‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்பட விமர்சனம்

நிவின் பாலி, மமிதா பைஜு,சங்கீத் பிரதாப் ,ரோஷன் ஷாநவாஸ் , ஷ்யாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா, ஷமீர் கான்,மீனாட்சி ரவீந்திரன், தங்கம் மோகன்,வெட்டுக்கிளி பிரகாஷ், பிந்து பணிக்கர் நடித்துள்ளனர்.

இயக்குநர் கிரீஷ் ஏ.டி. இயக்கியுள்ளார்.அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.விஷ்ணு விஜய் இசை அமைத்துள்ளார்.படத்தொகுப்பு – ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்,கலை இயக்கம் – ஆஷிக் எஸ்,தயாரிப்பாளர்கள் – திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில், ஷ்யாம் புஷ்கரன்.

இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள் அனைத்தும் எளிமையானவை .எளிய விஷயங்களின் அருமை யாருக்கும் தெரியாது.அப்படி எளிமையான அம்சங்களை இணைத்து கதை பின்னி உருவாகி இருக்கும் படம் தான் இந்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

படத்தின் கதை என்னவென்றால்,ஆஷ்லி  என்கிற மமிதா பைஜு,தனது பெற்றோர் , சகோதரன் ஆலன் ஆகியோருடன் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு புதிய வீட்டிற்குக் குடியேறுகிறார்கள்; அந்த வீடு ஜஸ்டினின் அதாவது நிவின் பாலி வீட்டிற்கு நேர் எதிரே அமைந்துள்ளது. .ஜஸ்டின் அந்தப் பகுதியின் மக்கள் சேவகனாக,அனைவராலும் விரும்பப்படுபவர். அவர் ஒரு கேட்டரிங் தொழிலை நடத்தி வருகிறார். தனதுதம்பி ஜோயலின் (சங்கீத் பிரதாப்) குறும்படங்களையும் தயாரித்து வருகிறார்.

தான் வாழ்ந்த வீட்டை விட்டு வந்ததில் சோகத்தில் இருக்கிறார் ஆஷ்லி.தனது புதிய வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும்போது,.ஜன்னல் வழியே மின்னல் தரிசனம்.​​தன்னைவிட சுமார் பத்துவயது மூத்தவரான ஜஸ்டின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனாலும் கண்டிப்பான மமிதாவின் பெற்றோர் ,அதனால் எழும் சிக்கல்கள் தடையாக உள்ளன. அவற்றைத் தாண்டி, அவர்களால் மகிழ்ச்சியானதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிந்ததா? என்ற கேள்விக்கான விடையே இப்படம்.

கிரீஷ் ஏ.டி.-யின் திரைப்படங்கள் யதார்த்தமானவை, மண்ணின் மணமுள்ளவை. அது மட்டுமல்ல இவர் வழக்கம் போன்ற நாயகனை மையம் கொள்ளும் பிரதான பாத்திரங்களை மட்டும் நம்பாமல் துணைக் கதாபாத்திரங்கள் அவர்கள் வாழும் சூழல் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்பவர்.இந்த நுணுக்கமான விவரணைகளே அவரது படங்களை மற்றவற்றிலிருந்து தனித்து வெளிக்காட்டுகின்றன.

நிவின் பாலியின் ‘ஜஸ்டின்’ கதாபாத்திரம் ஆழ்ந்த மனவேதனையின் இருளைக் கடந்து வந்ததால் தான், மற்றவர்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் அவர் உதவி,உறுதுணையாக இருக்கிறார். மமிதாவின் ‘ஆஷ்லி’ கதாபாத்திரம் இளமை மகிழ்ச்சி துள்ளல் இயல்புடையது; தனது காதலை வெளிப்படுத்தத் தயங்காதவர். இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் இருந்தாலும், அவர்களின் காதல் இயல்பானதாகவே இருக்கிறது; எந்த இடத்திலும் அது மிகையாகவோ திணிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை.அவர்களுக்குள் பரஸ்பர புரிதலில் காதல் மலர்வதை ஒரு பூ மலர்வதைப் போல் அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.அந்த நல்லுணர்ச்சியை இருவரும் தங்கள் முகபாவனைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜஸ்டின் மற்றும் ஆஷ்லி இருவரும் மிகை உணர்ச்சி கொண்டவர்கள் அல்ல. அவர்கள் வாழ்க்கையின் அனைத்தையும் உளப்புரிதலோடு பகிர்ந்துகொள்பவர்கள், ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பவர்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்க்கையின் இருள் ஒளிப்பக்கங்களை அறிந்தவர்கள்.இந்தச் சூழலில் அவர்களின் காதல் கை கூடுவதற்கு வயது வித்தியாசம், ஆஷ்லியின் கண்டிப்பான பெற்றோர் மற்றும் படிப்பு எனப் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள் .

