கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் நடிப்பில் உருவாகும் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்- ஜீ டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’.

வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

ஒரு வழக்கை மையமாகக் கொண்டு, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடனும் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டு, திரைப்படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வில்…

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிர்வாக இயக்குநர் விவேக் பேசியதாவது,

இன்றைய நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் Drumsticks Productions மற்றும் Zee Studios சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர் பிரவீன், ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், இசையமைப்பாளர் சாம் C.S., படத்தொகுப்பாளர் G.K. பிரசன்னா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.

படத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகளைக் கைப்பற்றிய Zee5, Zee Tamil நிறுவனங்களுக்கும், இசை உரிமையைப் பெற்ற T-Series நிறுவனத்திற்கும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படத்தை வெளியிடும் ரமண ராஜா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பேச வாய்ப்பளித்த விஜய் அண்ணன் மற்றும் சக்தி அண்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசியதாவது,

‘சத்தியவான் சாவித்திரி’ மிகவும் அழகான ஒரு திரைப்படம். கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இருவருடைய நடிப்பையும் படமாக்கியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. குறிப்பாக, இருவரும் இணைந்து நடித்த நீதிமன்றக் காட்சிகள் பார்ப்பதற்கும் படமாக்குவதற்கும் மிகவும் அழகாக இருந்தன. அந்தக் காட்சியில் நடிகர்களின் நடிப்புக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தரையில் விளக்குகள் எதுவும் வைக்காமல், அனைத்து விளக்குகளையும் மேலே பொருத்திப் படமாக்கினோம்.

இயக்குநர் பிரவீன் S. விஜய்க்கு இது முதல் படம். நான் இதுவரை பல அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். அவருக்கும் இந்தப் படம் ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன். Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்களுக்கு நன்றி. படத்தின் கதைக்கு என்ன தேவையோ, அதற்கான முழு ஆதரவையும் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். அதற்கேற்ப படத்திற்கு ஒரு நல்ல ஒளிப்பதிவு வடிவத்தைக் கொடுத்திருக்கிறேன். படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் பேசியதாவது,

இந்தப் படத்தைத் தயாரிக்க எனக்கு வாய்ப்பளித்த படக்குழுவினருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு திரைப்படத்தைத் தொடங்குவதற்கு முன்பு அதற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்வதுதான் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால், அந்தத் தேர்வுகள் சரியாக அமைந்துவிட்டால் ஒரு நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதி எனக்கு இந்தப் படத்தில் ஆரம்பத்திலேயே கிடைத்தது. படக்குழுவினர் அனைவரும் இணைந்தபோதே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படம் சிறப்பாக உருவாகிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

குறிப்பாக, மிஷ்கின் சார், கீர்த்தி சுரேஷ் மேடம் போன்ற திறமையான கலைஞர்கள் இப்படத்தில் இணைந்தபோதே எனக்கு மிகுந்த நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்பட்டது. இந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு முன்பு நாங்கள் தயாரித்த திரைப்படங்களுக்கும் ஊடக நண்பர்கள் அனைவரும் நல்ல ஆதரவு கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறீர்கள். அதேபோல் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்திற்கும் உங்களுடைய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. வணக்கம்.

இசையமைப்பாளர் சாம் C.S. பேசியதாவது,

ஒரே நேரத்தில் பல நீதிமன்றப் பின்னணியிலான படங்களுக்கு இசையமைப்பது சவாலானது. நீதிமன்றக் காட்சிகளில் வசனங்களின் தீவிரத்தையும், கதையின் அழுத்தத்தையும் இசையின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். அந்த வகையில் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் திரைக்கதை இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது. இது நீதிமன்றக் காட்சிகளைத் தாண்டி குடும்ப உணர்வுகள், திரில்லர், சஸ்பென்ஸ், கொலை மர்மம் எனப் பல அம்சங்களைக் கொண்ட வித்தியாசமான படம். சமீபத்தில் நான் பணியாற்றிய படங்களில் மிகவும் பிடித்த திரைக்கதைகளில் இதுவும் ஒன்று.

