தீபாவளிக்கு குடும்பத்தோடு பார்க்க கூடிய படம் ‘பிரின்ஸ்’ – சிவகார்த்திகேயன்!

கலகலப்பான படங்கள் கொடுத்து ரசிகர்களிடம் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் அனுதீப் கே.வி.இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிரின்ஸ்’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா என்பவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்றவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

நாராயண தாஸ் நாரங் தயாரித்திருக்கும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புசெழியன் இப்படத்தை வெளியிடுகிறார்.

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டை தொடர்ந்து நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை ‘பிரின்ஸ்’ படக்குழுவினர் சந்தித்தனர். இதில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை மரியா, நடிகர்கள் பிராங் ஸ்டார் ராகுல், பாரத், சுப்பு பஞ்சு, இயக்குநர் அனுதீப் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “’பிரின்ஸ்’ படத்தின் கதை என்னவென்றால், லோக்கல் பையன் இங்கிலாந்து நாட்டு பெண்ணை காதலிக்கிறான். அவனது காதல் ஜெயித்ததா இல்லையா என்பது தான். இந்த படம் ரொம்ப ஜாலியான ஒரு படமாக இருக்கும். இயக்குநர் அனுதீப்பின் முந்தைய படத்தை பார்த்து ரசித்திருக்கிறேன். அதனால் தான் அவர் இந்த கதையை சொன்ன உடன் ஒப்புக்கொண்டேன்.

அனுதீப்பின் காமெடி சென்ஸ் ரொம்பவே புதிதாக இருப்பதோடு, தனித்துவமானதாகவும் இருக்கும். அவருடன் சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாது. இது ரொம்பவே லைட்டான கதை தான். பெரிய ஆக்‌ஷன் காட்சிகள் இருக்காது. ஒரே ஒரு குட்டி சண்டைக்காட்சி மட்டுமே இருக்கும். மற்றபடி ரொம்ப ஜாலியான ஒரு அனுபவத்தை கொடுக்கும் படமாக இருக்கும்.

எனக்கு இந்த படத்தை பொறுத்தவரை ஒரே ஒரு சவால் என்றால், அனுதீப்பின் எழுத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் பார்ப்பதில் தான் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை காண ஆவலாக இருக்கிறேன்.

இயக்குநர் அனுதீப்புக்கு தெலுங்கு தான் தாய் மொழி, அதனால் அவர் தெலுங்கில் தான் யோசிப்பார். பிறகு அதை தமிழுக்கு மாற்றம் செய்வோம். அதுவே புதிய அனுபவமாக இருந்தது. படம் வெளியான பிறகு நிச்சயம் இதுபோன்ற யோசனைகள் தென்னிந்திய சினிமாவுக்கே டிரெண்ட் செட்டிங்காக இருக்கும். இதுபோன்ற பாணியில் பெரிய பெரிய படங்கள் உருவாகும்.

தீபாவளிப் பண்டிகையில் தங்களது படம் வெளியாக வேண்டும் எல்லா நடிகர்களும் ஆசைப்படுவார்கள். கடந்த 20 வருடங்களாக தீபாவளியன்று புதிய படங்களை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த தீபாவளிக்கு எனது படம் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது முதல் பண்டிகை படம் என்று கூட சொல்லலாம். குடும்பத்தோடு தீபாவளிக்கு ஜாலியாக பார்க்க கூடிய ஒரு படமாக பிரின்ஸ் இருக்கும்.

தீபாவளியன்று கார்த்தி சாரின் ‘சர்தார்’ படமும் வெளியாகிறது. அந்த படத்தையும் ரசிகர்கள் பார்க்க வேண்டும். கார்த்தி சாருக்கும், இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கும் வாழ்த்துகள்.” என்றார்.