணியில் நடித்துள்ளார்.அதற்கான தோற்றம் ,உடல் மொழி, வசன உச்சரிப்பு என்று தன்னை மாற்றிக் கொண்டு முத்திரை பதித்துள்ளார்.முரட்டுத்தனமும் அனல் பறக்கும் ஆக்சனும் என்று ரகளை செய்துள்ளார்.எளிமையான கதை கொண்ட திகில் படங்களில் நடித்து வந்தவர், இப்போது ஆக்சன் பாதைக்கு மாறி உள்ளார் எனலாம்.

பூமியாக வரும் சந்தோஷ் பிரதாப் குறை இல்லாத நடிப்பைக் கொடுத்துள்ளார்.அந்தப் பாத்திரத்திற்கு தன்னால் முடிந்த அளவிற்கு பலம் சேர்த்துள்ளார்.
நாயகி துஷாரா விஜயன் இளமை ,செருக்கு, தைரியம் என்று தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.   அவரது காதல் ரசிகர்களைக் கவரும்.

சந்தோஷ் பிரதாப் ஜோடியான சாயாதேவி ஒரு கிராமத்துப் பெண்ணாக வந்து கவர்கிறார்.காதலன் மரணத்தில் வெளிப்படுத்தியுள்ள அவரது நடிப்பு கவனம் பெறும்.

ராஜசிம்மன், யார் கண்ணன், முனிஸ் காந்த்,  பத்மன், சரத் லோகித்சவா, சாந்தி மற்றும் போன்ற நடிப்புக் கலைஞர்களும் நடித்துள்ளார்கள்.அவரவர் தங்கள் வேலைகளைக் கச்சிதமாகச் செய்துள்ளார்கள்.

மூர்க்கசாமி,அழகு வள்ளி
,உண்மை,முத்து வழி விட்டான் என , படத்தில் வரும் பாத்திரப் பெயர்களே புதிதாக உள்ளன.

இரு சமூகங்களில் ,இரண்டு நண்பர்கள் இடையே அரசியல் புகுந்து சமுதாய நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் கருக் கொண்ட கதையாக என்னுயிர்த்தோழன், முதல் அண்மையில் வந்த இராவண கோட்டம் வரை கூறப்பட்டுள்ளன.
இதிலும் அக்கருத்து பேசப்பட்டுள்ளது.

இரு சமூகங்கள் சம்பந்தப்பட்ட கதையை படமாக எடுப்பது கம்பி மீது நடப்பது போன்றது. ஆனால் இயக்குநர் அதில் கவனமாக நடந்து வெற்றிபெற்றுள்ளார் .

படத்திற்கான பின்புலக் காட்சியில் இராமநாதபுரத்து வெக்கையைக் கண் முன் நிறுத்துகிறார்கள்.ஒளிப்பதிவாளர் ஶ்ரீதர் இயக்குநரின் பார்வையில் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.
சண்டைக்காட்சிகளில் கோடை வெயிலைத் தாண்டி சூடு கிளப்புகிறது.
சண்டை இயக்குநர் கணேஷ்குமாருக்குச் சபாஷ்.
டி இமானின் பின்னணி இசைஅமைத்த விதம் இயக்குநர் எதிர்பார்த்த ரகம். அதுவே படத்திற்குப் பெரும் பலம்.
ஆக்சன் கலந்த வித்தியாசமான கதைப் பின்னணி கொண்ட முழு நீளப் பொழுதுபோக்குப் படமாக அருள்நிதிக்கு இந்தப் படம் அமைந்துள்ளது எனலாம்.