கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ் ,ஷில்பா மஞ்சுநாத் ,பாலசரவணன், பிரிகிடா ,ஜி எம் குமார் நடித்துள்ளனர் . இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் எழுதி இயக்கியிருக்கிறார் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். வெடிகாரன்பட்டி எஸ் சக்திவேல் தயாரித்துள்ளார்.
தன் கணவனது உயிரை எமனிடமிருந்து மீட்ட பெண்ணின் கதையாகவும் சாவித்திரியின் மன உறுதியையும் அன்பையும் விளக்கும் கதையாகவும் சத்தியவான் சாவித்திரி விளங்குகிறது.இது மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கதை.
இந்த சத்தியவான் சாவித்திரி திரைப்படத்தின் கதை எதைப் பேசுகிறது? கொலைப்பழி சுமந்து சட்டத்தின் பிடியில் அநியாயமாகச் சிக்கிக் கொண்டுள்ள தனது கணவனை மீட்கும் வழக்கறிஞர் சாவித்திரியின் கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.ஆனால் இந்த சாவித்திரியின் கணவன் அந்த சத்தியவான் போல சத்தியவானா என்ற கேள்வியையும் எழுப்புகிறது?
சட்டக்கல்வி முடித்த கீர்த்தி சுரேஷ், ஐடி துறையில் வேலை பார்க்கும் சாருகேஷைத் திருமணம் செய்து கொண்டவர். கீர்த்தி சென்னையில் உள்ள பிரபல வழக்கறிஞர் மார்க்கண்டேயன் என்கிற மிஷ்கினிடம் உதவியாளராகச் சேர்கிறார்.சட்ட அறிவும் செருக்கும் கொண்ட வழக்கறிஞரான மிஷ்கின் தோல்வியே அறியாதவராக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அப்படிப்பட்டவரை எதிர்த்து நின்று தனது முதல் வழக்கிலேயே வாதாடி வெற்றி பெறுகிறார் கீர்த்தி.இதனால் அவரது கீர்த்தியும் பெருகுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்குக் கருச்சிதைவு ஏற்படுகிறது.இதனால் உடல் மனம் பாதிக்கப்படுகிறார்.
இந்த நிலையில், கனடாவிலிருந்து வந்த வெரோனிகா என்கிற ஷில்பா மஞ்சுநாத் மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார்.இறந்த உடல் சாருகேசின் காரில் இருந்ததால் கீர்த்தி சுரேஷின் கணவர் சாருகேஷ் கைது செய்யப்படுகிறார். சந்தர்ப்ப சாட்சியங்கள் சாருகேஷுக்கு எதிராகவே உள்ளன. நிரபராதியான தன் கணவரைக் காப்பாற்ற கீர்த்தி சுரேஷ், மீண்டும் வழக்கறிஞராக களம் இறங்குகிறார். மிஷ்கின் அவரை வீழ்த்தத் துடிக்கிறார்.இந்நிலை கீர்த்தி சுரேஷ் இந்த போட்டியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் சத்தியவான் சாவித்திரி படத்தின் மீதிக் கதை
கொலைப்பழி சுமந்த ஒருவரைச் சட்டத்தின் பிடியிலிருந்து மீட்கும் போராட்டம் கொண்ட கதையாக இருந்தாலும்
யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் கொண்ட காட்சிகளை அமைத்து கதையைத் திறம்படக் கையாண்டு இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய், ஸ்கோர் செய்கிறார்.
கதையின் நாயகியாக வழக்கறிஞர் சாவித்திரியாக வரும் கீர்த்தி சுரேஷ்,தனது திறமையைக் காட்டத் துடிக்கும் ஓர் இளம் வழக்கறிஞராகவும் தன் கணவரின் உயிரைக் காப்பாற்றப் போராடும் ஒரு மனைவியாகவும் துறுதுறுப்பும் தவிதவிப்பும் என ஏற்ற உடல்மொழி பொருத்தமான முகபாவனைகள் என்று அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.சின்ன சின்ன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி நடிப்பில் ஈர்க்கிறார்.
அனுபவமும் சட்ட அறிவும் அகங்காரமும் கொண்ட அந்த மூத்த வழக்கறிஞர் மார்க்கண்டேயன் பாத்திரத்தில் வரும் மிஷ்கின், தனது தேர்ந்த உடல் மொழி, உணர்ச்சிகளைக் கடத்தும் வசன உச்சரிப்பு, பாத்திரத்தில் கரைந்த நடிப்பு என அசத்தியுள்ளார்.சின்ன சின்ன அசைவுகள் மூலமும் அந்த பாத்திரத்தைச் செழுமை செய்துள்ளார்.
தீபக் பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷின் கணவராக வரும் சாருகேஷ், முகம் நிறைய தாடி உடன் இருந்தாலும் அந்த பாத்திரத்திற்கான நடிப்பை முகபாவனைகளில் காட்டிக் குறையில்லா நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷின் சீனியராக வருகிறார் பால சரவணன். இக்கட்டான சூழ்நிலையிலும் அவர் பேசுவது நடந்து கொள்வது முகக் குறி காட்டுவது என்று அவரது நடவடிக்கைகள் சிரிக்க வைக்கின்றன.
படத்தில் துணைப் பாத்திரங்களில் வரும் ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா சாகா, ஜி.எம்.குமார்,தீபா சங்கர், மதுசூதன் ராவ், மாலா பார்வதி, ஏ.வெங்கடேஷ், ஆர்.சுந்தராஜன் உள்ளிட்ட அனைவரும் நல்லதேர்வுகள் என்று தங்கள் நடிப்பின் மூலம் நிரூபிக்கிறார்கள்.
கதை குறிப்பிட்ட சில இடங்களிலேயே நடந்தாலும் அந்தக் குறை தெரியாத அளவிற்கு ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் தனது காட்சிக் கோணங்களிலும் ஒளி அமைப்பிலும் நிறைவு உணர்வை அளித்துள்ளார்.குறிப்பாக நீதிமன்றக் காட்சிகளின் கோணங்களும் கதாபாத்திர உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், சிறப்பான தனது பின்னணி இசையால் படத்தின் விறுவிறுப்பை ஏற்றி உள்ளார்.உணர்ச்சிமயமான காட்சிகளில் மெல்லிய பின்னணி இசையை ஒலிக்க விட்டு அந்த உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்தி உள்ளார்.
இயக்குநர் நினைத்த விறுவிறுப்பைப் படத்தில் கொண்டு வந்துள்ளார் படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே.
எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் எஸ்.விஜய், நாம் அறிந்த வழக்கமான நீயா நானா போட்டிக் கதைக்கு வேறு ஒரு வடிவத்தைக் கொடுத்து திரைக்கதை எழுதியிருப்பது படத்திற்குப் பலம்.குறிப்பாக நீதிமன்றங்கள், சட்டங்கள் சார்ந்த காட்சிகளில் துல்லியம் காட்ட அவர் உழைத்திருப்பது தெரிகிறது.
ஒரு சாதாரண கோர்ட் டிராமாவாக எண்ண முடியாத அளவிற்குப் படத்தில் குற்றங்கள், மர்மங்கள் என்று விறுவிறுப்பான அம்சங்களைச் சேர்த்து ஒரு நிறைவான பொழுதுபோக்குப் படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்
மொத்தத்தில், இந்த ‘சத்தியவான் சாவித்திரி’ மக்களைக் கவர்வாள்.


