நிஜ ஹீரோக்கள் போற்றப்பட வேண்டியவர்கள் : சத்யராஜ் பேச்சு!

அறிமுக இயக்குநர் தீரன் இயக்கியுள்ள படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ . இப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியான் சார்லி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை சி.ஆர் சலீம் தயாரிக்க, பிரசாத் எஸ்.என் இசையமைத்திருக்கிறார்.

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சத்யராஜ், சிபி, நீதியரசர் சந்துரு, திலகவதி ஐபிஎஸ், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன், நக்கீரன் கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இவ் விழாவில் நடிகர் சத்யராஜ் பேசும்போது,

“இன்று என் வாழ்க்கையில் பெருமையான நாள். ஏன்னா நிஜ ஹீரோக்களுக்கு மத்தியில் நிழல் ஹீரோ உட்காந்திருக்கேன். போற்றப்பட வேண்டியவர்கள் அவர்கள்தான். நிழல் ஹீரோக்களை பார்த்து கைத்தட்டுங்கள் விசிலடியுங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நிஜ ஹீரோக்களைதான் நாம் போற்ற வேண்டும். நிழல் ஹீரோக்களும் நீங்கள் வரவேற்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் பிழைக்க முடியும்.

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இது ஒரு குடும்ப விழா போன்று உள்ளது. இயக்குநர் தீரனுக்கு என்ன சந்தோஷம்னா, நீதியரசர் சந்துரு அவர்களே சர்ட்டிஃபிகேட் கொடுத்துட்டாங்க.. தீர்ப்புகள் விற்கப்படும் டைட்டில் ஓகே என்று சொல்லிட்டாங்க. படம் ரிலீஸ் ஆன பிறகு ஏதாவது பிரச்சினை வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. நான் மைக் முன்னாடி நின்னு 2 வருஷம் ஆயிடுச்சு. கொரோனா தாக்கத்தால எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியவில்லை. எஸ்ஏசி சார் கடின உழைப்பாளி. பெருந்தன்மையா சொல்லிட்டாங்க. கதைக்கேட்டதும் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது. ஆனால் சென்சார்ல மாட்டிக்குமோன்னு தோனுச்சு.. நக்கிரன் கோபால் தம்பியும் அதையே சொல்லவும்.. கொஞ்சம் சந்தேகம் வந்துருச்சு. ஏற்கனவே நமக்கு இதுல அனுபவம் இருக்கு..

பாரதிராஜா சார் இயக்கத்தில் நான் நடித்த வேதம்புதிது படத்திற்கு இந்த பிரச்சினை வந்தது. அந்தப் படத்தில் சீனையெல்லாம் கட் பண்ண சொல்லவில்லை. பெருந்தன்மையாக படத்தையே ரிலீஸ் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

படத்தில் பல்லக்கில் தூக்கி வரும் காட்சி, சில வசனங்களையும் தூக்கச் சொன்னார்கள். இந்த விஷயம் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் சாருக்கு தெரியவர, என்னப் பிரச்சினை இந்தப்படத்தை நான் பார்க்க வேண்டும் என்றார். அவர் கூறிய அன்று மாலையே படம் அவருக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. பக்கத்திலேயே அமர்ந்து பார் என்றார்.

தோட்டத்தில் இருந்து ஏகப்பட்ட ஐட்டம் இன்டர்வவலின் போது என்ன சாப்பிடுறீங்க என்று கேட்டேன். உஷ்.. ஒன்னும் வேண்டாம் உட்காரு என்றார். அப்புறம் பார்த்தால் டீ காஃபி பலகாரம் அதுஇதுன்னு ஏகப்பட்ட ஐட்டம் வருது.. அதையெல்லாம் பார்த்துவிட்டு எப்படி… என்று என்னிடம் கேட்கிறார். அவர் தோட்டத்தில் இருந்தே தயார் செய்து கொண்டு வருமாறு கூறியிருக்கிறார். அப்போது தெரியவில்லை படம் பார்க்கும் போது கால் மேல் கால் போட்டு பார்த்தார். இன்டர்வெலின் போது காலை எடுத்து விட்டார். நான் பேசும் போதும் காலை எடுத்துவிட்டார். இருட்டான பிறகுதான் கால் மேல் கால் போட்டார். அப்போது அதற்கான அர்த்தம் தெரியவில்லை. அவர் இறந்த பிறகு நடந்த இரங்கல் கூட்டத்தில் தங்கவேலு சார் அவரது பெருமைகளை கூறினார். முத்தம் கொடுத்தார் அப்போதுதான் எம்ஜிஆர் அண்ணன் பொதுவெளியில் கால் மேல் கால் போட்டு யாராவது பார்த்துள்ளீர்களா என்றார். அப்போதுதான் அவருடைய அடக்கம் எனக்கு தெரிந்தது.