மிஷ்கின் சார் இந்தப் படத்தில் வழக்கறிஞராக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கீர்த்தி சுரேஷுக்கும் பலவிதமான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரம். குறிப்பாக, அவருடைய கதாபாத்திரத்தின் கிரே ஷேடுகளை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குநர் பிரவீன் S. விஜய் மிகவும் அமைதியான, மென்மையான மனிதர். Drumsticks Productions நிறுவனத்தினருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. படத்தின் முதல் ரீலை இசை இல்லாமலேயே பார்த்தபோது கதை மற்றும் திரைக்கதை என்னைக் கவர்ந்துவிட்டன. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகளும் சிறப்பாக அமைந்துள்ளன. ரசிகர்களும் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.

நடிகை பிரிகிடா பேசியதாவது,

‘சத்தியவான் சாவித்திரி’ படத்தில் நாடகக் கலைஞர் சாவித்திரி என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் எனது கதாபாத்திரம் குறைவான நேரமே வந்தாலும், மிகவும் முக்கியமானதாக இருக்கும். இயக்குநர் பிரவீன் S. விஜய் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவரும் படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் கலகலப்பாகப் பழகினார்கள். இந்தப் படக்குழுவுடன் பணியாற்றியது மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம். கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய் பல்லவி இருவரையும் எனது ரோல் மாடல்களாகப் பார்க்கிறேன். மிஷ்கின் சாரின் படங்களையும் மிகவும் விரும்பிப் பார்ப்பேன். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் எங்களை அழகாகப் படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் சாம் C.S. இசையில் உருவான ‘பெண்ணே பெண்ணே’ பாடலும் எனக்குப் பிடித்திருக்கிறது.

கதாநாயகியாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. வாழ்நாள் இறுதிவரை நடிப்பதையே எனது இலக்காகக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் அளியுங்கள். நன்றி.

நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது,

‘சத்தியவான் சாவித்திரி’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் பிரவீன் S. விஜய் மிகச்சிறந்த கதைசொல்லி. அவர் கதையை விவரித்த விதமே எனக்குப் பிடித்திருந்தது. தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கிவரும் Drumsticks Productions நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படமும் ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் சாம் C.S. இசையமைத்த ‘கண்ணம்மா’ பாடல் மூலமாக இன்றும் பலர் என்னை அடையாளம் காண்கிறார்கள். அதற்காக அவருக்கு நன்றி.

கீர்த்தி சுரேஷ் மிகச்சிறந்த நடிகை. இந்தப் படத்தின் டிரெய்லரில் வசனங்கள் இல்லாத காட்சிகளில்கூட தனது முகபாவனைகளால் பல உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. மிஷ்கின் சாரின் நகைச்சுவை உணர்வு மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். எதிர்காலத்தில் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. சாருகேஷும் இயல்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த இணை இயக்குநர் திவாகருக்கு என் மனமார்ந்த நன்றி. என்னுடைய கதாபாத்திரம் குறித்து இப்போது அதிகம் சொல்ல விரும்பவில்லை. வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளியுங்கள். நன்றி.

நடிகர் சாருகேஷ் பேசியதாவது,

‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் மூலம் ஒரு முழுமையான நடிகராக உங்கள் முன்னால் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனது முதல் பெரிய மேடை என்பதால் கொஞ்சம் பதற்றமாகவும் இருக்கிறது. இந்தப் படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் சக்தி சார், விஜய் சார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் பிரவீன் மிகவும் ஜாலியான மனிதர். படப்பிடிப்பில் அனைவரிடமும் அன்பாகப் பழகுவார். அவருடைய கதை சொல்லும் திறமையும், ஒவ்வொரு காட்சிக்காகவும் அவர் தயாராகும் விதமும் எனக்குப் பிடித்திருந்தது. ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் மற்றும் இசையமைப்பாளர் சாம் C.S. ஆகியோருக்கும் நன்றி.

