பரத் ,அஜய் கார்த்தி , சங்கீதா,பவானி ஸ்ரீ,அபர்ணதி ,அனந்த் நாக் ,பிரகாஷ் ராஜ் ,கிஷோர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியுள்ளார் ஸ்ரீ செந்தில் .திரைக்கதை – அரவிந்தன் ஆனந்த்,இசை – சாம் சி.எஸ்,ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா, எடிட்டிங் – புவன் ஸ்ரீனிவாசன்,கலை இயக்குநர் – கலியுக ஏ.ராஜா,சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ் .
தயாரிப்பு – ஸ்கை பிக்சர்ஸ் (“ஃபைவ் ஸ்டார்” கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன்).
மாநகரத்தின் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு . சுமார் 500 குடும்பங்கள் கொண்ட அந்தக் குடியிருப்பு ஒரு கிராமத்தைச் செங்குத்தாக அடுக்கி வைத்தது போலிருக்கிறது . புத்தாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் 2025 டிசம்பரின் கடைசி நாள். அனைவரும் புத்தாண்டை எதிர்கொள்ள மகிழ்ச்சியாக இருக்கும் அந்தப் பொழுதில் மித்ரா என்கிற ஒரு குழந்தை காணாமல் போகிறது . அந்த வளாகமே பரபரப்பாகிறது.இன்ஸ்பெக்டர் காளிதாஸ் விசாரணையில் இறங்குகிறார்.
ஒவ்வொரு கட்டமாக விசாரணை சென்று கொண்டிருந்தாலும் சரியான துப்பு கிடைக்கவில்லை .அதன் பிறகு ஏசி வைஷ்ணவி களத்தில் இறங்குகிறார். இருந்தாலும் ஒரு தெளிவான தோற்றம் கிடைக்காமல் விசாரணைக் குழு திணறுகிறது. இப்படிப்பட்ட விசாரணையில் ஸ்டீபன் என்கிற ஒரு வாலிபன் மீது சந்தேகக் கண் விழுகிறது. அவன் தனியாக இருக்கிறான் அவனது நடவடிக்கைகள் மர்மம் சூழ்ந்ததாக இருக்கிறது. அவனைப் பிடிக்கிறார்கள் .அவன் ஒரு பெரிய வழக்கறிஞர் நடராஜின் உதவியாளராக இருக்கிறான். ஆனால் பிரபல வழக்கறிஞரின் தலையீட்டில் அவனை விடுவிக்க வேண்டியதாகிறது. இதற்குள் இன்னொரு குழந்தையும் காணாமல் போய் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. விசாரிக்கும் அதிகாரிகள் விசாரணையின் போக்கு தெரியாமல் திணறுகிறார்கள். குற்றவாளி என ஒருவரை நெருங்கும் போது அது துலங்காமல் போகிறது. வேறு கோணத்தில் அவர்கள் அலச ஆரம்பிக்கிறார்கள் . இப்படிப்பட்ட விசாரணை வேட்டையில் தீவிரமாக இறங்கும்போது வெவ்வேறு மர்மங்கள் வெளி வருகின்றன. அது வேறொரு திசையில் கதையை அழைத்துச் செல்கிறது. அது என்ன? அந்தக் குழந்தைகள் கொல்லப்பட்டது ஏன்? அதன் பின்னணி என்ன ?என்பதே 137.19 நிமிடங்கள் கொண்ட ‘காளிதாஸ் 2’ படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்தில் விசாரணை செய்யும் காவல்துறை ஆய்வாளராக காளிதாஸ் பாத்திரத்தில் வரும் பரத் அந்தப் பாத்திரத்திற்குத் தோற்றத்திலும் உடல் மொழியிலும் நடிப்பிலும் என மிகச் சரியாகப் பொருந்தி இருக்கிறார் .துடிப்பாக விசாரணையில் இறங்கும் போதும் அவரது உண்மைத் தன்மை சந்தேகப்படும் போதும் மேலதிகாரிகளின் அழுத்தங்களின் போதும் அந்த அழுத்தத்தில் அவர் உளச்சோர்வு அடையும் போதும் என பல்வேறு உணர்ச்சித் தருணங்களைபயன்படுத்திக்கொண்டு நடிப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
துணை ஆணையாளர் பாத்திரத்தில் ஐபிஎஸ் அதிகாரி வைஷ்ணவியாக நடித்துள்ள பவானிஸ்ரீ அவரா இவர்? என்று நம்ப முடியாத தோற்றத்திலும் மிடுக்கும் செருக்கும் ஆணவமும் கொண்ட குணச்சித்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மித்ரா குழந்தையின் தந்தை கோகுலாக ஆனந்தநாக்கும் தாயார் சஞ்சுவாக அபர்ணதியும் நடித்துள்ளனர்.
