‘தமிழ்க் குடிமகன்’ விமர்சனம்

சேரன் ,லால் ,ஸ்ரீ பிரியங்கா, வேலராமமூர்த்தி, எஸ் ஏ சந்திரசேகர், அருள்தாஸ், ரவி மரியா ராஜேஷ்
மயில்சாமி, துர்கா, தீப்ஷிகா , சுரேஷ் காமாட்சி நடித்துள்ளார்கள்.

எழுதி இயக்கி லட்சுமி கிரியேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார் இசக்கி கார்வண்ணன்.ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ், இசை சாம் சி எஸ், எடிட்டர் ஆர் சுதர்சன்.

சாதிப் பாகுபாடுகள் சாதிக்கேற்ற தொழில்கள் என்ற கட்டமைப்பு உள்ள ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் சலவைத் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தவர் சேரன்.அவ்வூர் வழக்கப்படி இறுதிக் காரியங்கள் செய்பவர்.அதாவது இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணி. ஆனால் சேரன் படித்தவர் அரசு வேலைக்கு முயற்சி செய்கிறார். அந்தத் தொழிலை விட்டுவிட்டுக் கௌரவமாக வாழ நினைக்கிறார்.எனவே அப்படி வரும் ஒரு வேலையை மறுக்கிறார் .அதனால் ஊருக்குள் அடுத்த அடுக்கு சமூகத்திடம் இருந்து பகை வருகிறது. முடிவு என்ன? இப்படி ஒரு சாதியின் மீது குறிப்பிட்ட வேலை செய்ய வேண்டும் என்று நெருக்குதல் வரும் போது அதை மறுப்பதற்கும் அவர்களும் பிறரைப் போல் வாழ்வதற்கும் என்ன வழி ?என்று கேள்வி வருகிறது அதற்கு ஒரு யோசனை இப்படத்தில் முடிவின் மூலம் வைக்கப்படுகிறது.அது என்ன என்பதுதான் ‘தமிழ்க் குடிமகன் ‘படம்.

தயக்கமும் அச்சமும் இருந்தாலும் உள்ளுக்குள் தெளிவும் மறுப்பும் கொண்ட ஒரு பாத்திரமாக சேரன் வருகிறார்.தனது உள் மனத்தின் வலியை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கும் தவிப்பில் கதாபாத்திரமாக நிலைத்து நின்றிருக்கிறார் சேரன். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் ஊரை விட்டு செல்ல மாட்டேன் என்கிற அவரது உறுதி வெளிப்பட்டு பிடிவாதம் பிடிக்கும் இடத்தில், அசர வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சேரன்.

சேரனின் மனைவியாக ஸ்ரீ ப்ரியங்கா அழகான தோற்றம் எதார்த்தம் நடிப்பு என்று வருகிறார்.மிடுக்கான தோற்றத்தில் வந்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் வேல ராமமூர்த்தி. உயர்ந்த சாதி என்று தன்னைக் கூறிக் கொள்ளும் கதாபாத்திரத்தில் வரும் நடிகர் அருள்தாஸ் கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளார்.ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக நடித்திருக்கும் லால், தனது அனுபவமான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போலீஸ் உயரதிகாரியாக வந்து பரபரப்பு ஊட்டுகிறார்.  சமூக ஒடுக்குதலில் இருந்து மேலெழ முடியாத கதாபாத்திரமாக சேரனின் தாயாராக வரும் தீப்ஷிகா பொருத்தம் . எஸ்.ஏ.சந்திரசேகர், ரவி மரியா, துருவா, மு.ராமசாமி, மயில்சாமி என படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைவரும் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

சாதிப் பிரச்சினை சார்ந்த உரையாடலைத் தொடங்கியுள்ள இசக்கி கார்வண்ணன் அதற்குத் தீர்வையும் கொடுத்துள்ளார்.யார் யார் என்ன தொழிலைச் செய்ய வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று பளிச்செனக் கூறியுள்ளார்.நடிக்கும்போது சில நடிகர்களிடம்  சினிமாத்தனம் எட்டிப் பார்க்காமல் இருந்திருந்தால் இந்தப் படம் மேலும் இயல்பான படைப்பாக மாறியிருக்கும்.

சாம் சிஎஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பயணித்திருக்கிறது.தாயாரம்மா பாடல் நன்று.ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு மூலமாக கிராமம் மற்றும் அம்மக்களின் உணர்வுகளும் எதார்த்தமான காட்சிகளாக வந்துள்ளன.

படத்தில் காணும் காட்சிகளை விட கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் அதிகமாக இருந்தாலும் அந்தக் குறை தெரியாமல் கதையின் போக்கு பிறழாமல் நேர்த்தியாகப் படத்தொகுப்பு செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சுதர்ஷன். மொத்தத்தில், இந்த ‘தமிழ்க்குடிமகன்’ சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடம் போதிக்கிற படம்.