கீர்த்தி சுரேஷுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கனவு நனவான அனுபவம். ஆரம்பத்தில் அவருடன் நடிக்கப் பதற்றமாக இருந்தாலும், என்னை மிகவும் இயல்பாகவும் வசதியாகவும் உணர வைத்தார். மிஷ்கின் சாரின் நடிப்பும், ஒவ்வொரு காட்சியிலும் அவர் வெளிப்படுத்தும் ஆற்றலும் வியக்க வைத்தன. எனக்குக் காட்சி இல்லாத நாட்களில்கூட அவரும் கீர்த்தியும் நடிக்கும் காட்சிகளைப் பார்ப்பதற்காகப் படப்பிடிப்புக்குச் செல்வேன். ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். நவம்பர் 20ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.

இயக்குநர் பிரவீன் S. விஜய் பேசியதாவது,

Zee Studios மற்றும் Drumsticks Productions நிறுவனங்களுக்கு முதலில் நன்றி. ஒரு புதிய இயக்குநரின் முதல் படத்தை உருவாக்கும்போது தயாரிப்புத் தரப்பிலிருந்து கிடைக்கும் ஆதரவு மிகவும் முக்கியம். தயாரிப்பாளர்கள் சக்தி சார், விஜய் சார், விவேக் சார் மூவரும் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். குறிப்பாக, விவேக் சார் எனக்கு ஒரு சகோதரரைப் போன்றவர். படக்குழுவில் கடைசி நிலையில் பணியாற்றிய உதவி இயக்குநர் வரை அனைவருக்கும் தயாரிப்பு நிறுவனம் மிகுந்த மரியாதை கொடுத்தது மகிழ்ச்சியளித்தது.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் ஒவ்வொரு காட்சியிலும் தனித்துவமான கேமரா அசைவுகளைக் கொண்டு வந்தார். இசையமைப்பாளர் சாம் C.S. அறிமுக இயக்குநர் என்ற பாகுபாடின்றி எனது தேவைகளைப் புரிந்துகொண்டு பணியாற்றினார். படத்தொகுப்பாளர் G.K. பிரசன்னா தனது எடிட்டிங் மூலம் திரைக்கதைக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார். சாருகேஷ், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா மூவரும் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள்.

மிஷ்கின் சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது 14, 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனது ஆசை. இந்தப் படத்தின் மூலம் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி; அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். கீர்த்தி சுரேஷை மனதில் வைத்தே இந்தக் கதையை எழுதினேன். அவர் மற்றும் மிஷ்கின் இருவரும் நான் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக நடித்து, கதாபாத்திரங்களுக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார்கள். எனது உதவி இயக்குநர்கள், நிர்வாகத் தயாரிப்பாளர் நந்தா, உதவி ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்புக் குழுவினர் என இரவு பகலாக உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பங்களித்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் மிஷ்கின் பேசியதாவது,

இயக்குநர் பிரவீன் S. விஜய் மிகவும் அற்புதமான மனிதர். குழந்தை போன்ற மனம் கொண்டவர். இந்தப் படத்தில் என்னையும் கீர்த்தி சுரேஷையும் குடும்பத்தினர் போல அன்புடன் கவனித்துக்கொண்டார். ஒரு உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக வருவதில் இருக்கும் சிரமம் எனக்குத் தெரியும். அந்தப் பயணத்தில் பிரவீனுக்கு அவரது மனைவி அளித்த ஆதரவு பாராட்டுக்குரியது. பிரவீன் எனக்கு ஒரு குடும்பத்தைப் போன்றவர். இந்தப் படத்தில் அவர் எனக்கு முழுமையான நடிப்புச் சுதந்திரம் கொடுத்தார். நானும் கீர்த்தியும் பல காட்சிகளை இயல்பாக இம்ப்ரொவைஸ் செய்து நடித்தோம். ஒரு நடிகரின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இயக்குநர் வழங்க வேண்டும்; அதை பிரவீன் சிறப்பாகச் செய்தார்.