குழந்தை இழந்த பரிதவிப்பை நடிப்பில் காட்டியுள்ளனர் அந்த அபார்ட்மெண்ட் நிர்வாகப் பொறுப்பு தலைவராக ரூபா சுந்தரி பாத்திரத்தில் வரும் சங்கீதா சாதாரண பாத்திரமாக உள்ளே நுழைந்து பிறகு பாசமும் பரிதவிப்பும் கொண்ட தாயாகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். செருக்கும் ஆளுமையும் கொண்ட வழக்கறிஞர் நடராஜ் பாத்திரத்தில் வந்துள்ள பிரகாஷ் ராஜ் குறைந்த காட்சிகளிலேயே வந்தாலும் தனது இருப்பைப் பதிவு செய்துள்ளார்.அதேபோல் பாண்டியாவாக கசாப்புக் கடைக்காரராகவும் குற்றப் பின்புலம் கொண்டுள்ளவராகவும் வரும் கிஷோரின் திரையிருப்பு படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது
மர்மம் நிறைந்த தோற்றத்திலும் பூடகம் நிறைந்த செய்கைகளிலும் என்று வரும் ஸ்டீபன் பாத்திரத்தில் அஜய் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். அலட்டிக் கொள்ளாமல் தனது பாத்திரத்தில் வந்து படம் பார்ப்பவர்களின் வசவுகளையே வாழ்த்தாக அள்ளுகிறார்.
குழந்தை காணாமல் போவது அது சார்ந்த புலனாய்வு, சார்ந்தவர்களின் பதற்றம் பரிதவிப்பு பரபரப்பு போலீஸ் அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈகோ மோதல்கள் போன்றவற்றை வைத்துதிரைக்கதை பின்னி அழகான ஒரு க்ரைம் திரில்லராக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீசெந்தில்.
ஒவ்வொரு விசாரணையின் போதும் போலீஸ் அதிகாரிகளுக்குள் நடக்கும் நீயா நானா சண்டை, முட்டல் மோதல்கள் ஆணவச் சிக்கல்கள் போன்றவற்றையெல்லாம் கடந்து தான் ஒரு விசாரணையில் உண்மையைத் தேடிச் செல்ல வேண்டி இருக்கிறது. அப்படித்தான் நமது அமைப்பு இருக்கிறது என்பதையும் சொல்லாமல் சொல்லி உள்ளார் ஸ்ரீசெந்தில்.அந்த விசாரணைக்குள் சட்டத்தின் ஆதிக்கம் சட்ட வல்லுநர்களின் தலையீடு ,ஆணவத்தின் விளையாட்டு போன்றவற்றை இந்த படத்தில் எடுத்துக்காட்டி உள்ளார் இயக்குநர் .
இந்த கிரைம் திரில்லர் படத்திற்கு மிகச் சிறப்பான நேர்த்தியான ஒளிப்பதிவை வழங்கி உள்ளார் சுரேஷ் பாலா.படம் தொடங்கியது முதல் இறுதி வரை நம்மைப்படத்தில் ஒன்ற வைத்து நம்ம உணர்வுகளைக் கட்டிப்போட்டத்தில் சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசைக்குப் பெரும்பங்கு உண்டு .அந்த அளவிற்குச் சிறப்பாகப் பின்னணி இசை அமைத்துள்ளார் .
ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மை பற்றி தனித்தனியே நீட்டி முழக்காமல் போகிற போக்கில் சில காட்சிகள் மூலமே பாத்திரங்களை வெளிப்படுத்தும் வகையில் குணச்சித்திரத்தை வடிவமைத்துள்ள இயக்குநரின் திறமை பாராட்டுக்குரியது.
அதேபோல திரைக்கதையின் வேகமும் ரசிக்க வைக்கிறது. காளிதாஸ் 2 வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் பிள்ளைகள் பெற்றவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாகவும் அமைந்துள்ளது .
படம் உருவாக்கத்தில் தனி ஸ்டைலுடன் அசர வைக்கும் கதை சொல்லலுடன் இந்த படம் ஒரு முழுநீள க்ரைம் திரில்லர் அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது என்று கூறலாம்.
ரேட்டிங் 4/5