படத்தைப் பார்த்து முடித்ததும் எனக்கு முத்தம் கொடுத்தார். அதற்குள் பாரதிராஜா சார் வந்துவிட்டார். இந்தப் படத்தில் என்ன பிரச்சினை? நீ ரிலீஸ் தேதியை அறிவித்துவிடு படம் ரிலீஸ் ஆகும் என்றார்.

பல படங்களில் வில்லனாக நடித்தேன். வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தேன். அதற்கு ஆப்பு வந்தது, ஆனால் வாத்தியார் காப்பாற்றிவிட்டார். அடுத்து பெரியார் படத்தில் நான் பேசிய வசனங்கள் எல்லாமே பெரியார் பேசியதைதான் பேசினேன். அதற்குப் பெரிய ஆர்ப்பாட்டம். அப்போது கலைஞர் முதல்வராக இருந்தார். அவரிடம் போய் பிரச்சினை என்று நின்றோம். அவரோ பெரியாரே பிரச்சினையில்தான் வளர்ந்தார். அவர் படத்திற்கு எப்படி பிரச்சினை இல்லாமல் இருக்கும்? போ பார்த்துக்கொள்ளலாம் என்றார். சர்டிஃபிகேட்டும் வாங்கியாச்சு.. அந்தப் படத்தை காப்பாற்றிக்கொடுத்தது நீதியரசர் சந்துரு சார்தான். அதில் ஒரு வசனம் கூட கட் பண்ணாமல் பெரியார் படம் வந்தது என்றால் அதற்கு நீதியரசர் சந்துரு சார்தான் காரணம்.

இவ்ளோ நடந்திருக்கே… இந்தப் படத்தில் நடித்துவிட்டு ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்று இயக்குநரிடம் கேட்டேன்.. அவர் கவனமாக படத்தை எடுத்து சென்சார் சர்டிஃபிகேட்டும் வாங்கியாச்சு.

சென்சார் வாங்கினாலும் பத்தாது.. அதுக்கப்புறம் ஒரு சென்சார் வச்சுருக்காங்க.. ஜெய்பீம் வாங்குது பாத்தீங்களா… பல லேயர்களாக சென்சார் உள்ளது. அந்த மாதிரி இந்த படத்துக்கும் சென்சார் வரும்.. என்னல்லாம் பேசலாம் என்று இயக்குநரிடம் கேட்டேன்… இதையெல்லாம் பேசுங்கள்.. இதையெல்லாம் பேசாதீர்கள் என்றார். அதையெல்லாம் கோபால் சார் பேசிவிட்டார். இப்போ சமூக நீதி சென்டிமென்ட். இது ஒரு பரபரப்பான படம்.. எந்த சென்டிமென்ட் ஜெயிக்குதோ அந்த சென்டிமெண்டில் படம் வர தொடங்கும்.

சின்னத்தம்பி படத்தின் தாலி சென்டிமென்ட் ஜெயித்தது போல். இப்போது சமூக நீதி சென்டிமென்ட் படங்கள் ஜெயிக்கிறது. பெரியார் படம், அம்பேத்கர் படம் எல்லாம் சூப்பர் ஹிட்.. சந்துரு அய்யாக்கிட்ட ஏகப்பட்ட கதைகள் இருக்கு.. அதையெல்லாம் வணிகரீதியா படமாக்கலாம்.. ஓடி ஓடி உழைக்கனும் பாடல் வரிகளை போல கற்பிக்க வேண்டும்.. சமூக நீதி படங்களாக இருந்தால் பயனுடையதாக இருக்கும்” என்றார்.

படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்த படக்குழு, இப்படம் வரும் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.