பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கிய கவனம் பெற்றவர்.ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளன.
படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்திற்கான முன்னேற்றங்கள் மூலம் கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கிறது என்று விளம்பரங்களில் எதிர்பார்ப்பைக் கிளப்பி இருந்தது.இந்தப் படம் அமானுஷ்யம், மர்மம், கொலை ,திகில், துப்பு துலுங்குதல் என்ற பாதையில் அமைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேக்கரை என்கிற கிராமத்தில் இருந்த வனமங்கையைத் தசரதன் என்பவன் காதலித்தான். அந்த ஊரில் அவள் கற்பின் மீது சந்தேகப்பட்டு வீட்டோடு எரிக்கப்பட்டு இறக்கிறாள்.அப்போது அவள் ஒரு சாபம் விடுகிறாள். நான் உயிர்விடும் இந்த ஜூன் மாதம் என் சாபம் உங்களை சும்மா விடாது துரத்தும் என்கிறாள்.அதன்படி ஏழாண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஒரு ஜூன் மாதத்தில் அங்கு எந்த தடயமும் இல்லாமல் தொடர் கொலைகள் நிகழ்கின்றன. . கொலைகளுக்குக் காரணம் தேடுகிறது காவல்துறை.. கொலையாளிகள் யார் என்று கண்டுபிடிப்பதற்கு காவல் ஆய்வாளர் சித்து களத்தில் இறங்குகிறார் . சைக்கோ ஒருவன் கொலை செய்வதாகவும் அவன் கேரளாவைச் சேர்ந்தவன் என்றும் நம்புகிறார்கள் . அவன் பிடிபடுகிறான்.ஆனாலும் அதற்குப் பிறகும் கொலைகள் நடக்கின்றன .காலம் காலமாக தொடரும் இந்த அச்சத்தை பயன்படுத்திக் கொண்டு இந்த கொலைகள் நிகழ்கிறதா என்கிற பார்வையிலும் விசாரணை நடக்கிறது இந்தக் கொலைகளை யார் செய்கிறார் என்பதைக் காவல்துறை கண்டுபிடிப்பதே 147.07 நிமிடங்கள் கொண்ட ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்தின் திரைக்கதை கொலையாளி யாராக இருக்கும் என்று பலர் மீது சந்தேகங்களை எழுப்பிக் கொண்டே முதல் பாதி படம் முழுக்க மர்ம முடிச்சுகளை போட்டுக் கொண்டே செல்கிறார் இயக்குநர் பாலாஜி.பிறகு அந்த முடிச்சுகள் அவிழும்போது அவர் அல்ல இவராக இருக்குமோ என்று நம் சந்தேகத்திற்கும் நிஜத்துக்குமாகக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி உள்ளார் இயக்குநர்.இறுதிவரை அந்த பரபரப்பைத் தக்க வைத்து மர்மத்தையும் புதிரையும் தொடர வைத்துள்ளது இயக்குநரின் சாமர்த்தியம் என்றே கூற வேண்டும்.
.
இப்படத்தில் இளம்பாரி என்கிற காவல் ஆய்வாளர் பாத்திரத்தில் பிக் பாஸ் புகழ் சித்து நடித்துள்ளார். காவல்துறையின் பணியழுத்தம் தனிப்பட்ட முறையில் அவர் குடும்ப இழப்பு என்ற பல வலிகளையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு அதைக் காட்டிக் கொள்ளாமல் அலட்டல் இல்லாமல் உள்ளத்தின் அழுத்தத்தை மட்டும் முகத்தில் காட்டிக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளார் .
கனி பாத்திரத்தில் நடித்திருக்கும் இன்னொரு பிக் பாஸ் புகழ் ரித்விகா நல்லவரா கெட்டவரா என்று அறிய முடியாத அளவிற்கு முகத்தில் ஒரு மர்ம சாயலை வைத்துக்கொண்டு அந்தக் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.
