‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட விமர்சனம்

ஜெய் ,மீனாட்சி கோவிந்தராஜன்,சரவண சுப்பையா , கருடா ராம்,சத்யன், ஸ்ரீமன்,ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாபு விஜய் எழுதி இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன் ,இசை:கிரிஷ் கோபாலகிருஷ்ணன் , படத்தொகுப்பு: டார்லிங் ரிச்சர்ட் சன்.

மீனாட்சி ஓர் அமைச்சர் மகள்.அழகாக இருக்கும் மீனாட்சியை வசதியான அரசியல்வாதி சரவண சுப்பையா அடைய நினைக்கிறார் .மகளைத் திருமணம் செய்து வைத்து விட்டு தான் மேலும் அரசியலில் பெரிய ஆளாக ஆகலாம் என்று மீனாட்சியின் தந்தை நினைக்கிறார். ஆனால் இது மீனாட்சிக்குப் பிடிக்கவில்லை .இதைத் தெரிந்து எதிர்ப்பு தெரிவிக்கும் தன் மனைவியையும் மாடியில் இருந்து தள்ளி கொலை செய்கிறார் அமைச்சர் .வெளியே செல்லும் மீனாட்சி ஜெய்யைக் கண்டதும் காதல் என்று அவசரமாகக் காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார். தேனிலவுக்காக கொடைக்கானல் சென்று மலைவாழ் இடத்தில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தங்குகிறார்கள்.அது கருடா ராமுக்கு சொந்தமானது.அங்கே ஜெய் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.திடீரென்று மீனாட்சி காணாமல் போய் விடுகிறார். அதற்கு ஜெய் தான் காரணம் என்று சந்தேகிக்கும் போலீஸ் அவரை கைது செய்கிறது. மகிழ்ச்சியாக தொடங்கிய திருமண வாழ்க்கை, சட்டென்று மாறிய வானிலையாக இடி இடித்து மழை பொழிய ஆரம்பிக்கிறது.ஜெய் தனது பிரச்சினைகளில் இருந்து வெளி வெளியே வந்தாரா மீனாட்சியுடன் சேர்ந்தாரா என்பதே 120.36 நிமிடங்கள் கொண்ட ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட மீதிக்கதை.

இடைவெளிக்கு பின் ராமச்சந்திரன் பாத்திரத்தில் ஜெய் தனி நாயகனாக முகம் காட்டியிருக்கிறார்.வழக்கம்போல அந்த நடுத்தர வர்க்கத்து நாயகனாகப் பளிச்சிட்டுள்ளார்.காதல் காட்சிகளிலும், கண்கலங்கும் காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக ஜானகி பாத்திரத்தில் நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் அழகிலும், நடிப்பிலும் ஈர்க்கிறார். தந்தை மீதான கோபம், நண்பர் மீதான வெறுப்பு, கணவர் மீதான காதல் என்று பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த நல்வாய்ப்புகள். அதையும் சரியாகப் பயன்படுத்தி வெளிப்படுத்தி உள்ளார்.

ஜெயின் நண்பராக வரும் யோகி பாபு, இதில் குணச்சித்திரம், நகைச்சுவை ,சற்றே வில்லத்தனம் என்று கலவையாகத் தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.யோகி பாபுவிடம் அடி வாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா கதிர் சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையைச் சரியாகவே செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், பாடல் காட்சிகளைக் கவிதையைப் போல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நாயகன், நாயகி இருவரையும் அழகாகக் காட்டியிருப்பவர், காட்சிகளைத் தரமாகப் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்கள் .சுகமான மெட்டுகள்,ஈர்க்கும் வரிகள் என்று ஒலிக்கின்றன.

ஜெய் இடம் கண்ணில் வேர்க்குதா போன்ற டைமிங் வசனங்களைப் பேசி சிரிக்க வைக்கிறார் நாயகிஎழுதி இயக்கியிருக்கும் பாபு விஜய், தொழில்நுட்பம் மற்றும் இணையம் மூலம் மனிதர்களின் அந்தரங்கங்கள் எப்படி திருடப்படுகிறது, என்ற உண்மையைச் சிந்திக்கும் வகையில் சொல்லியிருக்கிறார்.

இளமை ததும்பும் காதல், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, அதிர்ச்சிகரமான சம்பவங்கள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களைப் படத்துடன் ஒன்றிவிடச் செய்கிறார் இயக்குநர் பாபு.
கதை சொல்லலில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மொத்தத்தில் ’சட்டென்று மாறுது வானிலை’ வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

ரேட்டிங் 3.4/5