நடிகர் பிரபாஸ் பிறந்தநாள் : 230 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட்!

பிராந்திய நட்சத்திரம் என்ற நிலையில் இருந்து மாறி பிரபாஸ் அகில இந்திய நட்சத்திரமாக உயர்ந்து மிளிர்ந்துள்ளார். அவரது உயர்வையும் மதிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அவரது ரசிகர்கள் அவருக்கு அவரது பிறந்தநாளான இன்று 23.10.23 ஆம் தேதி அவரது உயரத்தைப் பறைசாற்றும் வகையில் 230 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட்டவுட்டை அமைத்துள்ளனர்.

சென்னையில் 23.10.1979-ல் பிறந்த நடிகர் பிரபாஸின் இயற்பெயர் பிரபாஸ் ராஜூ உப்பலபட்டி .இவர் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள். இவர் நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தன.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அதில் நாயகனாக நடித்த இவரது புகழும் வணிக மதிப்பும் பெரிய அளவிற்கு உயர்ந்து உச்சத்திற்குச் சென்றுள்ளது இவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பான்–இந்திய நட்சத்திரம் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் 44 வயதை அடைந்ததை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் சலார் நட்சத்திரத்தின் 230 அடி கட்–அவுட்டை அவரது ரசிகர்கள் அற்புதமாக அமைத்துள்ளனர்.

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட இந்திய நட்சத்திரமான ரெபெல் ஸ்டார் பிரபாஸின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் ரசிகர்கள் அமைத்துள்ள இந்த பிரமாண்ட 230 அடி கட்அவுட்
நாட்டிலேயே மிகப்பெரிய கட்-அவுட்டாக இருக்கும் என்று பேசப்படுகிறது.

கட்அவுட் கட்டும் பணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.