‘நினைவெல்லாம் நீயடா ‘ விமர்சனம்

பிரஜின், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, ரோஹித், ரெடின் கிங்ஸ்லீ, மதுமிதா, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆதிராஜன் இப்படத்தின் கதையை எழுதி இயக்கி உள்ளார்.இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். லேகா தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்போது வருகிற படங்களில் எல்லாம் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல் காதல் இருக்கிறது. ஆனால் முழு நீள காதல் கதைகள் என்று குறைவாகவே வருகின்றன. இப்படம் ஒரு முழு நீளக் காதல் கதையாக வந்துள்ளது. அதுவும் பள்ளிப்பருவத்துக் காதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது.

பள்ளியில் படிக்கும் போதே கௌதமும் மலர்விழியும் காதலிக்கிறார்கள்.கௌதம் தனது காதலை மலர்விழியிடம் கடிதம் மூலம் கூறுகிறான். மலர்விழியோ தனது எண்ணத்தை கடிதத்துடன் காதலனுக்கு விருப்பமான இசைக்கருவியுடன் இணைத்து அளிக்கிறாள்.

ஆனால் கௌதமிற்கு மலர்விழி வழங்கிய இசைக்கருவி மட்டும் பரிசாகக் கிடைக்கிறது. காதலுக்கான பதில் கிடைக்கவில்லை. அவ ள் தன்னைக் காதலிக்கிறாள் என நினைத்துக் கொள்கிறான் கௌதம். இடையில் சில ஆண்டுகள் தொடர்பில்லை.அவளோ அமெரிக்கா சென்று விட்டாள். கௌதமின் நண்பர்களும், வகுப்புத்தோழர்களும் வெளிநாட்டிற்குச் சென்ற மலர்விழி உன்னையா இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கப் போகிறாள் அங்கு யாரையாவது திருமணம் செய்து கொண்டு, கணவன் குழந்தைகள் என்று செட்டில் ஆகி இருப்பாள் என்கிறார்கள்.அதனால் நீயும் திருமணம் செய்து கொள் என வற்புறுத்துகிறார்கள். அவனது அன்பிற்காக ஏங்கும் உறவுக்காரப் பெண்ணிற்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகும் மலர்விழியை மறக்க இயலாமல் கௌதம் தவிக்கிறான்.இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து மலர்விழி கௌதமைத் திருமணம் செய்து கொள்வதற்காக சென்னைக்கு வருகிறாள். மலர்விழியின் காதல் வென்றதா? திருமணமான கௌதம் தன் காதலியை ஏற்றுக் கொண்டானா? என்பதுதான் இப்படத்தின் மீதிக் கதை.

நடிகர் பிரஜின் இதில் காதலுக்காக ஏங்கும் நாயகனாக நடித்திருக்கிறார்.ஆனால் மன உணர்வுக்கு ஏற்ற திரைத்தோற்றம் அவருக்கு குறைவாகவே உள்ளது என்று தோன்ற வைக்கிறது.

கதையின் நாயகியாக வரும் மனிஷா யாதவ் குறை இல்லாத நடிப்பைக் கொடுத்துள்ளார். அதேபோல் யுவ லட்சுமியும் சினாமிகாவும் நடிப்பின் மூலம் மனதில் பதிகிறார்கள்.

ரெடின் கிங்ஸ்லீ சில இடங்களில் பஞ்ச் வசனங்கள் பேசி சிரிக்க வைக்கிறார்.இதுவரை நகைச்சுவை நாயகியாக வலம் வந்த மதுமிதா முதன்முறையாக இப்படத்தில் முழு நீளக் குணச்சித்திர முகம் காட்டி ரசிகர்களைக் கவர்கிறார்.இப்படத்தில் மனோபாலா, இயக்குநர் ஆர். வி.உதயகுமார், பி எல் தேனப்பன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இரண்டாம் பாதியில் மலர்விழியாக வரும் கதாபாத்திரம் சொல்லும் உண்மை.. ரசிகர்களை அதிர்ச்சியில் உறையச் செய்கிறது.

சினிமாவில் காதலுக்கு ஆயிரக்கணக்கான விளக்க உரைகள் எழுதி இருக்கிறார்கள். இயக்குநர் ஆதிராஜன் தன் பங்கிற்குக் காதலுக்குப் புதிய பதவுரை எழுதியுள்ளார்.
காதலை இப்படியும் சொல்லலாம் எள்கிற புதிய அணுகுமுறையை வெளிப்படுத்தி இருக்கும் அவரைப் பாராட்டலாம்.

படத்தின்முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத முடிச்சும் விறுவிறுப்பும் இருப்பதால் ரசிக்க முடிகிறது.

இது இசைஞானி இளையராஜாவுக்கு 1417 வது படமாம். அவரும் வழக்கம் போல் தன் பங்களிப்பை நிறைவாகச் செய்துள்ளார்.பாடல்கள் மனதைத் தொடும் ரகங்கள்.

மொத்தத்தில்  நினைவெல்லாம் நீயடா படம் காதல் பட ரசிகர்களைக் கவரும்.