’டெலிவரி பாய்’ திரைப்பட விமர்சனம்

ராதிகா சரத்குமார் ,லியோ சிவக்குமார், பிரிகிடா சாகா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த் ,உதயதீப் மற்றும் பலர் நடித்துள்ளனர். நானி இயக்கியுள்ளார்.அமுதா லியோனி, லெனின் மாதேஸ்வரன் தயாரித்துள்ளனர்.

கோயம்புத்தூர் பகுதியில் இட்லி கடை வைத்து பிழைப்பு நடத்தும் ராதிகா சரத்குமாரின் மகன் தான் லியோ சிவகுமார்.வயதுக்கேற்ற துறுதுறுப்பு கலகலப்புடன் இருக்கிறார். அவர் ஒரு டெலிவரிபாயாக பொருள்களை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கிறார்.அவருக்கு காவல்துறை கனவு உண்டு, உடல் தகுதி இருந்தும் லஞ்சம் கொடுக்க முடியாமல் அவரது கனவு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.திடீரென்று அவரது அம்மா ராதிகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட, அவரை காப்பாற்றுவதற்காக துஷ்யந்திடம் இருக்கும் பணத்தை வழிப்பறி செய்து கொண்டு ஓடுகிறார். அம்மா குணமடைந்த பிறகு, தான் திருடிய பணத்தை துஷ்யந்திடம் மீண்டும் ஓப்படைக்க  அவரை சென்னைக்குத் தேடிச் செல்கிறார் லியோ சிவக்குமார்.ஆனால்அவர் வெளிநாடு சென்றிருப்பதாக அறிகிறார். பிறகு சென்னை வருவது அறிந்து மீண்டும் அவரைக் காணச் செல்கிறார். இங்கே வந்த பிறகு துஷ்யந்த் பெரிய உயிர் ஆபத்தில் சிக்கி இருப்பது தெரிகிறது .அது என்ன? அவரை அதிலிருந்து இவர் காப்பாற்ற என்னவெல்லாம் செய்கிறார் என்பதைப் பரபரப்பான ஆக்ஷன் திரில்லராகக் கூறுவது தான் ‘டெலிவரி பாய்’.

சிவா என்கிற பாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமார், இந்த படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் துரத்தல் காட்சிகளில் வியர்வை சிந்தி அதகளம் செய்துள்ளார்.ஒரு கதாநாயகனுக்கான நிறமோ தோற்றப்பொலிவோ இல்லை என்றாலும் அதை ஈடுகட்டும் விதத்தில் இயல்பான நடிப்பின் மூலம் தனது பாத்திரத்திற்கு நியாயம் செய்து பார்வையாளர்களை ஈர்க்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகா, படத்தின் முதல் பாதியை நகர்த்த உதவி இருக்கிறார். பின்பகுதி கதையில் ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியம் தருவதால் அவர் காணாமல் போய்விடுகிறார்.காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த், உதயா தீப் ஆகியோர் தங்கள் நடிப்பால் திரைக்கதை ஒட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.

பாட்டல் பாய்ஸ் சென்ற பெயரில் ரவுடித்தனம் செய்பவர்களாக கூலிப்படை கும்பலாக ஏழு நண்பர்களாக நடித்திருக்கும் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கெனவே பார்த்த சாயல் இருந்தாலும் அவர்கள் தங்கள் கொடூரங்களைக் காட்டி பயமுறுத்தியுள்ளார்கள். அசோக்குமார் ராஜ் – பிரசன்னா எஸ்.குமார் ஆகியோரது ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகளும், சேசிங் காட்சிகளும் மிரட்டல் ரகங்கள்.

சுந்தரமூர்த்தி.கே.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.ஆக்சன் காட்சிகளை கதை ஓட்டத்தின் தீவிரத்தை மேலும் உயர்த்தி பரபரப்பு கூட்டியுள்ளது பின்னணி இசை.
படத்தின் வேகத்துக்கு இடையூறு இல்லாமல் படத்தொகுப்பு செய்துள்ளார் படத்தொகுப்பாளர் ஆர்.வசந்தகுமார் .

எழுதி இயக்கியிருக்கும் நானி, தன்னைப் பாதித்த ஒரு சம்பவத்தைப் புதிய வடிவில் கையாண்டு, புத்திசாலித்தனமாக கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.

முழுக்க முழுக்க பொழுது போக்கு நோக்கில் இந்த ஆக்சன் படத்தை எடுத்திருக்கிறார்.படத்தின் பின்பாதியில் வரும் வன்முறைக் காட்சிகள் ஓவர் டோஸ் ஆக உள்ளன.

மொத்தத்தில், ‘டெலிவரி பாய்’ ஆக்சன் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.