‘நீளிரா’ திரைப்பட விமர்சனம்

நவீன் சந்திரா, சனத், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், விது ,கஜராஜ் ,சித்து குமரேசன், நவயுகா, சுவாதி கிருஷ்ணன் ,நமசிவாயம் தம்பி பிள்ளை ,கயல் வின்சென்ட் ,ரோஹித் கொகாடே நடித்துள்ளனர். சோமீதரன் எழுதி இயக்கியுள்ளார். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார். கே. இசையமைத்துள்ளார் .கலை இயக்கம்: மார்ட்டின்.
இணைத் தயாரிப்பு: ரானா டகுபதி -கல்யாண் சுப்பிரமணியன்,

தயாரிப்பு :ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் .

நீளிரா என்றால், நீள் + இரா அதாவது நீண்ட இரவு என்கிற பொருள்படும்.

இலங்கையில் போர்ச்சூழல் பின்னணியில் நடக்கும் இந்தக் கதை என்ன? இந்தத் திரைப்படத்தில் இலங்கையில் வாழும் சம்பந்தப்பட்ட கதை மாந்தர்களுக்கு வாழ்வா வாழ்வா சாவா என்று நினைக்கிற அளவிற்கு நெருக்கடியான தருணங்களைக் கொண்டு வருகிறது.

கணங்கள் யுகங்களாக நீளும் பரிதவிப்புடன் அந்த நெருக்கடிகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? அதன் விளைவு என்ன? என்பதைப் பற்றிப் பேசும் படியான 130 நிமிடங்கள் கொண்ட படம் தான் ‘நீளிரா’.

இலங்கையில் இந்திய ராணுவம் அமைதிப்படை என முகாமிட்டிருந்த நேரம். அங்கு அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல் வலுத்து வந்த ஒரு காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒரு திருமணம் நடக்க வேண்டும் பல்வேறு கனவுகளுடன் உற்றார் உறவினரைக் கூட்டி வெளிப்படையாக, சுதந்திரமாகத் திருமணம் நடக்க வேண்டிய குடும்பத்தில் ஒரு வீட்டுக்குள்ளேயே நெருக்கமான குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் நடத்த முடிவு செய்கிறார்கள். அதற்கு இந்திய அமைதிப்படையிடமும், இலங்கை ராணுவத்திடமும் அனுமதி வாங்க வேண்டும். அப்படி அனுமதி பெற்றே நடத்துகிறார்கள். ஆனால் அந்த வீட்டை இந்திய ராணுவக்குழு சுற்றி வளைக்கிறது.அவர்கள் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டியவர்கள் தவறுதலாக அங்கே வந்திருக்கிறார்கள். ஆனால் கதவடைத்து உள்ளே விளக்கு எரியும் அந்த வீட்டின் அமைதி அவர்களைச் சந்தேகம் கொள்ள வைக்கிறது. ஒரு கட்டத்தில் வீட்டுக்குள் இந்திய இராணுவத்தினர் நுழைந்து அந்தக் குடும்பத்தினரை மிரட்டுகிறார்கள். அவர்களால் அந்தக் குடும்பம் பெரிய நெருக்கடிக்குள்ளாகிறது .
அதே நேரம் போராளிகள் குழுவும் வீட்டை சுற்றிவளைத்து இந்திய அமைதிப்படையினரைத் தாக்க நினைக்கிறது. முடிவு என்ன என்பதுதான் திக் திக் நிமிடங்களும் பரபரப்பும் பதற்றங்களும் கொண்ட101.41 நிமிடங்கள் கொண்ட ‘நீளிரா’ படத்தின் மீதிக் கதை.  

எப்படி நடக்க வேண்டிய திருமணம் இப்படி நடக்கிறதே என்ற ஆதங்கத்துடன் குடும்ப உறுப்பினர்கள் அந்தத் திருமணத்திற்குத் தயாராவதுடன் படம் தொடங்குகிறது.குறைந்தபட்ச உறுப்பினர்களைக் கொண்டு எப்படி ஒரு கல்யாணம் செய்வது என்பதைக் காட்சிகள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர். ராணுவத்தினர் வீட்டுக்குள் நுழைந்த பின்னே கடக்கும் ஒவ்வொரு வினாடியும் நம்மை பதற்றத்துக்கு ஆளாக்குகிறது. போர்ச் சூழலில் வாழும் மக்களை,அவர்களது  நெருக்கடிகளை, துன்பங்களை, துயரங்களை ,அவர்களது மன அழுத்தங்களை இந்த ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு திரைக்கதையாக்கி நம்மை அவர்கள் உணர்வுகளில் ஒன்ற வைத்துள்ளார் இயக்குநர் சோமீதரன். படத்தில் அந்தப் புது மணப்பெண் மாப்பிள்ளை தாய் தந்தை உற்றார் உறவினர் என்று அனைத்து உறுப்பினர்களும் பெயர் தெரியாத முகங்களும் பார்ப்பவர் மனதில் பதிகின்றன. அவர்கள் அனைவருமே நடித்துள்ளார்கள் என்று நம்ப முடியாத அளவிற்கு அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளார்கள்.

மணப்பெண்ணாக சிந்து குமரேசன் வருகிறார். கயல் வின்சென்ட் நல்லதொரு பாத்திரத்தில் தோன்றுகிறார். அந்த வீட்டுக்குள் குடும்ப உறுப்பினர்களில் போரின் அழுத்தத்தால் மன அழுத்தத்துக்கு உண்டான ஒரு பாத்திரம் ஒரு திருப்புமுனையாக அமைகிறது. இந்திய ராணுவத்தின் கேப்டன் , அவருக்குக் கீழே உள்ள அதிகாரிகள், அவர்களுக்கும் நடக்கும் ஆணவ மோதல்கள் போன்றவற்றையும் காட்சிகள் ஆக்கி உள்ளார் இயக்குநர். பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நடக்கின்றன, அதுவும் ஒரு வீட்டுக்குள்ளேயே இந்தப் படத்தின் கதை நகர்ந்தாக வேண்டும் என்கிற நெருக்கடியைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற ஒளி அமைப்பின் மூலம் உரிய கோணங்களையும் கொண்டு ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபன் .படத்தின் திக்திக் நிமிடங்களுக்கு உரிய பின்னணி இசை மூலம் உயிர்ப்பு சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் கே. படத்தில் ஒரு வினாடி கூட தொய்வு ஏற்படாமல் படத்தொகுப்பு செய்துள்ளார் ராதா ஸ்ரீதர் .

அதிகம் வசனங்கள் இல்லாமலேயே பரபரப்பைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளார் இயக்குநர் . அதே நேரம் உலகில் போர் எப்படி நடக்கிறது ?அதை இயக்குபவர் யார் ?அமைதிக்காக போர் என்கிறீர்கள் போர் என்று வந்த பிறகு அமைதி எப்படி வரும் ? போன்று பேசப்படும்
வசனங்கள் மின்னல் பொறிகளாகத் தெறிக்கின்றன.

மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான படமாக மட்டுமல்ல போர்ச் சூழலில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் கதையிலிருந்து ஓர் இழையைப் பிரித்து நம் கண் முன்னே காட்சிகள் ஆக்கி உள்ள இயக்குநரின் திறம் பாராட்டத்தக்கது. நீளிரா ஒரு புதிய திரைப்பட அனுபவம்.