நீட் தேர்வு எனும் அநீதி! – தங்கர் பச்சான்

நீட் தேர்வு பற்றி நம் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று ‘நீட்தேர்வு எனும் அநீதி ‘ என்கிற தலைப்பில் இயக்குநர் தங்கர்பச்சான் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மாணவர்களே உங்களின் எதிர்ப்பை 50 பைசா செலவில் உடனே எழுதி அனுப்புங்கள்.

கல்வியை மட்டுமே கற்றுக்கொண்டு வாழ்வின் அனைத்து வசதிகளையும்,உயர் பதவிகளையும்,பொறுப்புகளையும் சிலர் மட்டுமே காலம் காலமாக  அனுபவித்தார்கள். இப்பொழுத்தான் நாட்டின் முக்கால் பகுதி மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பும் வசதிகளும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தக்கல்விகூட முழுமையான தரமான கல்வி அல்ல. ஏழைகளுக்குத்தரப்படும் தரமற்ற கல்வியாகவே உள்ளது. இந்நிலையில் உயர் கல்விக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக நீட் (NEET) எனும் தகுதித்தேர்வை உருவாக்குகிறோம் என இந்திய ஒன்றிய அரசு உருவாக்கியது.

பணவசதி படைத்தவர்கள் மட்டும் பணம் கொடுத்து உயர்கல்வியை விலைபேசி உயர்பதவிகளை அடைந்து விடுகின்றார்கள் எனும் காரணம் கூறித்தான் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால் இதன்மூலம் உயர்கல்வியை இழந்து வருபவர்கள் முதல் தலைமுறைக்கல்வியை இன்னும் கடக்காத வறுமை கோட்டிற்குக்கீழே வாழும்  கிராமம் மற்றும் ஏழை மாணவர்கள்தான்.

கல்வி என்பது நம்நாட்டில் ஒரு பெரும் வணகமாகிப்போன நிலையில் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே பாதுகாப்பு தமிழ்நாடு அரசு மட்டும்தான். இவ்வாண்டு முதல் மருத்துவக்கல்விக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய அரசு பதிலளிக்காத நிலையில் தமிழக அரசு நீதியரசர் A.K.Rajan அவர்களின் தலைமையில் எட்டுப்பேர் கொண்ட குழு ஒன்றினை நியமித்துள்ளது. பொது மக்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் என தமிழகத்திலுள்ள குடிமக்கள் யாராக இருந்தாலும் எதற்காக நீட் தேர்வை எதிர்க்கிறோம் எனும் காரணங்களை உடனடியாக எழுதி பின் வரும் முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் (EMAIL) அனுப்ப வேண்டுகிறேன்.

ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதியரசர் பானுமதி அவர்கள் 15 பைசா அஞ்சல் அட்டையில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றக்கு மதிப்பளித்து அதன் அடிப்படையில் வழக்கு ஒன்றில் நீதி வழங்கினார் எனும் செய்தியை இந்நேரம் நம் மாணவர்கள் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

“இது மக்களால் உருவாக்கப்பட்ட மக்களாட்சி. இங்கே அனைத்துக் குடி மக்களுக்கும் ஒரே மாதிரியான சமமான நீதி கிடைக்க வேண்டும். இத்தனைக்காலங்கள் எங்களுக்கு கல்வியைத்தராமல் அதுவும் பணக்காரர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி என தரம் பிரித்து வழங்குகிறீர்கள். அனைவருக்கும் சமமான தரமான ஒரே கல்வியை வழங்காமல் எவ்வாறு எங்களுக்குத் தகுதித் தேர்வை நடத்துவீர்கள். முதலில் அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வியை எங்களுக்கு வழங்குங்கள். அதன்பின்  தகுதிதேர்வை (NEET) நடத்துங்கள். அதுவரை நீட் தேர்வு நடத்துவது எங்களுக்கு இழைக்கும் அநீதி” என அனைத்து மாணவர்களும் உடனே 50 பைசா அஞ்சல் அட்டை வாங்கி எழுதி அனுப்புங்கள். எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். நமக்கான நீதி கிடைக்க உடனே செயல் படுங்கள்.

கடிதம் அனுப்ப கடைசித்தேதி: 23.06.2021

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:

நீதியரசர் மாண்புமிகு A.K.ராஜன் குழு
மருத்துவக்கல்வி இயக்குநரகம்,
(மூன்றாம் தளம்)
கீழ்ப்பாக்கம்,
சென்னை- 600010

மின்னஞ்சல் (EMAIL ID): neetimpact2021@gmail.com