நிவின் பாலியின் இயல்பான, மென்மையான நடிப்பு ஜஸ்டின் கதாபாத்திரத்தை மிகவும் ஈர்ப்புள்ளதாக மாற்றுகிறது.நடுத்தர வர்க்கத்து உள்ளம் தங்களைப் பிரதிபலிப்பாக உணரக்கூடிய பாத்திரம் அவருடையது.அவர் ஏற்றுள்ள ஜஸ்டின் பாத்திரம் மூலம் தனது முதிர்ச்சியான அணுகுமுறையால் ஆஷ்லியின் வயது வேறுபாட்டைச் சமன்செய்கிறார்.

கேரள வரவுகளில் புற அழகை நம்பாமல் நடிப்பழகை வெளிப்படுத்தி வருபவர் நமீதா பைஜு.வரிசையாக வருகிற படங்கள் அதை மெய்ப்பிக்கின்றன.வயது வித்தியாசம் கொண்ட காதலில் வரும் ‘சின்ன பெண், இளையபெண்’ என்பத்தைத் தாண்டி, ஆஷ்லிக்கு ஒரு தனித்துவ நிறத்தை மமிதா வழங்கியுள்ளார்; அவரது நடிப்பு படத்தின் உணர்வுப்பூர்வமான பூரணம் என்று உணர வைக்கிறது.

ஆனால், இந்தத் திரைப்படம் ஜஸ்டின்- ஆஷ்லி இருவரும் இணைவார்களா என்பதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. துயரம், அச்சம், சமூக எதிர்பார்ப்புகள் , சமூக நடைமுறைக்கேற்ப  பொருந்துவதில் உள்ள  நிர்ப்பந்தங்கள் பற்றியும் மனிதர்கள் தங்களைச் சுற்றி எழுப்பும் தடைகளையும் இப்படம் அலசுகிறது.

இப்படத்தில் வருகிற ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. உளத்தடைகள் இருக்கின்றன.
அப்படி வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சின்ன சின்ன உணர்வுப்பூர்வமான போராட்டங்களை, தான் சித்தரித்த பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

ஆவேஷம் புகழ் ரோஷன் ஷானவாஸ், ஷ்யாம் மோகன் மற்றும் பல விசித்திரமான துணைக் கதாபாத்திரங்கள் அவை இயங்கும் விதம் போன்றவை தொடர்ந்து நமக்கு நல்லதொரு நகைச்சுவை விருந்தாகின்றன.அந்தப்  பாத்திரங்கள் சின்னச்சின்ன அசைவில் கூட நகைச்சுவைத் தோரணங்களாக வண்ணம் காட்டுகின்றன.

ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபுவின் கேமரா கேரள மண்ணின் பின்புலத்தையே ஒரு கதாபாத்திரமாக நமக்கு மாற்றிக் காட்டுகிறது.

‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ நகைச்சுவை முலாம் பூசிய ஒரு காதல் கதைக்கு எளிய தருணங்களைத் தாங்கிப்பிடிக்கும் வகையில் விஷ்ணு விஜய் அமைத்துள்ள இசை அமைந்துள்ளது.

‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தின் வெற்றியாக அமைந்திருப்பது அதன் எளிமை தான். அந்த எளிமைக்கு எளிமையாகச் சுரம் பிரித்து இழை பிரித்துக் காட்சிகளும் இசையும் நம்மிடம் வர்ணஜாலம் காட்டுகின்றன.

ஜஸ்டின் மற்றும் ஆஷ்லி இடையே மலரும் ஒரு காதல் கதை இருந்தாலும் சுற்றியுள்ள அனைத்துப் பாத்திரங்களுக்குமான இடத்தையும் உணர்வுகளையும் இந்தப் படம் பிரதிபலிக்கத் தவறவில்லை.

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் அது விளைவிக்கும் குதூகலத்தால் தங்களை எடை குறைந்தவர்களாக உணர்வார்கள்.அந்த அளவிற்கு இனம் புரியாத ஓர் உணர்வு ரசவாதத்தைச் செய்கிறது இந்தப் படம்.