‘பொன்னியின் செல்வன் – 2’ விமர்சனம்

அனைவருக்கும் தெரிந்த ஏராளமான வாசகர்களால் படிக்கப்பட்ட ஒரு பிரபலமான படைப்பைத் திரைப்படமாக உருவாக்குவது என்பது பல்வேறு சவால்களுக்கும் கேள்விகளுக்கும் இடம் அளிக்கும்.
எழுத்து வடிவம் வேறு திரை வடிவம் வேறு என்பதைப் புரிந்து கொண்டு திரைப்படத்தில் செய்யப்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரம் பிரபலமான கதை திரைப்படமாக எடுக்கும் போது பல சுவாரசியங்களை இணைக்க வேண்டும். காட்சிப்படுத்தும் கலையை வெளிப்படுத்த வேண்டும். இப்படி அனைத்தையும் உணர்ந்து திரைக்கதை உருவாக்கி சிறந்த காட்சி இன்பத்தை தரும் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கி அளித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் மணிரத்னம்.

கமலின் கம்பீரக் குரலில் முன் கதைச் சுருக்கமாக முதல் பாகத்தின் கதையைப் பற்றிக் கூறிவிட்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தொடங்குகிறது.வானில் தோன்றும் தூமகேது, சோழ மன்னர்களில் யாருக்குப் பாதகமாய் இருக்கப்போகிறது? பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் கொல்ல நினைக்கும் பொன்னியின் செல்வனான அருண்மொழி வர்மனாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் ஊகத்தையும் எழுப்பி முடிந்தது பொன்னியின் செல்வனின் முதல் பாகம்.

அருண்மொழி வர்மன் இறந்துவிட்டான் என்று மக்கள் மத்தியில் பரபரப்பான செய்தியாகப் பரவுகிறது. அச்செய்தி சுந்தர சோழனின் குடும்பத்தில் தாங்கமுடியாத துயரத்தையும், சோழநாட்டில் குழப்பத்தையும் உண்டாக்குகிறது.
ஆனால் அருள்மொழி வர்மன் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறான். இந்த ரகசியம், சுந்தர சோழனின் குடும்பத்துக்கும் எதிரிகளான பாண்டிய ஆபத்துதவிகளுக்கும் தெரியவருகிறது. அவனை மீட்க ஆதித்த கரிகாலன், குந்தவை உட்பட சோழ அரச குடும்பம் திட்டமிட்டுக் களம் இறங்குகிறது. தேடுதல் அணியில் வந்தியத் தேவனும் முன் இருக்கிறான்.அதே வேளை
சோழ குலத்தை அழிக்கச் சூளுரைக்கும் நந்தினியின் உதவியுடன் பாண்டிய ஆபத்துதவிகள் சோழ தேசத்துக்குள் ஊடுருவிக் களமிறங்குகிறார்கள்.

நந்தினி உண்மையில் யார், அவளது வன்மத்தின் பின்னணி என்ன? அவளின் சபதம் என்ன? சுந்தர சோழன் குடும்பத்திற்கு என்னவானது? பாண்டிய ஆபத்துகளை சோழர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? இப்படி எழும் கேள்விகளுக்கு உரிய விடைகள் சொல்வதுதான் இரண்டாம் பாகம்.

ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் அனைவருக்கும் அவர்களது நட்சத்திரத்தை பார்ப்பவர் மனதில் பதியும்படி செதுக்கியிருக்கிறார். அனைத்தையும் கடந்து கண் முன் தெரியும் இரு பெரும் குணச்சித்திரங்களாக ஆதித்யகரிகாலனாக வரும் விக்ரமும் ,முந்தி முதலிடம் பிடித்தார்.அவருக்கு சமமாக நெஞ்சுக்குள் எரியும் கனலை உள்ளுக்குள் மறைத்து வைத்து வெளிப்படுத்தும் பழி வாங்கும் குணம் உள்ள பெண்ணாக நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாராய் வெளிப்படுத்தி உள்ள நடிப்பு கதாநாயகனின் நடிப்புக்கு இணையானது.

சினிமா என்பது காட்சி ஊடகம் ,காட்சிகள் தான் பேச வேண்டும் பாத்திரங்கள் பேசிக் கொண்டிருந்தால் காட்சி இன்பம் அளிக்காது.இதை உணர்ந்து அளவான வசனங்கள் பேசப்படுகின்றன.

திரையரங்கில் மட்டுமே பார்த்தால் திருப்தி வரும் வகையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட காட்சிகளை தனது ஒளிப்பதிவின் மூலம் ஓவியமாகச் செதுக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.அரங்கமைப்புகளின் பிரம்மாண்டங்களை காட்டும் தோட்டா தரணியின் கற்பனையும் கைவண்ணமும் படத்திற்குப் பின்புலம் மட்டுமல்ல பெரிய பலமும் கூட. ஏ ஆர் ரகுமான் தனது பின்னணி இசை மூலம் படத்தின் தரத்தை மேலும் செழுமைப் படுத்தி உள்ளார்.
இப்படி நடிப்புக் கலைஞர்களாகட்டும் தொழில்நுட்பக் கலைஞர்களாகட்டும் முன்னணி முகங்களை துணைக்கு வைத்துக் கொண்டு தனது பரிவாரங்களுடன் இந்த படைப்பைத் தந்து வெற்றி பெற்றுள்ளார் மணிரத்னம்.
இப்படிப்பட்ட பெரிய படைப்பிற்கு ஆதார பலமாக லைகா புரொடக்ஷன்ஸ் அமைந்தது ஒரு நல்ல வாய்ப்பு.

மொத்தத்தில் ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 2 படம் பார்ப்பவர்களுக்குப் பிரம்மாண்ட தரிசனம்.