சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், பகவதி பெருமாள், விச்சு விஸ்வநாத், போஸ்வெங்கட், வினோதினி வைத்தியநாதன் நடித்துள்ளனர்.
அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்ளார்.சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி மூவிஸ் தயாரித்துள்ளன.
போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு திருமணமாகி15 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறக்கிறது.குழந்தை பிழைப்பது கடினம் என்பது போல் சுகவீனமாக இருக்கிறது .கடவுளிடம் வேண்டுகிறார்கள்.குழந்தை பிழைத்துக் கொள்கிறது. ஆனால் அதில் ஒரு பிரச்சினை.பிறக்கும்போது ஆணாக இருந்த குழந்தை சற்று நேரத்தில் பெண்ணாக மாறுகிறது. பகல் பொழுதில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும் பிறகு ஆணாகவும் மாறுகிறது.அந்த அதிசயக் குழந்தையின் எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு வளர்த்து வருகிறார்கள்.ஒரு கட்டத்தில் நடக்கும் துர்சம்பவத்தால் பெற்றோரை இழந்த குழந்தை அதாவது குழந்தைகள் தனித்து விடப்படுகிறது.இந்த அதிசயப் பிறவிகள் சென்னை வருகிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாததால் உணர்வுப் பரிமாற்றத்தில் குழப்பம் நேரிடுகிறது.தினந்தோறும் பொழுது விடிவது போல் இந்த மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது.
பகல் முழுவதும் ரேஷ்மா வெங்கடேஷாக இருப்பவர், இரவு சந்தோஷாக மாறிவிடுவார். இப்படிப்பட்ட சூழலில் ரேஷ்மாவை ஒரு வாலிபர் காதலிக்கிறார். சந்தோஷை ஒரு பெண் காதலிக்கிறார்.அதாவது ரேஷ்மா வெங்கடேஷை வினோத் கிஷன் காதலிக்க, சந்தோஷை சம்யுக்தா விஸ்வநாதன் காதலிக்கிறார். இந்த ஆடு புலி ஆட்டத்தில் இருவரது காதல்களும் சிக்கலுக்குள்ளாகின்றன.எதார்த்தத்தைச் சொன்னால் இருவருக்குமே புரியவில்லை.அந்த நிலையில் அவர்கள் எதார்த்தத்தைக் கூறினார்களா? அந்த ஓர் உடலுக்குள் இருக்கும் இரண்டு உயிர்களில் யாருடன் யார் கடைசியில்ஒன்று சேர்ந்தார்கள்? இந்த அதிசயப் பிறவியை மூலதனம் ஆக்கி வியாபாரம் செய்ய ஒருவர் திட்டமிடுகிறார். அவர்களுக்குள் சிக்கிக்கொண்ட அவர்கள் தப்பித்தார்களா? எந்தக் காதலர்கள் வெற்றி பெற்றார்கள்? என்பதை நோக்கிச் செல்லும் கதை தான் 132.12 நிமிடங்கள் கொண்ட ‘டபுள் ஆக்குபன்ஸி’ திரைப்படம்.
சந்தோஷ்,இதில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.ஒரு திரைப்படக் கதாநாயகனுக்கு உரிய அனைத்து தகுதிகளோடும் வந்துள்ளார்.அனைத்து ரகமான முக பாவங்களையும் காட்டி ஆக்சன் நடனம் என்று தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.
சந்தோஷின் காதலியாக வரும் சக்யுக்தா விஸ்வநாதன், நவீனயுவதியாகத் தோன்றி தோற்றம் உடைகள் உடல் மொழி என்று அனாயாசமாக நடித்துள்ளார். நெருக்கமான காட்சிகளில் .கவர்ச்சி காட்டித் தைரியமாக நடித்துள்ளார்.
பகல் ஷிப்டில் தோன்றும் பிறவியாகப் பெண் உருவம் கொண்டு நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷ்,ஏற்றுள்ள பாத்திரம் அழுத்தமான உணர்ச்சிகளைக் காட்டக் கூடியதாக அமைந்துள்ளது. அதில் அவர் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.இரவு என்பதே பார்க்க முடியாத அந்தப் பாத்திரத்தின் சிக்கலை உணர்ந்து நடித்துள்ளார்.