இன்னொரு பிக் பாஸ் முகமான தர்ஷிகா சித்துவின் மனைவியாக நடித்திருக்கிறார் .சுடர் விடும் கண்களில் ஏதோ புதிர் இருக்குமோ என அவரது தோற்றம் இருக்கிறது. படத்தில் அவருக்கு ஏற்பட்ட முடிவும் யாரும் எதிர்பாராதது.
இந்தப் படத்தில் சித்துவுடன் பணியாற்றும் காவலராக அழகு கதாபாத்திரத்தில் பிரதீப் நடித்திருக்கிறார்.எதிர்பாராத மர்மங்களைக் கொண்ட
தனது பாத்திரத்தில் தன்னை உணர்ந்து குறை இல்லாமல் செய்திருக்கிறார். ஜெயக்குமார் இன்னொரு காவலராக நடித்திருக்கிறார். அவரும் தனது நடிப்புக் கடமையைச் சரியாகச் செய்துள்ளார்.
படத்தில் தோன்றும் பலவிதமான பாத்திரங்களின் மீதும் மர்மப் புகை சூழ விட்டுப் பிறகு அதைத் தெளிவுபடுத்தி இருப்பது இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது .மிரட்டல் விழிகளுடன் வரும் வேல ராமமூர்த்தி இதில் வித்தியாசமான குணச்சித்திர வேடம் ஏற்றுள்ளார்.நிழல்கள் ரவி டாக்டராக வருகிறார்.வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் சாப்ளின் பாலு இதில் வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார்.இப்படிப் படத்தில்துணைக் கதாபாத்திரங்களில் வருபவர்கள் அனைவரும் அவர்களுக்குக் கொடுத்த வேலையைக் குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்
படத்தின் வரும் காட்சிகள் பெரும் பகுதி இரவில் தான் நடக்கின்றன. இரவில் அந்த நிழலும் ஒளியும் கலந்த அந்த தோற்றமே படத்திற்கு ஒரு திகில் அனுபவத்தைத் தருகிறது.அந்த வகையில் ஒளியமைப்பைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் மணிகண்டன் பிகே.
படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு அம்சம் இசை. ஒரு திகில் படத்திற்கு மர்மம் சூழ்ந்த படத்திற்கு அந்த மர்மத்தை இறுதிவரை கலையாமல் காப்பாற்றிச் சென்றிருக்கிறது சக்தி பாலாஜியின் பின்னணி இசை.
படத்தில் கதை மாந்தர்கள் மட்டுமல்ல காவல் நிலையம் ,காடு ,மேடு , மலை, மழை என்று அந்த இருளும் புதிரும் சூழ்ந்த அந்தப் பின்புலங்கள் படத்திற்கு அச்சமூட்டும் உணர்வைத் தருகின்றன.
காதல், நம்பிக்கை, மாயை, நாட்டார் பண்பாடு, சந்தேகம்,துரோகம். பிள்ளைப்பாசம் ,பழிவாங்கல் என அனைத்து உணர்வுகளும் வெளிப்படுத்தும் காட்சிகள் உள்ளன. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை தளர்வு தொய்வில்லாமல் படத்தொகுப்பு செய்துள்ளார் படத்தொகுப்பாளர் ராஜா அறுமுகம்.
‘தி டார்க் ஹெவன்’ என்றால் என்ன? ‘தி டார்க் ஹெவன் என்பது பல மர்மங்கள் அடங்கிய ஒரு புத்தகம். அதில் எழுதப்பட்டு உள்ளது போல் நடப்பதாகவே கதை தொடங்குகிறது. அப்புத்தகத்தை முழுதும் படித்தவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்படித் தொடங்குகிற கதை கடைசி வரை அந்தப் பரபரப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது சிறப்பு.
மொத்தத்தில் ‘தி டார்க் ஹெவன் ’நல்லதொரு திரில்லர் அனுபவத்தைத் தருகிறது .