கீர்த்தி சுரேஷை என்னுடைய மகளைப் போலப் பார்க்கிறேன். அவரிடம் அபாரமான நடிப்புத் திறமை இருக்கிறது. இந்திய சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகைகளில் சாவித்திரி முக்கியமானவர். அந்தப் பெயரில் உருவான படத்தில் கீர்த்தி நடித்திருப்பது மகிழ்ச்சி. அவர் இன்னும் 20 முதல் 25 ஆண்டுகள் தொடர்ந்து நடிக்க வேண்டும். இசையமைப்பாளர் சாம் C.S. இந்தப் படத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இயக்குநரின் படைப்பை மேலும் உயரத்துக்குக் கொண்டு செல்லும் திறமை அவரிடம் இருக்கிறது. பிரவீனிடம் ஈகோ இல்லாததால், மற்ற கலைஞர்களின் பங்களிப்பையும் மனதாரப் பாராட்டுகிறார்.

சினிமா என்பது வெறும் தொழில் கிடையாது; மனிதர்களை நேசிக்கவும் அழகான உணர்வுகளை அனுபவிக்கவும் கற்றுக்கொடுக்கும் கலை. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர்களும் நல்ல திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றியிருக்கிறார்கள். ‘சத்தியவான் சாவித்திரி’ படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.

நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது,

இந்தப் படத்தின் புரமோஷனுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதத்திற்குக் காரணம் உடல்நலக் குறைவு. தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். படத்தின் தயாரிப்பாளர்கள் சக்தி சார், விஜய் சார், விவேக் சார் மற்றும் Drumsticks Productions நிறுவனத்திற்கு நன்றி. படப்பிடிப்பில் அனைவரையும் அன்பாகவும் அக்கறையுடனும் கவனித்துக் கொண்டார்கள். இயக்குநர் பிரவீனை ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் காலத்திலிருந்தே தெரியும். பல ஆண்டுகளாக அவருக்கு நெருக்கமான கதையாக இருந்த ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தை இயக்கியிருப்பது மகிழ்ச்சி. படப்பிடிப்பில் இயக்குநராக இல்லாமல் உதவி இயக்குநர்களுடன் இணைந்து ஓடிக்கொண்டே வேலை செய்வார். பிரவீன் எனக்கு ஒரு சகோதரரைப் போல மாறிவிட்டார்.

மிஷ்கின் சாருடன் முதலில் நடிக்கும்போது பயமாக இருந்தது. ஆனால் இரண்டு நாட்களிலேயே அவருடன் நெருக்கமாகிவிட்டேன். அவர் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். சிறந்த நடிகர், இயக்குநர் என்பதைத் தாண்டி மிகச் சிறந்த மனிதர். அவருடன் இணைந்து திரையில் நடித்தது பெருமையாக இருக்கிறது. சாருகேஷ், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா மூவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, சாவித்திரி நாடகக் காட்சிகளில் பிரிகிடாவின் நடிப்பு மிகவும் அழகாக இருந்தது. சாருகேஷ் கூச்ச சுபாவம் கொண்டவர் என்பதால் அவருக்கு வசதியான சூழலை உருவாக்க முயற்சி செய்தேன். ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், இசையமைப்பாளர் சாம் C.S., படத்தொகுப்பாளர் G.K. பிரசன்னா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘Rise of Savithri’ பாடல் எனக்குப் பிடித்தமானது. உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ‘சத்தியவான் சாவித்திரி’ நவம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. நீதிமன்றப் பின்னணியுடன் குற்றப் புலனாய்வு அம்சங்களும் நிறைந்த திரில்லர் படமாக இது இருக்கும். நான் படத்தைப் பார்த்துவிட்டேன்; எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரசிகர்களும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்திற்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், மதுசூதனன், R. சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, A. வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். G.K. பிரசன்னா படத்தொகுப்புப் பணிகளையும், பிரேம் கருந்தமலை மற்றும் AM ஆனந்த்ராஜ் கலை இயக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். பாடல்களை மோகன்ராஜன், கார்த்திக் நேத்தா, உமா தேவி எழுதியுள்ளனர்.

உலகம் முழுவதும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம், ஃபர்ஸ்ட் லுக் முதல் டீசர் வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தைத் தரும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்