வினோத் கிஷன் ரேஷ்மாவின் காதலராக நடித்திருக்கிறார்.தனது முட்டைக் கண்களை உருட்டிக்கொண்டு அவர் காதலிக்கும் போதும் ,பல்பு வாங்கும் போதும் ,ஒரு உயிரியல் ஆராய்ச்சியாளராகத் தீவிரமாகப் பணியாற்றும் போதும் என்று அந்த பாத்திரத்தை உயிர் பெற வைத்துள்ளார்.
விடிவி கணேஷ் கதாநாயகனின் நட்பு வட்டத்தில் உள்ளவராக வருகிறார்.அவர் எது பேசினாலும் சிரிப்பாக வருகிறது.
போஸ் வெங்கட், வினோதினி பிரதான பாத்திரத்தில் பெற்றோராக வந்து சில காட்சிகளிலேயே மறைந்து போனாலும் அழுத்தமான பாத்திரம் ஏற்று கதைக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளனர்.
பகவதி பெருமாள், விச்சு விஸ்வநாத் ஆகியோரின் தோற்றம் அந்த பாத்திரத்தின் அமைப்பு திரைக்கதைக்கு வலு சேர்க்கிறது.
இது ஒரு பேண்டஸியான கதை .அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வண்ணமயமான ஒளிப்பதிவு செய்து ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் சக்கரவர்த்தி படத்தின் காட்சிகளை விசாலப்படுத்தியுள்ளார் .
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். பின்னணி இசையும் பொருத்தம்.
பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு புதுமையான இந்த கதைக்கருவையும்,அதன் தக்க நோக்கங்களையும் தெளிவாகப் புரிய வைக்கும்படிக் கதையை நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது.
படத்தில் வண்ண வண்ணமான இளமை கொடி கட்டிப் பறக்கிறது.இளைஞர்களைத் கவரும் வகையில் காட்சிகள் உள்ளன.சில இடங்களில் கத்தி மேல் நடப்பது போல் ஆபாசம் தலைகாட்டி விடக் கூடிய சந்தர்ப்பம் இருந்தாலும் அதை எச்சரிக்கையுடன் கையாண்டுள்ளார் இயக்குநர்
எழுதி இயக்கியிருக்கும் அஸ்வின் கந்தசாமி, இரண்டு உருவம் கொண்ட உடல்களுக்கு ஒரே இதயம் என்கிற ஒரு கற்பனையை அது நம்ப முடியாததாக இருந்தாலும் படம் பார்ப்பவரை அதில் ஒன்ற வைத்து படம் பார்ப்பவர்களைக் கொண்டாட்ட மனநிலைக்கு மாற்றி தன் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். பேண்டஸி கதையை அறிவியல் பார்வையில் காட்டி அதற்கு ஒரு நம்பகத்தன்மையை கொடுக்க முயன்று உள்ளார்.இந்த புதிய முயற்சிக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளரையும் பாராட்ட வேண்டும்.
படத்தின் கதையில் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும் துடிப்பும் இரண்டாம் பாதியில் குறைவது சிறு பலவீனம் என்றே கூற வேண்டும்.இரண்டு உடல்கள் இரண்டு உயிர்கள் உணர்வு ஒன்று என்ற வகையில் இரட்டையர்களைப் பார்த்திருக்கிறோம்.ஆனால் ஒரு உடலை ஆக்கிரமிக்கும் இரண்டு உயிர்கள் என்கிற டபுள் ஆக்குபன்ஸி என்கிற கற்பனை புதிதாக உள்ளது.அதை நம்பும் படியாகத் திரைக்கதை அமைத்துக் காட்சி படுத்தி இயக்குநர் அஸ்வின் கந்தசாமி அந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும்.சபாஷ்.டெம்ப்ளேட் கதைகளில் இருந்து மாறுபட்டு உள்ளதால் இது புதுமை விரும்பிகளுக்குப் பிடிக்கும்.
மொத்தத்தில், ‘டபுள் ஆக்குபன்ஸி’ இளமை கலகலப்பு புதுமையான கற்பனை கொண்ட பொழுதுபோக்குப் படம்.


